கத்தார் மனிதநேய கலாச்சார பேரவையின் சார்பில் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு காணொளி வழி கருத்தரங்கு நடைபெற்றது.
அதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…
இந்த சிறப்புமிகு காணொளி வழி கருத்தரங்கில், அந்திசாயும் மாலை பொழுதில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் வழியாக உங்களையெல்லாம் சந்திப்பதிலே மகிழ்ச்சி அடைகின்றேன்.
கடல் பிரித்தாலும் மனிதநேயம் இணைக்கும் என்ற நிலையிலே நாம் எல்லோரும் இங்கே கூடி இருக்கின்றோம்.
நாட்டில் பொழுது போக்கக்கூடிய நிகழ்ச்சிகள் எத்தனையோ நடைப்பெற்றாலும், சமுதாயத்தை பழுது பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகள் அரிதாகவே நடைபெறுக்கின்றன.
அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
“காந்தி தேசமும்,சமகால அரசியலும்” என்ற தலைப்பிலே மனிதநேய சொந்தங்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
கத்தாரையும் கடந்து உலகெங்கிலும் வாழக்கூடிய மனித உரிமை ஆர்வலர்கள் எல்லோரும் இங்கே இணைந்து இருக்கின்றோம்.
இந்த நிகழ்வை ஏன் இன்றைய தினம் ஏற்பாடு செய்ய வேண்டும்? எத்தனையோ காரணங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
காந்தியடிகளின் 151வது பிறந்த தினமான இன்றைய நாளில், அவரைப் பற்றிப் பேசுவதும், அவரது கொள்கைகளை விளக்குவதும் அவரது கொள்கைகள் இந்த காலகட்டத்தில் எவ்வளவு தேவைப்படுகிறது என்பதை பரப்புரை ஆற்றவும், இன்றைய தினத்திலே இந்த நிகழ்வை நாம் முன்னெடுத்துள்ளோம்.
நாம் காந்தியை அதிகமாக படிக்க வேண்டும். காந்தியை பற்றி அதிகமாக பேச வேண்டும், காந்தியின் கொள்கைகளை அதிவேகமாக பரப்ப வேண்டும் என்ற நிலையிலேயே நாம் இருக்கின்றோம்.
ஏனென்றால், காந்தி அஹிம்சையை போதித்தார். ஜனநாயகத்தை போதித்தார். சமூகநீதியை போதித்தார். சகிப்புத்தன்மையை போதித்தார். வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டை போதித்தார். இந்தியா என்பது பல்வேறு மொழிகளையும், பிராந்தியங்களையும், மதங்களையும், சாதிகளையும், மொழிகளையும் கொண்ட ஒன்றியம் என்பதை அவர் போதித்தார். எல்லோரும் ஒருதாய் மக்களாக வாழவேண்டும் என்பதை போதித்தார்.
வகுப்பு வாதத்திற்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தினார். அதற்கு தன் இன்னுயிரையும் ஈந்தார்.
அப்படிப்பட்ட ஒரு பெருமகனுடைய பிறந்தநாளை பயனுள்ள வகையில் அவரது கொள்கைகளை எடுத்துக் கூறும் வகையில், பயனுள்ள நிகழ்வாக மாற்ற வேண்டுமென்று என்ற நோக்கத்தோடு நமது தோழர்கள் இந்த நிகழ்வை எடுத்திருப்பது மனிதநேய ஜனநாயக கட்சி ஒரு அறிவார்ந்த இயக்கம்; ஜனநாயகத்தை; சமூக நீதியை; மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக காந்திய வழியிலே பாடுபடுகின்ற ஒரு இயக்கம்; என்ற வகையிலே இந்த நிகழ்வை நாம் முன்னெடுத்து இதிலே நாம் இணைந்து இருக்கின்றோம்.
காந்தியடிகளைப் பற்றி கூற வேண்டியதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றது.
இன்று காந்தியை சிலர் வெறுக்கிறார்கள். எந்த அளவுக்கு வெறுக்கிறார்கள் என்றால், காந்தியின் படத்தை வரைந்து அதை துப்பாக்கியால் சுட்டு தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.
