மாணவர்களின் போராட்டம் தமிழர்களின் வசந்த காலம்!

சட்டமன்றத்தில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA உரை!

(நேற்றைய சட்டமன்ற உரையின் முக்கிய பகுதி)

ஜல்லிகட்டுக்காக நம்முடைய மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய ஒரு சிறப்பான போராட்டத்தை நான் மனதார வரவேற்று பாராட்டுகிறேன்.

அவர்கள் நடத்திய போராட்டம் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஒரு சிறப்பான சட்டத்தை மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு நிறைவேற்றக்கூடிய ஒரு வாய்ப்பினையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

அரசியலை ஒதுக்கி, பொதுவாழ்வின் மீது அக்கறையில்லாமல் விலகிக்கொண்டிருந்த ஒரு புதிய தலைமுறையினர் பொதுவாழ்வுக்கு வந்திருக்கின்றனர், அரசியலுக்கு வந்திருக்கின்றனர்.

துனிசிய புரட்சியை, எகிப்து புரட்சியை அரபு வசந்தம் என்று வர்ணித்தார்கள். அதுபோன்று நம்முடைய மாணவர்களும், இளைஞர்களும் நம்முடைய இனம் காக்க, மொழி காக்க, மாநிலத்தின் உரிமைகளைக் காக்க நடத்திய இந்தப் போராட்டத்தை நான்
‘தை புரட்சி’ என்று வாழ்த்துகின்றேன்.

இது தமிழர்களுடைய வசந்த காலம் என்று வாழ்த்துகின்றேன். அந்தப் போராட்டத்திலே ஒழுங்குகள் இருந்தன. என்னவென்று சொன்னால், நடிகை நயன்தாரா வந்தார், எந்தவொரு மாணவரும் அங்கே நயன்தாராவுடன் செல்பி எடுக்கவில்லை. இது அந்த போரட்டத்தினுடைய  ஒரு சிறப்பாக நான் கருதுகிறேன்.

அங்கே நடிகர்கள் வந்தார்கள், நடிகர்களோடு போட்டிப்போட்டு கொண்டு யாரும் செல்பி எடுக்கவில்லை. அப்படிபட்ட ஒழுக்கம் அந்தப் போராட்டத்திலே இருந்தது. இரவிலே மாணவிகளும், பெண்களும் மணலிலே படுத்து உறங்கினர். மாணவர்கள் சுற்றி வளைத்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கின்றனர்.

ஒரு மாணவன் சாக்குப் பையை எடுத்துக்கொண்டு மெரினாவில் செல்கின்றான்; ஒரு முஸ்லிம் மாணவி அங்கிருந்த குப்பைகளை, தாங்கள் சாப்பிட்ட உணவுப் பொட்டலங்களின் கழிவுகளையெல்லாம் அந்தப் பையில் எடுத்து போட்டு கொண்டு உடன் செல்கிறார்.

ஒரு தாழ்தப்பட்ட மாணவனும், பிற்படுத்தப்பட்ட மாணவனும் கைகோர்த்து ‘நாங்கள் தமிழன்டா’  என்று முழங்குகின்றனர். சிலுவை அணிந்த ஒரு கிறுஸ்துவ சகோதரன் ஜல்லிக்கட்டு வேண்டுமென்று முழங்குகின்றான்.

சமய ஒற்றுமை, சாதி நல்லிணக்க ஒற்றுமை அங்கே பேணப்பட்டது.

அங்கே வெள்ளிகிழமை அன்று, முஸ்லிம் மாணவர்கள் தொழுகை நடத்தினர். அவர்களுக்கு பாதுக்காப்பாக பிராமண சமுதாய மாணவர்களும், கிறுஸ்துவ சமுதாய மாணவர்களும், பிற சமூக மாணவர்களும் அரணாக நின்று அவர்கள் தொழுகை நடத்துவதற்கு அங்கே வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். இதை நான் மிகவும் ரசிக்கின்றேன்; பாராட்டுகிறேன்.

இத்தப் போராட்டம் நடைப்பெற்ற காலத்தில் நாம் வாழ்வதற்காக, நாம் பெருமைப்பட வேண்டும். பெரியாருடைய சிந்தனைகளகள், அண்ணாவுடைய சிந்தனைகள், ஐயா காமராஜருடைய சிந்தனைகளையெல்லாம் ஒரு புதிய தலைமுறை ஏற்றுக்கொண்டு பொதுவாழ்விற்கு வந்திருப்பதாக நான் கருதுகின்றேன்.

இந்த நேரத்தில், மாணவர்கள் ஒன்றை செய்திருந்தால் இந்தப் போராட்டம் இன்னும் சிறப்பாக, நாம் எல்லோரும் மகிழ்ச்சியடையக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கும்.

