உபி மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்! மஜக தலைமை நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம்!


அக்.11,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் இன்று (11.10.2020) பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில், தஞ்சாவூர் ஹைதர் பார்க் ஹோட்டலில் நடைப்பெற்றது.

சமூக இடைவெளியுடன் நடைப்பெற்ற இக்கூட்டத்தில், பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், துணைப் பொதுச் செயலாளர்கள் ராவுத்தர்ஷா, செல்லச்சாமி, சுல்தான் அமீர், மாநிலச் செயலாளர்கள் நாச்சிகுளம். தாஜ்தீன், ராசுதீன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு…

1. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பாலியல் கூட்டு வன்முறைக்கு பலியான சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் இக் கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த அநீதிக்கு துணை போகும் உ.பி மாநில அரசை கண்டிப்பதுடன், சட்டம் ஒழுங்கை தவறாக கையாளும் உ.பி. மாநில பாஜக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

2. திண்டுக்கல் மாவட்டம் குரும்பட்டியை சேர்ந்த, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட சிறுமியின் வழக்கில், குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில், தமிழக அரசு மேல் முறையீடு செய்வதில் உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இக் கூட்டம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

3. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இச்சட்டங்களை திரும்ப பெற்று, விவசாயிகள் கூறும் திருத்தங்களுடன் அதை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

4. சமீப காலமாக இந்திய நீதித்துறையின் மீது பொதுமக்களிடம் எழுந்திருக்கும் அவநம்பிக்கைகளை இக் கூட்டம் கவலையோடு நோக்குகிறது.

குறிப்பாக பாபர் மசூதியை இடித்தவர்கள் மீதான வழக்கில், லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது அநீதியானது என்பதை சுட்டிக்காட்டி, அதற்கு இக் கூட்டம் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது.

5. தேர்தல் அரசியலில் ஜனநாயக சக்திகள் மற்றும் சமூக நீதி சார்ந்த அமைப்புகள், கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது என்றும் முடிவானது.

6. இந்தியாவின் எல்லைப் பகுதியில், படைகளை குவித்து பதட்டத்தை ஏற்படுத்தி வரும் சீனாவை இக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

அமைதி பேச்சுவார்த்தை மூலமே இரு நாட்டு எல்லை பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்றும் இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

7. கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கும் இக் கூட்டம் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

கொரோனா தொற்று தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், மக்கள் அரசின் வழிகாட்டலை அவசியம் பின்பற்றுமாறு இக் கூட்டம் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.

8. தற்போதைய தமிழக அரசியல் சூழலை கூர்ந்து உன்னிப்பாக கவனித்து வருவது என்றும், டிசம்பர் இறுதி வார நிகழ்வுகளுக்கு ஏற்ப முடிவுகளை மேற்கொள்வது என்றும் இக் கூட்டம் முடிவு செய்கிறது.

9. கட்சியின் அடுத்த தலைமை செயற்குழு கூட்டத்தை நெல்லையில் கூட்டுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

10. டிசம்பர் 31 வரை தீவிர உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுப்பது என்றும், கிளை கட்டமைப்புகளை அதிகப்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தலைமையகம்.