சிங்கப்பூரில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் தமிழ் இலக்கியவாதிகளின் அமைப்பான ‘கவி மாலை’ சார்பில் சிங்கப்பூர் தேசிய நூலக அரங்கில் நடைப்பெற்ற நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று சிறப்பித்தார்.
22-வது ஆண்டில் 271-வது நிகழ்ச்சியாக நடைப்பெற்ற இந்நிகழ்வில் ‘படித்த, ரசித்த கவிதைகள்’ என்ற தலைப்பில் பலரும் கவிதைகளை வாசித்தனர்.
பிறகு ‘தீராக் கணக்கு’ என்ற தலைப்பில் கவிதைப்போட்டியும் நடைப்பெற்றது.
தொடர்ந்து கவிதை நூல் திறனாய்வும் நடைப்பெற்றது.
படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் கலந்துரையாடல்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வுகள் சுவராஸ்யமாக நகர்ந்தது.
இதில் அந்தமானிலிருந்து வருகை தந்த, தமிழ் ஆர்வலர் கிருஷ்ண மூர்த்தி அவர்கள் அந்தமான் குறித்தும், அங்கு தமிழர் நிலை குறித்தும் power Point மூலம் விளக்கினார். இது புது பயண அனுபவத்தை பலருக்கும் கொடுத்தது.
நிறைவாக மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் ‘மக்கள் குரலாய் மண்ணின் கவிதைகள்’ என்ற தலைப்பில் பேசினார்.
தாஜிகிஸ்தான் கவிஞர் ரசூல், சிலி நாட்டு கவிஞர் பாப்லோ நெருடா தொடங்கி, அல்லமா இக்பால்,கண்ணதாசன், பட்டுக்கோட்டையார், வாலி, கவிக்கோ அப்துல் ரஹ்மான், மேத்தா, இன்குலாப்,வைரமுத்து, ஈரோடு தமிழன்பன் ஆகியோரின் மண் சார்ந்த படைப்புகள் குறித்து பலத்த கைத்தட்டல்களுக்கிடையே பேசினார்.
“வாழ்க்கையில் வெற்றிப் பெற நல்ல நண்பர்கள் தேவை.
வாழ் நாளெல்லாம் வெற்றிப் பெற ஒரு எதிரியாவது தேவை” என்ற அப்துல் கலாமின் கருத்தும் ஒரு புதுக்கவிதைதான் என்றார்.
சிங்கப்பூரில் தமிழ் மொழியின் செழுமை குறித்து பேசியவர், உலகம் எங்கும் தமிழர்கள் பரவி வாழும் நிலையில், அவர்களது பிள்ளைகள் தமிழ் படிக்க ஆர்வம் இருந்தும், அது இயலாததாக பல நாடுகளில் உள்ளது என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்டினார்.
தென்னாப்பிரிக்காவில் தமிழின் பெருமையை ஆங்கிலத்தில் பேச வேண்டிய நிலை உள்ளதை நினைவூட்டினார்.
சிங்கைவாழ் ‘கவி மாலை’ அமைப்பினர், உலகம் எங்கும் வாழும் தமிழ் பிள்ளைகளுக்கு Online மூலம் தமிழ் பயற்சியளிக்க திட்டமிட வேண்டும் என தனது ஆவலை வெளிப்படுத்தினார்.
இக் கருத்தை அரங்கத்தினர் கைத்தட்டி வரவேற்றனர்.
தென்கிழக்காசியாவின் புகழ் பெற்ற இந்நூலகத்திற்கு பல முறை வருகை தந்ததை நினைவு கூர்ந்தவர், இங்கு சோழப் பேரரசு, கலிங்கப் பேரரசு குறித்தும் அறிந்துக் கொண்டதையும் கூறினார். இங்கு ஒரு நாள் நானும் உரையாற்றுவேன் என அப்போது நினைத்துக் கூடப் பார்த்ததில்லை என்றார்.
2023 ஆங்கில புத்தாண்டு மலர 5 மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில், அந்த பொழுதுபோக்கு உற்சாக மன நிலையையும் கடந்து இவ்வளவு படைப்பாளிகள், தமிழ் ஆர்வலர்கள் வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.
அவரது உரைக்கு பிறகு அவரது ‘புயலோடு போராடும் பூக்கள்’ நூலை கையெழுத்திட்டு வாங்குவதில் பலரும் பேரார்வம் காட்டினர். பலர் தங்களது நூல்களையும் அவரிடம் வழங்கி படம் எடுத்துக் கொண்டனர்.
பன்முக ஆளுமைகளை கொண்ட தமிழ் உணர்வாளரான தாங்கள், சட்டமன்றத்தில் இம்முறை இடம் பெறாதது தங்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் பலர் கூறினர்.
இந்நிகழ்வில் பிச்சினிக்காடு இளங்கோ, புதுமைத் தேனீ அன்பழகன், புதிய நிலா ஜஹாங்கீர், ஆசியான் கவிஞர் மு.இக்பால், முத்தழகு மெய்யப்பன், கவிஞர் இன்பா, கவிஆர்வலர் மதியழகன், கவிஞர் அஷ்ரப், கவிஞர் மாரிமுத்து, சகோதரி பிரபா தேவி, முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிர்வாகி முகம்மது யாசீன், மனிதநேய சொந்தம் அன்பு அக்பர், கிரஸண்ட் முன்னாள் மாணவர் சங்க தலைவர் முகம்மது யூசுப் உள்ளிட்ட பிரமுகர்களும், திரளான தமிழ் படைப்பாளிகளும் இன்றைய நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.