தஞ்சை இஃப்தார் நிகழ்ச்சி…

தஞ்சையில் செயல்பட்டு வரும் அல்முமீன் ஆதரவற்றோர் இல்லம் 1996 முதல் இயங்கி வருகிறது.

இரண்டு ஏக்கர் பரப்பளவில் உள்ள தோட்டத்தில், நல்ல கட்டிடத்தில், சுகாதார வசதியுடன் இச்சேவையகம் இயங்கி வருகிறது.

United Economic Forum மூலம் B.S. அப்துல் ரஹ்மான் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த சேவை இல்லம், தற்போது தஞ்சை மஹாராஜா ஜவுளி குழுமத் தலைவர் ஜனாப் முகம்மது ரபீக் அவர்களின் மேற்பார்வையில் இயங்குகிறது.

இன்று அங்குள்ள சிறுவர்களுடன் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்வில் பங்கேற்றார்.

நோன்பு துறப்புக்கு பிந்தைய மஹ்ரிப் தொழுகைக்கு பின்பு அவர் உரையாற்றினார்.

அப்போது பேசியதாவது…

அனாதைகளை ஆதரிக்குமாறு திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.

அல்பகரா அத்தியாயத்தில் 3 வசனங்கள் அனாதைகள் குறித்து பரிவு காட்டுகிறது.

குர்ஆனின் மேலும் பல அத்தியாயங்களில் பல வசனங்கள் அனாதைகள் குறித்து சுட்டிக்காட்டுகிறது.

ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தனது கரங்களின் இரு விரல்களை சேர்த்து காட்டி, மறுமையில் நானும் அனாதைகளை ஆதரிப்பவர்களும் இவ்வாறு இணைந்திருப்போம் என்றார்கள்.

ஒரு அனாதையின் தலையை அன்புடன் தடவும்போது, உங்கள் கரத்தில் எவ்வளவு முடிகள் படுகிறதோ அவ்வளவு நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் என்றார்கள்.

அந்த அளவில் அனாதைகளை இந்த மார்க்கம் கொண்டாட சொல்கிறது.

எனவே அனாதைகளோடு செலவிட நேரத்தை ஒதுக்குவோம். அவர்களிடம் அன்பை காட்டுவோம்.

இங்கு பெற்றோரை இழந்தவர்கள், வறிய நிலையில் உள்ளவர்கள் ஆதரிக்கப்படுவதும், நல்ல ஆரோக்கியத்துடன் வளர்க்கப்படுவதும் பாரட்டத்தக்கது.

இங்கு வளர்ந்த பிள்ளைகள் நன்கு படித்து உயர்வான இடங்களில் இருப்பதும், பலர் தொழிலதிபர்களாக உருவாகியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.

இதற்காக இதனை உருவாக்கிய, காலம் சென்ற தொழிலதிபர் கீழக்கரை B. S. அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும், UEF அமைப்பிற்கும், இதன் நிர்வாகிகள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கும் இறைவன் அருள் செய்யட்டும் என பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு பேசினார்.

இதனை பராமரிக்கும் நிர்வாகி அப்துல் ஹமீதுவுக்கும் பாராட்டுகளை கூறியவர், விரைவில் இங்கு மஜக சார்பில் ஒரு இஃப்தார் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு தர வேண்டும் என்றார்.

பிறகு அந்த பிள்ளைகளிடம் அமர்ந்து தனித்தனியாக நலம் விசாரித்து உரையாடினார்.

இன்றைய நிகழ்வில் பொதுச்செயலாளருடன், மாநில துணைச்செயலாளர் வல்லம் அகமது கபீர் அவர்களும் பங்கேற்றார்.