சமீபத்தில் தமிழகத்தில் குறிப்பிட்ட உயர் சமூகத்தை சேர்ந்த பெண்மணி காணொலியில் பேட்டி அளிக்கிறார். அது எனக்கு ஆராத ரணத்தை ஏற்படுத்தியது. ‘காந்தியை முன்னதாகவே படுகொலை செய்து இருக்க வேண்டும். படுகொலை நிகழ்வு என்பது தாமதமாக நடைபெற்றது’ என்று பேசினார். நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன்.
இந்த நாட்டு விடுதலைக்காக அரும்பாடுபட்ட தலைவர்களிலேயே முக்கியமானவர் காந்தியடிகள். அவரது கொள்கையை இன்று ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், ஆசியாவின் பலநாடுகளிலும் பேசுகிறார்கள்.
காந்தியை இந்தியாவின் அடையாளமாக கருதி, அதை
கொண்டு இந்தியாவை புகழ்கிறார்கள். பாராட்டுகிறார்கள்.
காந்தியின் தத்துவங்கள் இன்று உலகின் பல்வேறு நாடுகளிலே பல்கலைகழகங்களில் பாடங்களாக வைக்கப்பட்டிருக்கின்றன.
காந்தியை போற்றும் பல்வேறு நிகழ்வு உலகம் முழுக்க நடைப்பெற்று கொண்டிருக்கின்றன.
அத்தகைய சிறப்புக்குரிய காந்தியை இன்று இழிவு படுத்துகிறார்கள்.
ஒன்று அவரது வரைபடத்தை வரைந்து துப்பாக்கியால் சுட்டு தங்களுடைய வன்மத்தை தீர்க்கின்றனர். அடுத்து முன்னதாகவே அவரை கொலை செய்திருக்க வேண்டும் என்றும் அந்த கொலை தாமதமாகதான் நடைப்பெற்றது என்று பேசுகிறார்கள்.
அதையெல்லாம் விட கொடுமை காந்தியை கொன்ற கோட்சேவின் குடும்பத்தினர் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஜகவினர் வாய்ப்பு இந்த நாடு கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறது.
நாம் இந்த நேரத்திலே காந்தியை பற்றி ஏன் அதிகமாக பேசவேண்டும் என்று நினைக்கிறோம் என்று சொன்னேன்.
காந்தி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினார். சமூகங்களுக்கிடையே உறவுகளை வளர்க்க பாடுபட்டார். மதவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்த்தார். விளிம்புநிலை மக்கள், பின்தங்கிய மக்கள் சமூகத்திலே சமத்துவத்தையும்,அங்கீகாரத்தையும் பெற வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தார்
எந்த நிலையிலும் காந்தி அவர்கள் தன் கொள்கையை விட்டுக் கொடுக்க வில்லை.
காந்திஜியோடு நமக்கு சில முரண்பாடுகள் உண்டு. பூனா ஒப்பந்தத்தில் அவருக்கும். அம்பேத்கருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலில் நாம் கவனம் செலுத்தினால், அங்கே நாம் அம்பேத்கர் பக்கம்தான் இருப்போம்.
பகத்சிங் விவகாரத்தில் அவரது அணுகுமுறையை எடுத்துக் கொண்டால், நாம் பகத்சிங்கிற்கு ஆதரவாகத்தான் இருப்போம்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கும் நேருவுக்கும் நடைபெற்ற நிகழ்வுகளிலே காந்தியின் நிலைப்பாடு கொள்கை அடிப்படையிலே சரி தான் என்றாலும், நேதாஜிக்கு கூடுதலாக இன்னும் கருணை காட்டி, ஆதரித்து இருக்க வேண்டும் என்ற வகையில் நாம் நேதாஜியை ஆதரிக்கின்றோம்.