என்னவென்று சொன்னால், தங்களுக்கென்று தலைமையற்ற நிலையிலே மாணவர்கள் இருந்ததால் ஒவ்வொருவரும் அங்கே புகுந்து சில குழப்பங்களை, தேவையற்ற முழக்கங்களை எழுப்பியிருக்கின்றனர்.

நம்முடைய முதலமைச்சரைப் பற்றிக்கூட தவறான முழக்கங்களை எழுப்பினார்கள். அவையெல்லாம் கண்டிக்கதக்கது.

அந்த மாணவ கண்மணிகள் ஓர் அருமையான போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

அவர்கள் ஒன்றை செய்திருக்க வேண்டும்.
எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சில தலைவர்கள் தமிழ்நாட்டிலே இருக்கிறார்கள். ஐயா நல்லகண்ணு அவர்கள், ஐயா பழ.நெடுமாறன் அவர்கள், ஐயா நீதிபதி அரி பரந்தாமன் போன்றவர்களை எல்லாம் அவர்கள் ஒரு குழுவாக நியமித்து, ஒழுங்குபடுத்தியிருந்தார்கள் என்று சொன்னால், பொறுப்பற்ற சிலர் அங்கே நுழைத்திருக்கமாட்டார்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

எனினும் இந்த நேரத்திலே தமிழ்நாட்டு மக்கள் சாதி, மத வேறுபாடுகள் கடந்து, அண்ணன் தம்பிகளாக ஜல்லிக்கட்டின் மூலமாக இணைந்திருப்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த நேரத்திலே ஒரு சிறிய கருத்தை உங்களுடைய கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன். கடந்த வெள்ளிக்கிழமையன்று நீங்கள் இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவருடைய கவன ஈர்ப்பு பதிலளிக்கின்றபொழுது, சிலர் ஒசாமா பின் லேடன் படத்தை அந்த போராட்டக் களத்திலே காட்டினார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள்.

அதாவது, அந்த போராட்டக் களத்திலே அப்படி ஒரு படத்தை காட்டினார்கள் என்று, நீங்கள் சொன்னவுடன் அவை முடிந்தவுடன் உங்களை நேரில் நான சந்தித்தேன். ஐயா அந்தப் படத்தை நான் பார்க்க வேண்டுமென்று சொன்னேன். நீங்களும் அலுவலர்களிடம் சொல்லி அந்தப் படத்தை தந்தீர்கள்.

அதை நான் உற்றுப் பார்த்தேன், ஐயா அதிலே ஒரு விஷயம். சாலையிலே சென்ற ஒரு பைக்கிலே ஒசாமா பின் லேடனுடைய படம் ஒட்டப்பட்டிருந்தது.

ஆனால் நீங்கள்  கூறியது போன்று அப்படிப்பட்ட எந்த பதாகைகளும் மெரினா போராட்டக் களத்திலே யாரும் காட்டவில்லை என்பதை ஐயா அவர்களின் கனிவான கவனத்திற்கு நான் கொண்டு வருகின்றேன். நீங்கள் இதை வேண்டுமென்று செய்யவில்லை, எனக்கு தெரியும். நீங்கள
ஒரு மிகச் சிறந்த பண்பாளர், எல்லா சமூக மக்களையும் அண்ணன் , தம்பிகளாக மதிக்கக்கூடியவர் என்பது எனக்குத் தெரியும்.

இந்த நேரத்திலே நான் இதை ஏன் சுட்டிக்காட்டுகிறேன் என்று சொன்னால் , அந்த ஒன்றினால் ஒரு சமூகம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது . நீங்கள் அதையெல்லாம் விரும்பமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும் ,எனவே உங்களுடைய அன்பான கவனத்திற்குக் இதை கொண்டு வருகிறேன் .

ஒசாமா பின்லேடன் போன்றவர்களை யாரும் தமிழ்நாட்டிலே ஆதரிக்கவில்லை . தமிழ்நாட்டிலே இருக்கிற முஸ்லிம் சமுதாயம் உங்கள் எல்லோரோடும் மாமன் மச்சான்களாக , அண்ணன் தம்பிகளாக , அக்கா தங்கைகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.( மேசையை தட்டும் ஒலி )

முஸ்லிம் சமூகம் பொது நீரோட்டத்திலே இணைந்திருக்கிறது என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

அதற்காக தங்களின் கனிவான பார்வைக்கு விளக்கத்தை கொடுத்தேன் , ஏனென்றால், சில அதிகாரிகள் தவறாக சில படங்களைத் தந்துவிடுவார்கள் . அந்த அடிப்படையில் நீங்கள் அதை எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள் . அதற்கு நான் விளக்கத்தைத் தந்திருக்கிறேன் . உங்களுடைய அன்புக்கும் , விளக்கத்திற்கும் நன்றி .

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(MJK IT-WING)