டெல்டா விவசாயிகள் நீதி கேட்டு நெடும் பயணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு…!


ஜன.10,

மத்திய அரசின் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் P.R பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நீதிகேட்டு நெடும்பயணத்தை நடத்தி வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் பரப்பான இந்நிகழ்வில் இன்று திருவாரூரில் மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பங்கேற்று பேசினார்.

அதிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

புறாவுக்காக தன் தொடை சதையை அறுத்துக் கொடுத்து நீதியை நிலைநாட்டிய சோழமன்னர் சிபி ஆண்ட திருவாரூரில் இன்று மத்திய அரசிடம் நீதி கேட்டு நிற்கிறோம்.

விவசாயிகளை அலட்சியப் படுத்துபவர்கள் நம் நாட்டில் வென்றதில்லை என்பது வரலாறு.

இன்று நம் விவசாயிகள் டெல்லியில் போராடுவதை நாடே உற்று கவனிக்கிறது.

உலகப் பத்திரிகைகள் முதல் பக்க செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அவர்கள் நம் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்திரிக்கிறார் .

இந்தியா ஐ.நா.வில் ஒரு அங்கம் என்பதை மறந்து விடக்கூடாது.

நாம் வழியெங்கும் நகரில் நடந்து வந்தோம். வீதிகளில், கடைகளில் நின்றவர்கள், கட்டிடங்களில் நின்றவர்கள், வாகனங்களில் பயணித்தவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் இரக்கம் சொட்ட நம் கோரிக்கையை கவனிப்பதை உணரமுடிந்தது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இளைஞர்கள் உட்பட பலரும் விவசாயிகளின் போராட்டத்தை கவலை ததும்ப பார்க்கின்றனர்.

விவசாயிகளை இளக்காரமாகப் பார்க்க கூடாது. ஆட்சியில் உள்ள சிலர் அப்படி பார்க்கிறார்கள்.

அவர்கள் நம் வாழ்வுக்காக, உணவுக்காக, மண்ணுக்காக போராடுகிறார்கள்.

அவர்கள் ஆயுதப் புரட்சி செய்ய மாட்டார்கள். பசுமை புரட்சியை செய்வார்கள்.

அவர்களது டிராக்டர்கள் தான் அவர்களது பீரங்கிகள் என்பதை மறந்து விடாதீர்கள்.

விலை உயர்ந்த கார்கள் செல்லும் டெல்லி வீதிகளில் இன்று விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் ஒத்திகை பார்க்கிறார்கள்.

தங்கள் விவசாய இழப்புகளை, வருமான இழப்பை பற்றி கவலைப்படாமல் 6 மாதங்களுக்கான உணவுகளோடு வந்து இறங்கிவிட்டார்கள்.

பஞ்சாபிகள் தொடங்கி வைத்த போராட்டம் இங்கு தமிழர்களால் முன்னெடுக்கப்படுகிறது. பஞ்சாபிகள்,வங்காளிகள், தமிழர்கள் ஆகியோரின் போராட்டங்கள் தோற்றதில்லை.

இதை மத்திய பாஜக அரசு புரிந்துக் கொள்ள வேண்டும்.

மத்திய அரசு உண்மையிலேயே விவசாயிகளின் லாபத்தை இரட்டிப்பாக்க வேண்டும் எனில், வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் அவர்களின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.

ஆனால் அம்பானி, அதானி போன்றவர்களுக்காக விவசாயிகள் விரும்பாத புதிய சட்டங்களை திணிக்கிறார்கள்.

விவசாயிகள் அவர்களுக்கு முக்கியமானவர்களாக தெரியவில்லை.

எனவே நாம் விவசாயிகளின் நலனுக்காக நடக்கும் போராட்டங்களை வலிமைப்படுத்த வேண்டும்.

எல்லா விவசாய சங்கங்களும் இணைந்து போராட வேண்டிய காலம் கனிந்து வருகிறது. விவசாயிகளின் உரிமைக்காக, நீதிக்காக களமிறங்கி போராடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக காவிரி விவசாய சங்கம் நடத்தும் இந்நிகழ்வுக்கு டெல்டா மாவட்ட கிராமங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் வினியோகிக்கும் துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் வாங்கி விரும்பி படிப்பதை பார்க்க முடிகிறது.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.