மாற்றுக்கருத்துகள் தான் ஜனநாயகத்தை அழகுப்படுத்தும்… மயிலாடுதுறையில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி!!


பிப்.17,

மயிலாடுதுறை மாவட்ட மஜக துணைச் செயலாளர் அஜ்மல் உசேன் இல்ல மணவிழாவில் பங்கேற்க இன்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA மாயவரம் வருகை தந்தார்.

அவருடன் மாநில செயலாளர் ராசுதீன், மாநில விவசாய அணி செயலாளர் அப்துல் சலாம், MJVS மாநில துணைச் செயலாளர் மாலிக் ஆகியோரும் வருகை தந்தனர்.

அவர் அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது, டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டங்களை நேர்மையான முறையில் அணுகாமல், குறுக்கு வழியில் முடக்க மத்திய அரசு முயல்வதாகவும், ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து பகிர்ந்த மாணவி திஷா ரவியை கைது செய்ததை கண்டித்தவர், ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கக் கூடாது என்றார்.

மாற்று கருத்துகள்தான் ஜனநாயகத்தை அழகுப்படுத்தும் என்றவர், அவரை விடுதலை செய்து சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

புதுச்சேரி மாநில அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், குடியரசு தலைவர் அவர்கள், துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை பதவி நீக்கம் செய்திருப்பதன் மூலம் அவர் மீதான குற்றச்சாட்டுகள் சரி காணப்பட்டிருப்பதாக கூறினார்.

மேலும் அங்கு காங்கிரஸ் MLA க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வது குறித்து கூறும் போது, பல மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சி கவிழ்ப்பை நடத்தி மத்திய பாஜக அரசு தனக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி வருகிறது. அந்த வேலை புதுச்சேரியிலும் நடக்கிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றார்.

பெட்ரோல், டீசல், எரிவாயு விலையேற்றம் குறித்த கேள்விக்கு, மத்திய பாஜக அரசு அம்பானி, அதானி போன்ற பெருநிறுவனங்களின் நலன்களுக்கேற்ப செயல்படுவதாகவும், சாமானியர்கள், ஏழைகள் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்றார்.

நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற இந்த விலையேற்றத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

பெட்ரோல் ஒரு லிட்டர் இலங்கையில் 62 ரூபாயும், பங்ளாதேஷில் 78 ரூபாயும் விற்கப்படுகிறது.

நாம் ஏற்றுமதி செய்யும் பெட்ரோலின் விலை 33 ரூபாயாக இருக்கிறது.

ஆனால் உள்நாட்டில் இதை அதிக விலைக்கு விற்பது ஏன் ? என கேள்வி எழுப்பினார்.

இச்சந்திப்பின் போது, மாவட்ட துணை செயலாளர்கள் ஆக்கூர் ஷாஜஹான், தைக்கால் அசேன் அலி, மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டல துணை செயலாளர் மாயவரம் சபிர் அஹமது, விவசாய அணி மாவட்ட செயலாளர் வாணதி ராஜப்புரம் ஹாஜா சலீம், தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் நீடூர் ஜெப்ருதீன் மற்றும் ஒன்றிய,நகர,கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட செயல் வீரர்கள் உடனிருந்தனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#மயிலாடுதுறை_மாவட்டம்.