கூடங்குளம் அணுஉலை பூங்கா அனுகழிவு மைய எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக அனைத்து கட்சி கூட்டம்..! மஜக பங்கேற்பு..!!

நெல்லை.ஜூன்.15., கூடங்குளம் அணுஉலை பூங்கா – அனுகழிவு மைய எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக நெல்லையில் அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒருங்கிணைப்பாளர் சு.ப.உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நெல்லை மாவட்ட செயலாளர் நிஜாம், மருத்துவ சேவை அணி செயலாளர் சம்சு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் ‘அணுஉலைக்கு அகலே’ (Away From Reactor) எனும் அணுக்கழிவு மையங்களும், அணுக்கழிவு மறுசுழற்சி ஆலையும் (reprocessing plant) அமைக்கும் நடவடிக்கைகளில் அணுசக்தித்துறை மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது. இது அணுஉலைகளைவிட ஆபத்தானது.

கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2014-ஆம் ஆண்டு இறுதி வரை கூடங்குளம் அணுமின்நிலையத் திட்டத்திற்கு எதிராக நெல்லை மாவட்ட மக்கள் மாபெரும் அறவழிப் போராட்டங்களை நடத்தினர். போராடிய மக்களின் உணர்வுகளை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு, 3-வது மற்றும் 4-வது அணுஉலைகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் 5-வது மற்றும் 6-வது அணு உலைகளுக்கு முதல் காங்கிரீட் போட்டு (First Pour of Concrete) அவற்றை நிறுவுவதற்குமான நடவடிக்கைகளிலும் அணுசக்தித்துறை தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

இதற்கிடையே முதலிரண்டு அணுஉலைகளுக்கான AFR அணுக்கழிவு மையங்கள் கட்டுவதற்கான கருத்துக்கேட்புக் கூட்டம் ஒன்றை ஜூலை 10, 2019 அன்று இராதாபுரத்தில் நடத்தப்போவதாக அறிவித்துவிட்டு, மக்கள் எதிர்ப்பின் காரணமாக அதைக் கைவிட்டார்கள். இப்போது 3 & 4 அணுஉலைகளுக்கான அணுக்கழிவு மையங்களைக் கட்டப்போவதாகவும், 1 & 2 அணுஉலைகளின் கழிவுகள் அங்கே சேமித்துவைக்கப்படும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

கூடங்குளம் அணுஉலை வளாகம் 5.40 கி.மீ. நீளமும், 2.5 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த 13.5 சதுர கி.மீ. பரப்பில் ஆறு முதல் எட்டு அணுஉலைகள், அணுக்கழிவு மையங்கள், அணுக்கழிவு மறுசுழற்சி ஆலை (reprocessing plant), உப்பகற்றி ஆலைகள் (desalination plants), நிர்வாக அலுவலகங்கள் என அனைத்தையும் சேர்த்து அடர்த்தியாகக் கட்டுவது மிக மிக ஆபத்தானது. குறிப்பாக 1-2 அணுஉலைகளுக்கும் 3-4 அணுஉலைகளுக்கும் இடையே வெறும் 804 மீட்டர் இடைவெளிதான் இருக்கிறது. அதேபோல, 3-4 அணுஉலைகளுக்கும் 5-6 அணுஉலைகளுக்கும் இடையே அதைவிடக் குறைவாக 344 மீட்டர் தூரம்தான் உள்ளது.
இந்த நிலையில் மேலும் 7 & 8 அணுஉலைகளும், அணுக்கழிவு மையங்களும், அணுக்கழிவு மறுசுழற்சி ஆலையும் (reprocessing plant) அமைக்கப்படவிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. மறுசுழற்சி ஆலை நிறுவப்போகிறீர்களா என்று கேட்டால், “இந்த தகவல் தங்களிடம் இல்லை” என்று ஆணவமாக பதில் சொல்கிறது இந்திய அணுமின் கழகம். இப்படியாக கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழ்நாட்டிற்கும், கேரளாவுக்கும் ஒரு மாபெரும் ஆபத்தாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

இது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் விரைவில் நெல்லை மாவட்டத்தில் கூட்டமைப்பின் சார்பாக மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்துவது உட்பட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

தகவல்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
14-06-2021