களமாட புறப்படுங்கள்… மு தமிமுன் அன்சாரி கடிதம்!

பேரன்புக்குரிய மனிதநேய சொந்தங்களே…

ஏக இறையின் அமைதியும், சமாதானமும் உரித்தாகுக…

இக்கடிதம் வாயிலாக உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது.

குளிர்விடும் பனிக் காலத்தில் ‘மக்களுடன் மஜக’ என்ற மாபெரும் செயல் திட்டத்தை சாதித்திட நீங்கள் தயாராகி வரும் வேளையில் இக்கடிதம் உங்கள் விழிகளின் வழியே இதயங்களை அடையும் என நம்புகிறோம்.

சொந்தங்களே..

அது பற்றி விவரிப்பதற்கு முன்பாக, கடந்த ஓராண்டில் நாம் பதித்த முத்திரைப் பணிகளை உங்கள் மனதில் நிறுத்த விழைகிறோம்.

2022 ஆம் ஆண்டின் நிறைவில் இவ்வாண்டை சற்று பின்னோக்கி திரும்பி பார்க்கிறோம்.

▪️ ஜனவரி 8 அன்று ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலையை முன்னிறுத்தி; ஒமெக்ரான் தொற்றின் நெருக்கடிகளையும் கடந்து கோவையில் நடத்திய மத்திய சிறை முற்றுகை

▪️நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனி பலம் காட்டி பெற்ற பரவலான வெற்றிகள்

▪️ஏப்ரலில் ரமலான் மாதம் முழுதும் துபை, அபுதாபி, கத்தார், குவைத் நாடுகளில் நடைபெற்ற இஃப்தார் எழுச்சி கூட்டங்கள்

▪️கும்பகோணத்தில் உற்சாகமாக நடைபெற்ற தலைமை செயற்குழு

▪️செப்டம்பர் 10 அன்று ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலைக்காக; தமிழகமே வியக்கும் அளவில் சென்னையில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட தலைமைச் செயலக முற்றுகைப் போர்

▪️ சென்னை அருகே அக்டோபர் 29 மற்றும் 30 தேதிகளில் நடத்தப்பட்ட மாநில அளவிலான அறிவுசார் அரசியல் பயிலரங்கம்

▪️பரவலாக நடைபெற்ற வழக்கமான மக்கள் பணிகள்

என 2022 ஆம் ஆண்டு மஜகவுக்கு உற்சாகமான நாட்களை தந்து சென்றிருக்கிறது.

அதிகாரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாங்கள் மக்களுக்காக இயங்குபவர்கள் என்பதை இதன் மூலம் அடுத்தடுத்து உறுதி செய்திருக்கிறோம்.

சொந்தங்களே…

தற்போது 2023 ஆங்கில புத்தாண்டின் தொடக்கத்திலேயே, மக்களுக்காக களமாட புறப்படுகிறோம்.

ஆம்!

மக்கள் பிரச்சனைகளை அதிகார வர்க்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் செயல் திட்டமான ‘மக்களுடன் மஜக’ என்ற அறிவிப்புதான் அது.

இந்த முழக்கம் பெரும் வரவேற்பினை பெற்றிருப்பதாக நமது கட்சியினர் தெரிவிக்கும் போது நமக்கு மேலும் உற்சாகம் பீறிடுகிறது.

தமக்காக குரல் கொடுப்பவர்களையும், போராடுபவர்களையும் மக்கள் எப்போதும் அங்கீகரிக்கிறார்கள் என்பது நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறது.

இந்த ஆதரவு அலைகளால் உந்தப்பட்டிருக்கும் நம் நிர்வாகிகளுக்கு சொல்லவா வேண்டும்? கடந்த ஒரு வாரமாகவே பம்பரமாய் பணியாற்ற தொடங்கி விட்டார்கள்.

ஆங்காங்கே ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

இப்போதே சுவர் விளம்பரங்கள் பரவலாக வரையப்பட்டிருக்கிறது. பல இடங்களில் இனி தொடர்ந்து வரையப்படவும் உள்ளது.

