பெண்களின் ஆற்றலை வழி நடத்த வேண்டும்!’ பெண்கள் மாநாட்டில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!

நாகை மாவட்டம் தோப்புத்துறையில் 1990 முதல், கல்வி விழிப்புணர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மகளிர் மேம்பாடு ஆகிய சேவைகளை ஜமாத் ஆதரவோடு செய்து வரும், உள்ளுர் அமைப்பான முஸ்லிம் மாணவர் முன்னணி(MSF) சார்பில் பெண்கள் விழிப்புணர்வு மாநாடு நடைப்பெற்றது.

மருத்துவம் பயின்ற பெண்கள், பட்டதாரி பெண்கள், ஆலிமாக்கள் மேடையை அலங்கரித்து நிகழ்வை வழிநடத்தினர்.

முதன்முதலாக ஆண்களுக்கு தனி இட வசதி என அறிவிக்கப்பட்டு , அதிலும் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

‘ஆண்களுக்கு தனி இட வசதி’ என்ற வாசகமே புதுமையானதாக இருந்தது.

மாணவி முஷ்கான் பெயர் சூட்டப்பட்டிருந்த அந்த அரங்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளுர் பெண்கள் திரண்டிருந்தனர். இடம் கொள்ளாமையால் அருகில் இருந்த மண்டபத்தில் நாற்காலிகள் போடப்பட்டு பெண்கள் அமர வைக்கப்பட்டனர்.

இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசியதாவது…

பெண்களை முன்னிறுத்தி, அவர்களது ஆளுமையை வெளிப்படுத்தி ஒரு மாநாடு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது,

பெண்கள் சமூகத்தில் சம அங்கத்தினர். அவர்களது அறிவும், ஆற்றலும் பயன்படுத்தப்பட வேண்டும். முறையாக வழிநடத்தப்பட வேண்டும்.

பாதுகாப்பான சூழலில் அவர்களது பணியிடங்கள் இருக்க வேண்டும். அவர்களின் மனித வள மேம்பாட்டை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி திட்டமிட வேண்டும்.

இந்தியாவை கணவருக்கு துணையாக நின்று, ஆட்சி செய்த பெண்மணி ஜஹாங்கீரின் மனைவி நூர் ஐஹான் ஆவார்.

ரஷியா பேகம், சாந்த் பீவி போன்ற ஆட்சியாளர்களையும், ஹஸ்ரத் மகள், பீபியம்மாள், போன்ற சுதந்திர பெண் போராளிகளையும் நாட்டிற்கு தந்த சமூகம் இது.

இந்தியாவின் முதல் பெண் நீதிபதி கேரளாவை சேர்ந்த பாத்திமா பீவி ஆவார். அவர் நமது முன்னாள் கவர்னரும் கூட.

இந்தியாவில் முதன் பெண் ஆசிரியை மராட்டியத்தை சேர்ந்த பாத்திமா ஆவார்.

இவையெல்லாம் இந்திய பெண்ணியத்திற்கு முஸ்லிம் சமூகம் தந்த முன் மாதிரிகளாகும்.

இஸ்லாம் பெண்களுக்கு பாதுகாப்பான சுதந்திரத்தை தருகிறது. அதன் வழியில் செயலாற்றிட தடுக்க வில்லை.

இஸ்லாத்தை நபிகள் கூறிட , அதை முதலில் ஏற்றவர் ஒரு பெண்மணி தான். அவர்தான் கதீஜா (ரலி)

நபிகளின் வாழ்வியல் (ஹதீஸ்) செய்திகளை அதிகம் வெளிப்படுத்திய மூவரில் ஒருவர் ஒரு பெண்தான். அவர் பெயர் ஆயிஷா (ரலி)

ஹீதைபியா உடன்படிக்கைக்கு பின்பு, நபிகள் மக்காவுக்கு ஹஜ் செய்ய சென்ற போது, எதிரிகள் தெரிவித்த எதிர்ப்பால் பதட்டமான சூழல் உருவானது.

அதை தணிக்கவும், அவர்களின் தோழர்களிடம் அமைதியை ஏற்படுத்தவும் நபிகளுக்கு அழகிய ஆலோசனையை வழங்கியதும் ஒரு பெண் தான். அவர் உம்மு சலிமா (ரலி) ஆவார்.

இப்படி நிறைய கூறலாம். நபிகள் பெண்களின் அறிவையும், ஆற்றலையும் , உணர்வுகளையும் மதித்தவர்.

எனவே பெண்களை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும். படித்தவர்களின் அறிவை பயன்படுத்திட வேண்டும். அதற்கு இது போன்ற விழிப்புணர்வு மாநாடுகள் அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜமாத் தலைவர் ஹாஜி ஜபருல்லாகான், ஆரிபா குழுமத் தலைவர் சுல்தானுல் ஆரிபின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிறைவாக MSF உறுப்பினர்கள் மேடையேறி கல்வி பரப்புரை, சுற்றுச்சூழல் மேம்பாடு, போதை பொருள் எதிர்ப்பு , சமூக சேவை, வறுமை ஒழிப்பு ஆகிய ஐந்து அம்ச உறுதி மொழிகளை ஏற்றனர்.

நிகழ்வில் ஃபாத்திமா சபரிமாலா, டாக்டர் சாகிதா, டாக்டர் ஷிஃபா, அன்னை பாத்திமா மதரஸா கல்லூரி துணை முதல்வர் பெளஜியா, அக்கல்லூரி நிர்வாகி B. அனிஸ் பாத்திமா, ஆசிரியை ஐன்னத், பாயிண்ட் காலிமெர் CbSe பள்ளி முதல்வர் சிராஜ் நிசா, அல் நூர் மெட்ரிக் பள்ளி முதல்வர் சந்திரகலா, மற்றும் அபிஷா பாத்திமா ஆகியோரும் மேடையை சிறப்பித்தனர்.

மஜக மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அகமதுல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் மன்சூர் உட்பட திரளான மஜகவினரும் பொதுச் செயலாளருடன் நிகழ்வில் பங்கேற்றனர்.