ஜனவரி.30., தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் சார்பில் நீண்ட கால ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி அரங்க மாநாடு மயிலாடுதுறையில் நடைப்பெற்றது.
பேரா. ஜெயராமன் அவர்களின் முன் முயற்சியில் நடைபெற்ற ஒரு நாள் மாநாட்டில் பல்வேறு அரசியல் மற்றும் சமூக ஆளுமைகளும் பங்கேற்றனர்.
நிறைவு அமர்வில் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசிய உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு…
நீண்ட கால ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலை தொடர்பான கோரிக்கையை முன்பு சட்டசபையிலும், இப்போது களத்திலும் மக்கள் மயப்படுத்தி வரும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில், இந்த ஒரு நாள் அரங்க மாநாட்டிற்கு எமது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இக்கோரிக்கைக்கு மக்கள் ஆதரவை மேலும் குவிக்கும் வகையில் இது போன்ற மாநாடுகளும், போராட்டங்களும், நிகழ்ச்சிகளும் நடைபெறுவதும், அது பெருகி வருவது வரவேற்கத்தக்கது.
நீதிமன்றத்தால் தண்டணை பெற்று 14 ஆண்டுகளை கடந்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுபவர்களின் வாழ்வுரிமைகளையும், மனித உரிமைகளையும் வலியுறுத்தி நாம் எல்லோரும் பேசுகிறோம்.
இதற்கு சட்டத்தின் வழியாக நீதி கேட்கிறோம்.
வீரப்பன் தொடர்புடைய வழக்கில் தண்டனை பெற்றிருக்கும் அவரது சகோதரர் மாதையன் 33 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்.
இது ஒருவரின் வாழ்வின் மூன்றில் ஒரு பகுதி. இதுவெல்லாம் நியாயமா? என கேட்கிறோம். குரலற்ற இது போன்றவர்களின் குரலை எதிரொலிக்கிறோம்.
ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் நீண்ட சிறைவாசத்தை அனுபவிக்கின்றனர்.
ஆனால் இதே வழக்கில் ஜெயின் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட சுப்ரமணிய சுவாமியை நீதிமன்றம் நேர்மையாக விசாரித்ததா?
திருச்சி வேலுசாமி எழுதிய ‘தூக்கு கயிற்றில் நிஜம்’ என்ற நூலை படித்தால் பல விஷயங்கள் புரியும்.
சில நேரம் நீதிமன்றங்களையும் ஐயப்பட வேண்டியிருக்கிறது.
பழங்குடியின மக்களுக்காக பாடுபட்ட ஸ்டேன்ஸ் சாமியார் நோய்வாய்பட்டு சமீபத்தில் இறந்தார். உடல் உறுப்புகள் பல இயங்காத நிலையில் அவர் ஜாமீன் கேட்டப் போது, அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுத்தது.
சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விஷயத்தில், அவரை விடாமல் துரத்துவது ஏன்? என கேள்வி கேட்டு அதே நீதிமன்றம் ஜாமீன் வழங்குகிறது.
என்ன முரண் இது? இவற்றையெல்லாம் நாடு கவனிக்கிறது.
ஒரு பாட்ஷா உருவாக ராமகோபலன் காரணம். கற்பில் சிறந்தவள் கதிஜாவா? கன்னி மேரியா? மணியம்மையா? என்பது போன்ற வெறுப்பு பேச்சுகள்தானே பாஷா போன்றோரை உருவாக்கியது?
அப்படி பேசியவர்கள் மீது சட்டம் இதே போல் பாய்ந்ததா? தண்டனை மட்டும் ஒரு தரப்புக்கா?
தவறுகள் யார் செய்தாலும் தவறுதான். அதில் பாரபட்சம் கூடாது.
நாம் தண்டனை குறித்தோ, குற்றம் குறித்தோ விவாதிக்கவில்லை. அதை நியாயப்படுத்தவும் இல்லை.
யாரையும் குற்றவாளிகள் என்றோ, நிரபராதிகள் என்றோ கூறவில்லை.
இந்த நேரத்தில் வைரமுத்துவின் ஒரு பாடல் வரி நினைவுக்கு வருகிறது.
” உள்ளே உள்ள அத்தனை பேரும் குற்றவாளி இல்லைங்க ; வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லைங்க ” என்ற அந்த வரிகள் பல அர்த்தங்கள் நிறைந்தது.
14 ஆண்டுகளை கடந்து 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் என தண்டனை காலத்தை கடந்து வாடும் சிறைவாசிகளைத்தான் சட்டப்படி முன் விடுதலை செய்யக் கோருகிறோம்.
அதில் சாதி, மத, வழக்கு பேதங்கள் பார்க்கக் கூடாது என்கிறோம்.
இந்த கோரிக்கைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். எல்லோரோடும் இணைந்தும் பணியாற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜகான், மாவட்ட துணைச் செயலாளர் நீடூர் மிஸ்பா, மாயவரம் ஒன்றிய செயலாளர் ஜெப்ருதீன், மாவட்ட விவசாய அணி செயலாளர் லியாகத் அலி, மருத்துவ சேவை அணி செயலாளர் நூருல் அமீன் மற்றும் மஜக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மயிலாடுதுறை_மாவட்டம்
29.01.2022