பெரிய பதாகைகள் ஆட்டோக்களில் ஒட்டப்பட்டு அவை வீதிகளில் வலம் வருகின்றன.

கதவுகள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான சிறிய வடிவ ஸ்டிக்கர்களும் நமது கட்சியினரால் தயாரிக்கப்பட்டு, ‘மக்களுடன் மஜக’ என்ற பரப்புரை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

வலைதளங்களில் பரப்புரை தொடங்கப்பட்டுள்ளதால், வெளிநாடு வாழ் தமிழக மக்களிடமும் இது வரவேற்பை பெற்றிருக்கிறது.

தற்போது சிங்கப்பூரில் நான் சுற்றுப் பயணத்தில் இருக்கும் நிலையில், என்னை சந்திக்கும் பலரும் ஆர்வமுடன் இது பற்றி கேட்டறிகிறார்கள்.

சொந்தங்களே…

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் கடமை நமக்கு இருக்கிறது.

நாம் எதையும் மேம்போக்காக செய்பவர்கள் அல்ல என்பது மக்களுக்கு தெரியும்.

களத்தில் இறங்கிவிட்டால் கடலின் ஆழம் வரையும்; மலையின் உச்சி வரையும் பாய்ந்திடும் அனுபவங்களும், ஆற்றலும் நமக்குண்டு என்பதை பல முறை நிருபித்தவர்கள் நாம்!

எனவே இன்று ஜனவரி 1 தொடங்கி பிப்ரவரி 28, 2023 வரை, இரு மாதங்களும் ஒயாது மக்களுக்காக உழைப்போம். அவர்களின் இதயங்களை வென்றெடுப்போம்.

சாலை வசதி, குடிநீர் வசதி, பட்டா பெற்றுக்கொடுத்தல், மின் வசதி செய்துக்கொடுத்தல் போன்ற அடிப்படை பணிகளுக்கு மனு கொடுக்கும் திட்டமிடல்களை தொடங்கிடுவோம்.

MP மற்றும் MLA-க்களை சந்தித்து அவர்களது தொகுதி நிதி மூலம் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொடுத்தல் என பணிகளை முன்னெடுப்போம்.

அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை மட்டுமின்றி, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்திப்போம்.

மக்கள் கூறும் கோரிக்கைகளை கவனம் எடுத்து, அதற்கேற்ப வியூகங்களை வகுப்போம்.

சொந்தங்களே…

சேவை என்பது மாலை நேர பொழுதுபோக்கல்ல. அது சமூகத்தை பழுது பார்க்க கூடியது என்பதை உணர்ந்து துள்ளியெழுந்து பணியாற்ற புறப்படுங்கள்.

நமது குரலை கேட்க யாரும் வர மாட்டார்களா? நமது கண்ணீரை துடைக்கும் கரங்கள் இல்லையா? என ஏங்கிடும் மக்களின் இதயங்களை ஆற்றுப்படுத்திட புறப்படுங்கள்.

‘மக்களை சந்திப்போம்;

கோரிக்கைகளை வென்றெடுப்போம்.’

என்ற முழக்கத்தை பரவலாக்குவோம்.

‘எங்கும் மஜக ; எதிலும் மஜக’

என்பதையும் நிலைநாட்டுவோம்.

ஒடுகிற நதியில் பாசிகள் படர்வதில்லை. உழைப்பாளிகள் உள்ள பாசறையில் ஓய்வுக்கு நேரமில்லை என்பதை உணர்ந்து களமாடுவோம்.

மக்களை சந்திப்போம். மக்களுடன் உரையாடுவோம்.

மக்களின் மனங்களை வெல்வது மட்டுமல்ல; மக்களை மாற்றுவதும் நமது இலக்கு என்பதை உணர்ந்து பணியாற்றுவோம்…!

அன்புடன்,
மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி

01.01.2023