திட்டச்சேரி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து மஜக கவுன்சிலர் ரியாஸ் வெளிநடப்பு..!

நாகை.மே.20.,

பேரூராட்சிகள் உள்ளிட்ட நகர்புறங்களில் உள்ள குடியிருப்பு, வணிக கட்டிடங்கள் மற்றும் காலிமனைகளுக்கான சொத்துவரியினை 25% முதல் 100% வரை தமிழ்நாடு அரசு உயர்த்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்த அதே விகிதத்தில் வரி உயர்வை இறுதிசெய்து மன்ற அனுமதிக்காக இன்று (20/05/2022) திட்டச்சேரி பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய மஜக கவுன்சிலர் செய்யது ரியாசுதீன் “ஒரேடியாக இவ்வளவு சதவீத வரி உயர்வு என்பது மக்களை பெரிதும் பாதிக்கும். அரசு இந்த வரிஉயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என தான் எழுத்துபூர்வமாக மனு அளித்ததை சுட்டிகாட்டினார்.

அதேபோல் “வரி உயர்வு தொடர்பாக பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை பெற பத்திரிக்கை வாயிலாக அறிவிப்பு செய்து 30 நாட்கள் (மே 13 வரை) அவகாசம் கொடுத்ததாகவும், அதில் ஒரு மனு மட்டும் பெறப்பட்டு அதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு மனுவும் கவுன்சிலரான நான் கொடுத்தது தான்.

பொதுமக்களுக்கு இதுதொடர்பான செய்தி சென்றடையவில்லை. காரணம் தாங்கள் அளித்த பத்திரிக்கை அறிவிப்பு பிரதான நாளேடுகளில் இல்லாமல், மக்களுக்கு அதிக பரிச்சயம் இல்லாத நாளேடுகளில் அறிவிப்பு வந்துள்ளது, அதேபோல் பேரூராட்சி பொது அறிவிப்பு பலகையிலும் கடைசி 10 நாட்கள் (மே 4 முதல்) மட்டுமே ஒட்டப்பட்டது. (அதுவும் நாங்கள் இருமுறை நேரில் முறையிட்ட பிறகே ஒட்டப்பட்டது)

பொதுமக்களுக்கு சென்றடைந்தால் தானே அவர்கள் மனு அளிப்பார்கள். அவர்களுக்கு தகவலே தெரியவில்லை, பிறகு எப்படி மனு அளிப்பார்கள்?” என கேள்வி கேட்டார்.

மேலும்” அவசர கதியில் மக்களின் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை பெறாமல் அரசு நிர்ணயம் செய்த விகிதத்தை அப்படியே அமல்ப்படுத்திட செய்யும் நடவடிக்கைகளை கண்டித்து, தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்
20/05/2022