இப்படி சில முரண்பாடுகள் காந்தியாருடன் நமக்கு நமக்கு உண்டு. இவை நேச முரண்பாடுகள்,
பாசத்திற்குரிய முரண்பாடுகள்,
ஒருவருக்கொருவர் இருக்கக் கூடிய ஆரோக்கியமான முரண்பாடுகள்.
ஆனால் இதையெல்லாம் கடந்து காந்தியடிகள் அவர்கள் இந்த மண்ணிற்கு ஆற்றிய தொண்டை நினைத்துப் பார்க்கின்றோம். அவரதுபங்களிப்பை நினைத்துப் பார்க்கின்றோம்.
விடுதலைக்கு அவர் எடுத்த முயற்சிகளை நினைத்துப் பார்க்கின்றோம்.
பலநாடுகளிலே விடுதலை போராட்டங்கள் ஆயுதங்கள் வழியே நடைப்பெற்றது.
அவை அமெரிக்காவுடைய விடுதலை போராட்டமாக இருக்கட்டும். ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளுடைய விடுதலை போராட்டமாக இருக்கட்டும்.
அவை எல்லாம் ஆயுதங்களின் வழிநின்று போராடிய போராட்டங்கள்.
நம் நாட்டில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் நடைபெற்ற புரட்சிகள், ஆயுத போராட்டங்கள் வரலாற்றின் ஒருபகுதியாக இருந்தாலும், நிறைவாக காந்தியடிகளுடைய அகிம்சை வழி போராட்டங்கள்தான் ஆங்கிலேயரை குலைநடுங்க செய்தது.
ஆயுதங்கள் இன்றி, மேலாடையுடன் சுற்றி வந்த காந்தியடிகளை கண்டு ஆங்கிலேய பேரரசு நடுங்கியது என்பதுதான் உண்மை.
காந்தியடிகள் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார் என்பதை படிக்கும் போது ஆச்சரியம் மேலிடுகிறது.
ஓரே ஒரு சம்பவத்தை கூறி காந்தியை பற்றி நிறைவு செய்ய விரும்புகிறேன்.
இந்தியா சுதந்திரம் அடையக்கூடிய தேதி முடிவு செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 15/1947 நள்ளிரவிலே சுதந்திரம் வழங்கப்படுகிறது.
வெள்ளையனே வெளியேறு இயக்கம்,ஒத்துழையாமை இயக்கம், உப்புசத்தியாகிரக இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் என பல்வேறு இயக்கங்களை கட்டி, இந்தியாவுடைய விடுதலையை கூர்த்தீட்டிய காந்தி அவர்கள், சுதந்திரம் தீர்மானிக்கபட்ட அன்றைய தினம் எங்கு இருந்தார் ? என்ன செய்து கொண்டிருந்தார்.?
நவகாளியிலே இந்து – முஸ்லிம் கலவரம் ஏற்பட்டுகின்றது. இரு தரப்பிலும் இருக்க கூடிய மதவெறி சக்திகள் மக்களை பிளவுபடுத்தி உயிர்களை கொல்லக்கூடிய ஒரு சூழல், அந்த நேரத்திலே காந்தியடிகள் இந்திய சுதந்திர நிகழ்ச்சிகளிலே பங்கேற்காமல் தம்முடைய மகிழ்ச்சியை தொலைத்து கலவரங்களை அமைதி படுத்த அங்கு முகாமிட்டார்.
இந்திய விடுதலைக்காக பாடுபட்டார். இந்திய சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தார். சுதந்திரம் பெறும் நாளில் நாடெங்கிலும் ரத்த ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கிறதே என்று பதறி துடித்தார். கதறி அழுதார்.
அந்த மனிதர் நவகாளியிலே இந்து- முஸ்லிம் கலவரத்தை பார்த்தார். அண்ணன் தம்பிகளாய் வாழ்ந்த அந்த மக்களை பிளவு படுத்திய தீய சக்திகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்.
அந்த கலவரத்தை அடக்குவதற்காக தன் உயிரை பற்றியும் கவலைப்படாமல் அங்கே முகாமிட்டார்.
காந்தி 1% என்ற நூலை நான் சமீபத்திலே படித்தேன். புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் எழுதிய ஒரு நூல்!
