தமிழ் பேரரசு கட்சி தலைவர் இயக்குனர் கெளதமன் ஆதரவு அறிக்கை..!

ஆயுள் சிறை வாசிகளை விடுதலை செய்வதில் ஒரு அரசே பேதம் பார்ப்பது என்பது நேர்மையற்றது என்பது மட்டுமல்ல, அது ஒரு அறமற்ற செயல்.

தமிழ்நாடு அரசு இனியும் கால தாமதமில்லாமல் பத்தாண்டுகளுக்கு மேல் சிறையிலிருக்கும் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழ் பேரரசு கட்சியின் சார்பாக உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

சிறையில் வாடும் சிறைவாசிகளுக்குள் பேதம் பார்ப்பதென்பது மனிதநேயமற்ற ஒரு மனநிலை, தனிமை சிறைவாசம் என்பது அனைவருக்கும் ஒரே வலியைத்தான் கொடுக்குமே தவிர அது மதம் பார்த்து கூடுவதுமில்லை, குறைவதுமில்லை.

சாதி மத பேதமின்றி, பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஜனவரி 8 – கோவையில் அணி திரள்வோம், நீதியை வென்றெடுப்போம் என்கிற முழக்கத்தோடு மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுக்க இருக்கும் இந்த போராட்டம் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக அமையட்டும்.

அரசின் மெத்தனப் போக்காலும், ஆளும் அதிகார வர்க்கங்களின் அதிகாரத் திமிராலும் இப்பூமிப்பந்தில் சரிந்தொழிந்த சரித்திரங்கள் எண்ணில் அடங்காதவை, மனிதனை மனிதனாகவே பார்க்கும் மனநிலை மட்டும்தான் மனித வாழ்வியலை வசந்தமாக்கும், இது அனைத்து அரசுகளுக்கும் பொருந்தும், இந்த பாரபட்சமுள்ள போக்கை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்து, கிருத்துவர், இஸ்லாமியர் என வெவ்வேறு மதங்களில் வாழ்ந்தாலும் மரபணுவாக, மரபு ரீதியாக நாங்கள் உயிருக்குயிரான சகோதரர்கள், எங்களுக்குள் வித்தியாசமின்றி நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போது எங்களை ஆளும் அரசுகள் மட்டும் எப்படி எங்களை பிளவுப்படுத்தி சிக்கலை உருவாக்க முடியும்? எனது பேரன்பிற்குரிய சகோதரர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் முன்னெடுக்கும் இந்த போராட்டத்தினை தமிழ்ப் பேரரசு கட்சி முழுமனதுடன் ஆதரித்து வரவேற்கிறது.

நீதி நிமிர்ந்து அடிமைத்தளை தகர்ந்து எம் உறவுகள் அனைவரும் விடுதலை ஆகட்டும். இந்த வரலாற்று திருப்புமுனைப் போராட்டம் மாபெரும் வெற்றியடையட்டும்.

எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும்
எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்.

வெல்வோம்.

பெரு நம்பிக்கையோடு,

வ.கௌதமன்
பொதுச்செயலாளர்
சோழன் குடில்
03.01.2022