மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்திருக்கும் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.
இன்று கோலாலம்பூர்- மஸ்ஜித் இந்தியா பகுதியில் இருக்கும் மினாரா சிட்டி ஒன் குடியிருப்பில் இருக்கும் மனிதநேய சொந்தங்கள் ஏற்பாடு செய்த இஃப்தார் ஒன்றுகூடலில் பங்கேற்றார்.
இது தமிழ்நாட்டிலிருந்து தொழில் மற்றும் வேலைக்காக வந்திருப்போர் அதிகமானோர் தங்கியிருக்கும் குடியிருப்பாகும்.
அவருடன் மஜக துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷாவும் வருகை தந்தார்.
இஃப்தாருக்கு பிந்தைய கலந்துரையாடலில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று உரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது…
புனித ரமலான் மாதம் நன்மையான செயல்பாடுகள் நிறைந்த மாதமாகும்.
நமது வீடுகள் எங்கும் இறைமணம் கமழ்கிறது. பள்ளிவாசல்கள் மக்களால் நிறைகிறது.
நரகம் பூட்டப்பட்டு, சைத்தான்கள் விலங்கிடப்பட்டு, சொர்க்கத்தின் வாசல்கள் நல்லோருக்காக இம்மாதத்தில் திறந்து வைக்கப்படுகிறது.
இப்புனித மாதத்தில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நல்ல செயல்களுக்கும், இறைவனால் 70 மடங்கு நற்கூலி வழங்கப்படுகிறது.
அதனால்தான் மூமின்களால் இம்மாதத்தில் அதிகமான தர்மங்கள், உதவிகள், மனிதநேயப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
கொடுப்பவர் முகத்திலும், பெறுபவர் முகத்திலும் மகிழ்ச்சி காணப்படுகிறது.
நோன்பு பல பயிற்சிகளை தருகிறது. மனப்பக்குவத்தையும் கொடுக்கிறது.
இறைவனால் நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்ற இறையச்சம் தீமைகளிலிருந்து நம்மை தடுக்கிறது.
கண், காது, வாய் உள்ளிட்ட உடலுறுப்புகள் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கின்றன.
நோன்பில் பசித்திருக்கும்போது, யாருமே இல்லாத நிலையில் கூட எதையும் உண்பதற்கு மனம் விரும்புவதில்லை. அந்த எண்ணங்களும் தோன்றுவதில்லை –
இறைவனுக்காக நோன்பிருக்கிறோம் என்ற உணர்வு நம்மை பாதுகாக்கிறது.
கடல் கடந்து பொருளாதாரம் ஈட்ட இங்கு வந்திருக்கும் நீங்கள் இந்த புனித ரமலானில் அதிகமான நற்காரியங்களில் ஈடுபடுங்கள்
நீங்கள் ஈட்டும் செல்வங்களிலிருந்து ஏழைகளின் மேம்பாட்டுக்கான 2.5 சதவீத ஜக்காத் வரியை ஒழுங்காக கொடுங்கள்.
முதலில் உங்கள் உறவுகளில் உள்ள ஏழைகளுக்கு இதில் முன்னுரிமை கொடுங்கள்.
ஜக்காத் உதவி பெற தகுதியான 8 வகையான நபர்களை கண்டறிந்து உதவுங்கள்.
இது வீட்டு வாசலுக்கு வரும் வறியவர்களுக்கு சில்லறைகளை வினியோகிக்கும் திட்டமல்ல. பிச்சை கேட்பவர்களை அதே நிலையில் வைத்திருக்கும் திட்டமுமல்ல.
ஜக்காத் உதவி என்பது வறுமை ஒழிப்பு திட்டமாகும்.
ஒருவரின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்து, அவரை வறுமையிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கும் நோக்கம் கொண்டது.
அவரை, அடுத்தாண்டு பிறருக்கு ஜக்காத் உதவி செய்யும் அளவில் அவரது பொருளாதார தகுதியை உயர்த்திடும் திட்டமாகும்.
சதக்கா (நிதியுதவி) வேறு- ஜக்காத் வரி செலுத்துதல் வேறு என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.
அதுபோல் பொருளாதாரத்தை சேமிக்கும் பழக்கத்தையும் கவனமாக முன்னெடுங்கள்.
உங்கள் வாரிசுகளை பிறரிடம் கையேந்தும் நிலைக்கு விட்டுச் சென்று விடாதீர்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
இதையும் மனதில் கொள்ள வேண்டும்.
ஒருவர் செலவழிப்பதில் ஊதாரியாகவும் இருக்கக்கூடாது. கருமியாகவும் இருக்கக்கூடாது. இதில் நடுநிலைக் கொண்டவராக இருங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளதை நமது வாழ்வில் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வை இருமேனி
முகம்மது தாவூத் சராபத், மதுக்கூர் அபு ( எ ) அபுபக்கர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
தமிழ்நாட்டிலிருந்து தொழில் மற்றும் வேலைக்காக வந்திருப்பவர்கள் அதிகமாக தங்கியிருக்கும் பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.