காந்திஜியுடைய கடைசி நாட்களை மிகவும் உருக்கமான தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ள சுருக்கமாக ஒரு நூல்
அதை படித்து கொண்டிருந்த போது பல இடங்களில் கண் கலங்கினேன்.
இரத்தமும்,சதையுமாக இப்படிபட்ட ஒருவர், நமது தாத்தா காலத்தில் வாழ்ந்து சென்றிருக்கிறார்.
அந்த மனிதர் ஏற்படுத்திய தாக்கம் 1947 க்கு பிறகு. ஏறத்தாழ ஐம்பது முதல் அறுபது ஆண்டு காலம் மிக நெடிய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தி இருந்தது என்பதை மறுக்க முடியாது.
சுதந்திரம் பெற்ற நள்ளிரவில் காந்தி டெல்லி செங்கோட்டையிலே இல்லை.
டெல்லி மாநகர வீதிகளிலே மக்களோடு மக்களாக இணைந்து மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பில் அவர் இடம்பெறவில்லை.
அதை விரும்பவுமில்லை.
மாறாக நவகாளியில், கல்கத்தாவுடைய வீதியில் ஒரு பாழடைந்த பங்களாவில் வைக்கோல் கிடத்தப் பட்டிருந்த ஒரு இடத்தில், அமைதி பணிகளிடையே,அந்த வைக்கோலின் மீது ஒரு போர்வையை விரித்து அதில் படுத்து கிடந்திருக்கிறார். அதில் கவலையோடு அவர் படுத்து உறங்கியதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.
இந்த சம்பவத்தை அந்த புத்தகத்தில் படிக்கும் போது என்னை அறியாமல் கலங்கி விட்டேன்.
அந்த பங்களாவிலேயே காந்தியை தாக்குவதற்கு சூழ்ச்சிகள் நடந்தது. யார் அந்த சுழ்ச்சியை செய்தார்கள்?அன்று காந்தியை யார் சுட்டு கொன்றார்களோ அவர்களுடைய உறவினர்கள், கொள்கை சொந்தங்கள், சங்பரிவார ஆதரவு சக்திகள், இந்த நாட்டினுடைய அமைதியை, நல்லிணக்கத்தை சீரழித்து கொண்டிருக்கக்கூடிய சக்திகள் அன்றும் காந்தியை கொலை செய்ய முயற்சி செய்தார்கள்.
இவையெல்லாம் மறுத்துவிட முடியுமா?
இன்று காந்தி நம்மிடம் இல்லை ஆனால் காந்தி உடைய கொள்கைகள் உயிரோடு இருந்து கொண்டிருக்கிறது.
காந்தியை சுட்டு கொன்றவர்களால்,காந்திய கொள்கைகள் இன்று உயிர்த்துடிப்போடு இருப்பதை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.
தற்போது இவர்கள் அதிகாரத்திலே; பொறுப்பிலே; இருப்பதாலே காந்தியை பாராட்டுவது போல் பாராட்டுகிறார்கள்.
ஆனால் இவர்கள் உள்ளங்களிலே காந்தி எதிர்ப்பு கடுமையாக இருந்து கொண்டிருக்கிறது. காந்தியை பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு கோபம் வருகிறது.
ஏன் அந்த கோபம்? எதற்காக இந்த கோபம்? காந்தி மிகச்சிறந்த இந்து! ஒவ்வொரு பஜனை கூட்டங்களிலும் இந்து கடவுள்களை பூஜிக்க கூடியவர். பற்றுள்ள இந்து!
அவரை ஏன் இந்து மதத்தை காக்க வேண்டும் என்பவர்கள் எதிர்த்தார்கள்? இப்போதும் எதிர்த்து கொண்டிருக்கிறார்கள்.
காந்தி மிகச் சிறந்த இந்துவாக இருந்தார். ஆனால் எல்லா சமூக மக்களுடன் உறவு பாராட்டினார். அமைதியை விரும்பினார். நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்க துடித்தார். இந்தியாவுடைய பன்மை கலாச்சாரத்தை . மதநல்லிணக்கத்தை
பிராந்திய சுதந்திரங்களை பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார்.
