ராகுல்காந்தி தகுதி நீக்கம்… இது ஒரு அராஜக நடவடிக்கை! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை

2019-ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஒரு தேர்தல் பரப்புரை பேச்சுக்காக ராகுல் காந்தி அவர்களுக்கு குஜராத் நீதிமன்றம் இரண்டாண்டு தண்டணை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.

தனது பேச்சில் உள்நோக்கம் ஏதுமில்லை என்று அவர் கூறிய பிறகும், நீதிமன்றம் அதை கவனத்தில் கொள்ளவில்லை.

இதனிடையே இன்று மக்களவை செயலாளர் அவர்கள், ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.

இது இந்திய ஜனநாயகத்தை பாழ்படுத்தும் மற்றொரு அராஜக நடவடிக்கையாகும்.

அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில், இப்படி ஒரு தீர்ப்பு வந்திருப்பதும், உடனடியாக இன்று அவர் MP பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதும் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

அவர் மேல்முறையீடு செய்ய வசதியாக 30 நாட்கள் நீதிமன்றம் அவகாசம் தந்து அவருக்கு பிணை வழங்கியிருக்கும் நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை காரணம் காட்டி அவசர அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதற்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சி என்ன? என்ற கேள்விகள் எழுகிறது.

ராகுல் காந்தி அவர்கள் நடத்திய ‘ஒற்றுமை யாத்திரை’ ஏற்படுத்திய தாக்கம்; வலதுசாரி ஃபாஸிஸ்டுகளை அச்சுறுத்தியிருக்கும் நிலையில்; அவர் மீண்டும் அருணாச்சலப் பிரதேசம் முதல் குஜராத் வரை அடுத்தக் கட்ட யாத்திரை போக திட்டமிட்டிருந்தார்.

இது ஃபாஸிஸ்ட்டுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அனைவரும் அறிவர்.

ஒன்றிய அரசுக்கு எதிராக வீசத் தொடங்கியிருக்கும் எதிர்ப்பலையும், நாட்டு மக்களின் கவனம் தற்போது ராகுல் காந்தி மீது குவிவதும் கூடுதலாக அவர்களுக்கு அரசியல் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதிகார மையங்களின் துணையுடன், அவர்கள் ராகுல் காந்தி அவர்களை ஒடுக்க நினைப்பதில் ஆச்சர்யமில்லை.

இந்த நெருக்கடிகள் அவருக்கான சிவப்பு கம்பளங்களாக மாறப்போகிறது என்பதில் ஐயமில்லை.

இது காங்கிரஸ் கட்சிக்கோ, ராகுல்காந்தி என்ற தலைவருக்கோ ஏற்பட்டிருக்கும் சோதனை என்று யாரும் கருதக்கூடாது.

நாட்டின் எதிர்கால சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தாகும்.

எனவே இந்த நிகழ்வை ஜனநாயக சக்திகள் சாதரணமாக கடந்துபோகாமல், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியாக கருதி உரிய வகையில் மக்களை அணிதிரட்ட தயாராக வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்

மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
24. 03.2023