காரைக்கால் MARG தனியார் துறைமுகத்திற்க்கு எதிராக நாகை MLA பேச்சு!

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!
என்னுடைய தொகுதி கோரிக்கைகளுக்கு நான் நேரிடையாக வர விரும்புகின்றேன்.

என்னுடைய நாகப்பட்டினம் தொகுதிக்கு அருகிலே, புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட காரைக்கால் அமைந்திருக்கிறது.

நாகூருக்கும், காரைக்காலுக்கும் இடையிலே MARG என்ற தனியார் நிறுவனத்தின் துறைமுகம் இருக்கிறது. அந்த தனியார் துறைமுகத்திற்கு இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.

நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகின்றபோது, சுட்டிகாட்டப்பட்ட எந்த விதிகளையும் அந்த MARG தனியார் துறைமுக நிறுவனம் பின்பற்றவில்லை, அதனால் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகின்றபோது, தூசிகள் எழுந்து நாகூர், பட்டினச்சேரி, மேலவாஞ்சூர் போன்ற பகுதிகளில் வாழக்கூடிய மக்களுக்கு ஒரு மிகப்பெரிய சுகாதார சீர்கேட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

காலையில் கொடிகளிலே துணிகளை காயவைத்தால் மாலை வந்து பார்க்கின்றபோது, அந்த துணிகள் கறுப்பாக இருக்கின்றன. செருப்பில்லாமல் நடந்து சென்றால் கால்கள் கருப்பாகி விடுகின்றன. தோல் நோய்கள் ஏற்படுகின்றன; நுரையீரல் சுவாசக்கோளாறுகள் ஏற்படுகின்றன.

பல சமூக சிக்கல்களிலே நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றனர். நாகூருக்கு சுற்றுலா வரக்கூடிய மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எனவே மாண்புமிகு அம்மா அவர்களால் உருவாக்கிய இந்த அரசு, இந்த விஷயத்திலே கவனம் செலுத்தி புதுச்சேரி அரசுடன் பேசவேண்டும். நம்முடைய சுற்றுச்சூழல் துறையின் சார்பிலே உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
31.01.17