அதுதான் இவர்களுக்குப் பிடிக்கவில்லை. காந்தியும் இந்து மதத்தை நம்பினார். கோட்சேயும இந்து மதத்தை நம்பினார். ஆனால் காந்தியின் வழி வேறு; கோட்சேயின் வழி வேறு.
சுதந்திர இந்தியாவிலே முதல் பயங்கரவாத சம்பவம் எது? காந்தியடிகளை எப்போது கோட்சே கள்ள துப்பாக்கியால் சுட்டு கொன்றாரே…அன்று தான் இந்தியாவின் முதல் பயங்கரவாத சம்பவம் அரங்கேறியது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
அந்த கோட்சேயுடைய துப்பாக்கி தோட்டா சீறியதே… அந்த வெடிச்சத்தம் இன்னும் தீரவில்லை. அந்தச் சத்தம் இன்னும் ஓயாமல் வெவ்வேறு வடிவங்களில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
இன்று அவர்கள் வகுப்பு வாதத்தை கையிலெடுத்து ; அதிகாரத்தை வென்றெடுத்து இன்று இந்தியாவுடைய ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க கூடிய அளவிற்கு செல்வாக்கு பெற்றிருக்கிறார்கள்.
அதுதான் நமக்கு வேதனையாக இருக்கிறது.
எந்த அளவிற்கு எனில், கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கிறார்கள்.தொழிலாளர்களுடைய உரிமைகளை பறிக்கிறார்கள். விவசாயிகளுடைய உரிமைகளை பறிக்கிறார்கள். சாமானியர்கள் கல்வி கற்க வேண்டும் என்ற உரிமையை பறிக்கிறார்கள்.
இன்றைய தினம் பெருந்தலைவர் ஐயா.காமராஜர் அவர்களுடைய நினைவு தினமும் கூட.
காந்தி பிறந்த தினத்தில் தான் நம்முடைய பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் இறந்தார்.
இந்த நேரத்திலே காமராஜரையும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
அவர் ஊரெல்லாம் பள்ளிக்கூடங்களை திறந்தார். கிராமங்களில் எல்லாம் பள்ளிக்கூடங்களை திறந்தார்.
ஏன் ஒடுக்கப்பட்ட மக்கள், விளிம்பு நிலை மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்பதற்காக அவர் பரவலாக பள்ளிக்கூடங்களை திறந்தார்.
பள்ளிக்கூடங்களை திறந்த பிறகும் பல இடங்களிலே பிள்ளைகள் வரவில்லை. ஏனென்று கேட்டார்.
பசியாலும், பட்டினியாலும் வாடக்கூடிய மக்கள் தங்கள் பிள்ளைகளை வேலைக்கு அழைத்துச் செல்கிறார்கள். வீட்டு வேலைகளுக்கு, வயல் வேலைகளுக்கு கூட்டி செல்கிறார்கள்.
அவர்களுக்குப் பசி மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்று சொன்னவுடன் பள்ளிக்கூடங்களுக்கு வரக்கூடிய பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்குவோம் என்று அறிவித்தார் கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜர்.
பசி பட்டினியை போக்குவதற்காக பள்ளிக்கூடத்திற்கு வந்த ஏழை எளிய வீட்டு குழந்தைகள் ஏராளம்.
அதன் வழியாக கல்வி கற்று பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆனார்கள். மருத்துவர்களாக, வழக்கறிஞர்களாக ஆனார்கள், மக்கள் பிரதிநிதிகளாக எம்எல்ஏக்கள்,எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், அமைச்சர்களாக வந்தார்கள். இதுவெல்லாம் உண்மை!
