காணொளியில் மஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் காணொளி வழியே நடைபெற்றது.

நிகழ்வில் வரவேற்புரையை பொருளாளர் மௌலா.நாசர் அவர்கள் ஆற்றினார்.

கட்சிப்பணிகள், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மாவட்ட செயலாளர்கள் ஆக்கப்பூர்வ கருத்துகளை கூறினர்.

மஜக-வின் மார்ச் 20 – ஏப்ரல் 20, 2023 நன்கொடை சேகரிப்பு மாதத்தில் தீவிர நிதி சேகரிப்பில் ஈடுபடுவது என்றும், வளர்ச்சியை முன்னிறுத்தி கிளை வாரியாக சுற்றுப்பயணங்களை நடத்துவது, இஃப்தார் மற்றும் நலத்திட்ட உதவிகளை முன்னெடுப்பது என பணிகள் வரையறுக்கப்பட்டது.

நிறைவாக இணைப்பொதுச்செயலாளர் J.S.ரிஃபாயி அவர்கள் தீர்மானங்களை வாசித்தார்.

அவை பின்வறுமாறு:

தீர்மானம் 1

அவதூறு வழக்கு ஒன்றில் குஜராத்தின் சூரத் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இரண்டாண்டு சிறை தண்டணையை காரணம் காட்டி, தீர்ப்பு எழுதிய மை உலர்வதற்குள் ராகுல் காந்தி அவர்களின் MP பதவியை பறித்த ஒன்றிய அரசின் நாடளுமன்ற நடவடிக்கையை இக்கூட்டம் கண்டிக்கிறது.

மேலும் இந்த அவசர நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2

சச்சார் கமிட்டி பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் எனவும், நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அது குறித்த முன் அறிவிப்புகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட வேண்டும் எனவும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3

கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ஆளும் பாஜக அரசு ரத்து செய்திருப்பதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

அடுத்தாண்டு வரும் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மைவாத அரசியலை திணித்து, அவற்றை வாக்குகளாக மாற்றும் வஞ்சக செயலின் முன்னோட்டம் இது என இக்கூட்டம் சுட்டிக்காட்டுவதுடன், மீண்டும் அந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஜனநாயக சக்திகள் துணை நிற்க வேண்டும் எனவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4

தமிழக கடலோரங்களில் கடல் அட்டை மீன்கள் அதிகளவில் கிடைக்கிறது.

உள்நாட்டு மீனவர்களுக்கு நல்ல வருவாயையும், நாட்டுக்கு அன்னிய செலவாணியையும் ஈட்டித்தரும் இதனை பிடிப்பதற்கு ஒன்றிய அரசு விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5

புனித ரமலானில் பதட்டத்தை தூண்டும் நோக்கில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் – கிழக்கு ஜெருசேலமில் புதிய யூதக் குடியிருப்புகளை உருவாக்கிட திட்டமிடும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் நடவடிக்கைை ஐ.நா. சபை தடுத்து நிறுத்த வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம 6.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தமிழக அரசின் விடா முயற்சியை இக்கூட்டம் பாராட்டி வரவேற்கிறது.

தமிழக ஆளுநர் அவர்கள் இவ்விஷயத்தில் தமிழக சட்டமன்றத்தின் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இத்தீர்மானங்களுடன் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற காணொளி கூட்டம் நிறைவுற்றது.

இதில் தலைமை நிர்வாகிகள், மாநில துணை செயலாளர்கள், மாநில அணி செயலாளர்களும் பங்கேற்றனர்.