நீட் TNPSC பயிற்சி வகுப்பு! ஊழல் பெருகிவிட்ட நிர்வாக அமைப்பில் நியாயமாக செயல்படுங்கள்! சேலம் நிகழ்ச்சியில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!

ஜூன்:26.,

சேலத்தில் ஜாமியா கல்வி அறக்கட்டளை சார்பில் NEET மற்றும் TNPSC தேர்வுகளுக்கு மாணவ, மாணவிகளை தயார்படுத்தும் பயிற்சி மையம் சிறப்பாக இயங்கி வருகிறது.

இதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

அவரது உரையின் முக்கிய பகுதிகள் பின் வருமாறு…

இங்கு ஜாமியா கல்வி அறக்கட்டளை சார்பில் ஆக்கப்பூர்வமான ஒரு பணியை, தூர நோக்கோடு முன்னெடுத்து வருவதற்காக எனது பாராட்டுகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேராசிரியர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள், ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள், கல்வி ஆர்வலர்கள் , ஜமாத்தினர் என ஒரு கூட்டு முயற்சியோடு இந்த பயிற்சி மையம் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

அதுவும் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறுவது சிறப்பானது.

இதில் சாதி, மதம் பாராமல் எல்லா சமூக பிள்ளைகளுக்கும், கட்டண மின்றி பயிற்சியளிக்கப்படுவது ஒரு சிறப்பாகும்.

வசதியற்றவர்களுக்கு இது பெரும் வாய்ப்பாக உள்ளது என்பதில் ஐயமில்லை.

நீட் தேர்வு இந்தியா முழுக்க ரத்து செய்ய வேண்டும் என்கிறோம். அது நம் உறுதியான கொள்கை.

ஆனால் அது திணிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் போது, அதை உரிய வகையில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் இலவசமாக இங்கு பயிற்சியளிக்கப்படுவது பாராட்டத்தக்கது.

ஜாமியா என்றால் பல்கலைக்கழகம் ஆகும். அக்காலத்தில் பள்ளிவாசல்கள் தொழுகை வசதியுடன் பல்கலைக்கழகங்களாக செயல்பட்டது.

நபிகள் நாயகம் அவர்கள் மதீனாவில் கட்டிய மஸ்ஜித் நபவீ பள்ளி என்பது வழிபாட்டுத்தலமாக, அரசின் தலைமைச் செயலகமாக, மருத்துவமனையாக, நீதிமன்றமாக, கல்வி மையமாக செயல்பட்டது.

அந்த வகையில் மஸ்ஜித் வளாகங்கள் கல்வி மையங்களாகவும் மாற்றப்பட வேண்டும்

ஆறாம் வகுப்பு முதல் +2 வரையிலான பெண்கள் மெட்ரிக் பள்ளிக்கூடங்கள் அதிக அளவில் உருவாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

தமிழகத்தின் மேற்கு பகுதியில் கோவையில் டெக்ஸ் சிட்டி கல்லுரி, ஈரோட்டில் அல்.அமீன் பாலி டெக்னிக் இருப்பது போல, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும்.

ஜாமியா கல்வி அறக்கட்டளை சார்பில் சேலத்தில் உள்ள வக்பு இடங்களை பயன்படுத்தி, பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரி தொடங்க திட்டமிடுங்கள்.

பெண்கள் கல்லூரி குறித்தும் யோசியுங்கள்.

பெண்கள் பாதுகாப்பான சூழலில் கல்வி பெறவும், அவர்களின் ஆற்றல்கள் மேம்படவும் வழி காட்ட வேண்டும்.

இங்கு பயிற்சி பெறுபவர்கள் அறத்துடன், நேர்மையுடன் பணியாற்ற உறுதியேற்க வேண்டும்.

அதுதான் நீங்கள் பெறும் கல்வியை சிறப்பிக்கும். இந்த கல்வி நிறுவனத்திற்கும் சிறப்பு சேர்க்கும்.

இதில் நீங்கள் எத்தனைப் பேர் எதிர் காலத்தில் அரசுப் பணிகளுக்கும், IAS , IPS, போன்ற உயர் பணிகளுக்கு போவீர்கள் என இப்போது தெரியாது. எத்தனைப் பேர் மருத்துவர்களாக வரப்போகிறீர்கள் என்பதும் தெரியாது.

ஆனால் அப்படி வரும் போது நேர்மையாக பணியாற்றிட வேண்டும் .அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஊழலும், லஞ்சமும் பெருகிவிட்ட நிர்வாக அமைப்பில், நியாயமாக செயல்படுபவர்களை மக்கள் மதிக்கிறார்கள்.

கக்கன், காமராஜர், காயிதே மில்லத், அப்துல் கலாம் ஆகியோரின் நேர்மையை மனதில் கொள்ள வேண்டும்.

ஏழை எளியோர் உள்ளிட்ட அனைவரும் பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு பயிற்சி மையத்தை நடத்தி வரும் இதன் நிர்வாகத்திற்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிறகு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

இம்மையம் 11.07. 2021 ல் தொடங்கப்பட்டு, இதில் TNPSC வகுப்பில் 100 மாணவர்கள்,NEET வகுப்பில் 96 மாணவர்கள் பயின்று வருவதும், TNPSC குருப் 2 தேர்வில் 30 மாணவர்கள் தேர்வெழுதி காத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் சமூக செயல்பாட்டாளர் ஃபாத்திமா சபரிமாலா அவர்களும் பங்கேற்றார்.

இதில் ஜாமியா பள்ளி முத்தவல்லி SR அன்வர், ஜாமியா கல்வி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வஹீதா பானு, செயலாளர் டாக்டர் சாகுல் ஹமீது , பொருளாளர் டாக்டர் ஏஜாஸ் கான் IRS , மஜக மாநில துணைச் செயலாளர் பாபு ஷாகின் ஷா, மஜக மாவட்ட அமைப்புக்குழு தலைவர் சாதிக் பாஷா, உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#சேலம்_மாவட்டம்
25.06.2022