காமராஜர் ஐயா அவர்கள் எல்லோரும் கல்வி பெற வேண்டும்;
கல்வியிலே பேதம் பார்க்கக்கூடாது பாகுபாடு காட்டக் கூடாது;
உயர் ஜாதி வீட்டு பிள்ளையும், கீழ்ஜாதி வீட்டு பிள்ளையும் கல்வி கற்க வேண்டும் ;எல்லோரும் சமமாக வாய்ப்புகளைப் பெற வேண்டும்; எல்லோருக்கும் பொருளாதார அந்தஸ்து உயர்த்தப்பட வேண்டும்;என்ற கனவுகளோடு அந்தத் திட்டங்களை போட்டார்.
ஆனால் இன்றைய நிலை என்ன? எல்லோரும் கல்வி கற்பதா? என்ற கோபத்திலே நீட் தேர்வை கொண்டு வந்திருக்கிறார்கள்.
நீட் தேர்வு எழுதியவர்கள் தான் இன்று நவீன மருத்துவர்களாக இருக்கிறார்களா?
இன்று கொரோணாவிற்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் எல்லாம் நீட் தேர்வு எழுதியவர்களா?
அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் இந்தியாவிலிருந்து படித்து,வெளியே சென்று உயர்ந்த தரமிக்க மருத்துவர்களாக ஆயிரக்கணக்கானோர் திகழ்கிறார்கள்.
இப்படி படித்தவர்களில் யார் நீட் தேர்வை எழுதினர்கள்?
நீட் தேர்வின் மூலமாக ஏழை, எளிய மக்களின் வாய்ப்புகள் எல்லாம் மறுக்கப்படுகிறது.
அதைவிடக் கொடுமை ‘தேசிய கல்வி கொள்கை 2020’ என்ற பெயராலே மிகப் பெரிய அநீதி நடக்கிறது.
உங்களுக்கு ‘பன்னாடை ‘என்றால் என்னவென்று தெரியுமா? கிராமத்திலிருந்து வந்தவர்களுக்கு தெரியும் தென்னைதோப்பு வைத்திருப்பவர்களுக்கு தெரியும். வீட்டிலே தென்னை வளர்ப்பவர்களுக்கு தெரியும்.
‘பிள்ளையைப் பெற்றால் கண்ணீர் ;தென்னையை வளர்த்தால் இளநீர்’ என்று சொல்வார்கள் .
தென்னை பலவகையான வருமானத்தை ஈட்டி தரக்கூடியது.
அந்த தென்னையுடைய கீற்று, பாலை போன்ற பொருள் பயன்படும். இளநீர், தேங்காய் பயன்படும். பல்வேறு பயன்பாடுகள் தென்னையிலே உண்டு அதில் ஒன்றுதான் தென்னையிலே இருக்கக்கூடிய பன்னாடை என்று சொல்லக்கூடிய வடிகட்டுவது போன்ற ஒரு இயற்கை பொருள் .தென்னை விவசாயிகளுக்கு அது தெரியும்.
அதில் வடிகட்ட கூடிய இயற்கை வலைஉண்டு. கிராமத்தில் பன்னாடை என்று சிலரை கிண்டல் கூட செய்வார்கள்.
அப்படிப்பட்ட வடிகட்டக் கூடிய பன்னாடை சட்டம் தான் தேசிய கல்வி கொள்கை 2020 என்பது
எதிர்காலத்தில் இட ஒதுக்கீட்டை நிரப்ப ஆள் இருக்க கூடாது என்ற, அவர்களுடைய வடிகட்டுகின்ற திட்டம் இது.
நீ படிக்கின்ற காரணத்தினால் தானே உயர் கல்வியை பெறுகிறாய், உயர்கல்வியை பெறுவதால்தானே வேலைவாய்ப்புகளை தேடி வருகிறாய். நீ உயர்கல்வியை பெற விடாமல் தடுத்துவிட்டால்…. ஆரம்பத்திலேயே உன்னை வடிகட்டி விட்டால்…. நீ எப்படி இட ஒதுக்கீடு மூலமாக வேலைவாய்ப்புகளை பெற முடியும்? அதிகாரத்திற்கு வர முடியும்?
இது தான் அவர்களுடைய வஞ்சக திட்டம். புரிகிறதா?
எல்லோருக்குமே தரமான , சமமான கல்வி கிடைக்கிறதா? சிபிஎஸ்இ பள்ளிகள் கிராமத்தில், ஊராட்சியில் உண்டா?
விவசாயிகள் வீட்டுபிள்ளைகள், கூலித்தொழிலாளர்கள் வீட்டு பிள்ளைகள், கட்டிட தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளுக்கு அந்த வாய்ப்புகள் கிடைக்குமா?
உலகிலேயே மிகச் சிறந்த கல்வி ஆரம்பக் கல்வி பின்லாந்து நாட்டில் கொடுக்கப்படுகிறது.
பின்லாந்து நாட்டில் இருக்கக்கூடிய கல்வியை தான் உலகம் முழுக்க இருக்கக்கூடிய எல்லா நாடுகளும் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டுள்ளன.
ஆனால் நமது நாட்டிலே அதற்கு நேர்மாறாக …யாரையும் படிக்க விடாமல் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த தேசிய கல்வி கொள்கையை கொண்டு வந்திருக்கிறார்கள்.
காமராஜருடைய நினைவு நாளிலே அதை நாம் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கின்றோம்.
காந்தியை பற்றியும் பேச வேண்டி இருக்கிறது. காமராஜர் பற்றியும் பேச வேண்டியிருக்கிறது.
சமகால அரசியலில் அவர்கள் இரண்டு பேருடைய கொள்கைகளும் எந்த அளவிற்கு பாடாய் படுத்தப்படுகிறது என்பதை பற்றியும் பேச வேண்டி இருக்கின்றது.
மத்திய பாஜக அரசு கூட்டாட்சி தத்துவங்களைக் குழிதோண்டி புதைக்கிறது. பிராந்திய மொழிகளை அழிக்கத் துடிக்கிறது. ஒற்றை மொழி கலாச்சாரத்தை திணிக்கிறது. ஏனைய மக்களுடைய வாழ்வாதாரங்களை பாழ்படுத்த நினைக்கிறது.
கொரோனாவிற்கு பின் 12 கோடி பேர் வேலைவாய்ப்புகளை இழந்து இருக்கிறார்கள் இந்தியாவிலே யாராவது இது பற்றி பேசுகிறார்களா?
உலகம் முழுக்க இருக்கக்கூடிய அரசுகள் கொரோனா நெருக்கடியில் குடிமக்களுக்கு உதவித்தொகை வழங்கின.
நமது இந்திய திருநாட்டில் இந்தியாவின் நடுவண் அரசு ஒரு 100ரூபாயை நேரடி உதவித் தொகையாக யாருக்காவது வழங்கியது உண்டா ? இந்த ஆறு மாதத்தில் இதுவரை இல்லை.
இப்படிப்பட்ட ஒரு அரசு இங்கே இருந்து கொண்டிருக்கிறது.
அடித்தட்டு மக்களைப் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை .ஆனால் அம்பானிகளை, அதானிகளை, டாட்டாகளை, பிர்லாக்களை, கோத்ரெஜ்களை பற்றி அவர்கள் கவலைப் படுகிறார்கள்.
ஏழை எளிய கிராமப்புற மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. விளிம்பு நிலை மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. அதைத்தான் சமகால அரசியலில் ஒரு ஆபத்தான போக்காக நாம் சுட்டிக் காட்டுகின்றோம்.
இன்றைய சமகால சூழலில் நிறைய நெருக்கடிகளை இந்த நாடு சந்திக்கின்றது.
எதிர்க்கட்சிகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற ஒரு நெருக்கடி உருவாக்கப்படுகிறது.
உத்திரப்பிரதேசத்தில் ஒரு பாலியல் கூட்டு வன்முறைக்கு ஒடுக்கப்பட்ட; பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் பலியாகி இருக்கிறார்.
பாலியல் வன்கொடுமைக்கு யார் ஆளானாலும் ; அவர் உயர் ஜாதியா? கீழ் ஜாதியா? தாழ்ந்தவர்களா? உயர்ந்தவர்களா? என்ற பேதம் பார்க்க முடியாது.
யாராக இருந்தாலும் அது அநீதி! கண்டிக்கத்தக்கது. அது அராஜகம்!
அந்த சம்பவத்திற்காக நீதி கேட்டு சென்ற காங்கிரஸ் தலைவர்கள் திரு.ராகுல் காந்தி அவர்களையும்,திருமதி.பிரியங்கா காந்தி அவர்களையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தள்ளி விட்டு இருக்கிறார்கள்.
ஏதோ அரசியல் கட்சியுடைய ஒன்றிய செயலாளரை, நகர செயலாளரை காவல்துறையினர் தள்ளி விடுவதையெல்லாம் நாம் அரசியலில் கேள்விபட்டிருக்கிறோம்.
ஆனால் உத்திரப்பிரதேசத்தில் பாஜகவுடைய ஒரு காட்டாட்சி நடந்து கொண்டிருக்கிறது.
காவல்துறையினர் தேசிய தலைவர்களை; நாடாளுமன்ற உறுப்பினர்களை கீழே தள்ளி விடக்கூடிய ஒரு மோசமான சூழல் உருவாகியிருக்கிறது.
இது என்ன அணுகுமுறை? இதுதான் ஜனநாயகமா? இதுதான் கண்ணியமான அரசியலா? வேதனையாக இருக்கிறது.
இதுஒரு புறம் எனில்,
இன்னொருபுறம் மாநிலங்களின் உரிமைகள் ஒன்றன்பின் ஒன்றாக பறிக்கப்படுகின்றன.
விவசாய விரோத சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. அதிலும் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கிறது.
இன்னொருபக்கம் மத்திய புலனாய்வு துறை (CBI), மத்திய வருமான வரித்துறை ஆகியன பாரதிய ஜனதா கட்சியின் ஒரு மாநில அணியை போல மாற்றுகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
முக்கியமாக நீதித்துறை பற்றி கவலைப்படுகிறோம்.
நீதித்துறையுடைய மாண்புகள் கெட்டுப் போய்விட்டது என்று சொல்லி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சென்ற ஆண்டு ஜனவரியில் டெல்லியின் வீதிகளில் இறங்கி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்களா இல்லையா?
அந்த அநீதி உலகத்தில் முதன்முறையாக இந்திய திருநாட்டில் தானே நடந்தேறியது.
எவ்வளவு கொடுமையான போக்கு!
இன்று நீதித்துறையில் நீதி வழங்கப்படுகிறதா?
தீர்ப்புகள் வழங்கப்படுகிறது. தீர்ப்புகள் வேறு! நீதிகள் வேறு!
இப்போது பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் 32 பேரையும் லக்னோ சிபிஐ உயர் நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.
நல்லவேளை அந்த நீதிபதிகளுக்கு நன்றி சொல்லவேண்டும்.
450 ஆண்டுகால பாபர் மசூதி மழையின் காரணமாக இடிந்து நொறுங்கி விட்டது. முஸ்லிம்கள்தான் இதற்கு காரணமாக இருப்பார்களோ என்று சந்தேகப்படுகிறோம் .அதற்காக தண்டனை கொடுக்கும் வகையில் இந்தியாவில் இருக்கக்கூடிய 25 கோடி முஸ்லிம்களை தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று கூறாமல் போனார்களே… என்பதை நினைத்து நாமெல்லாம் ஆறுதல் பட்டு கொள்ள வேண்டும். வேறு என்ன செய்வது?
நமது உரிமைகள் மறுக்கப்பட்டால் நீதி மன்றத்தை தான் நாடுவோம். நீதிமன்றத்திலேயே நீதி இல்லை என்று சொன்னால்…?
வைரமுத்து ஒரு பாடல் எழுதி இருப்பார். ‘காந்தி தேசமே காவல் இல்லையா? நீதிமன்றமே நியாயம் இல்லையா?’ என்று. அதை இந்த தருணத்திலே எண்ணி பார்க்கிறோம்.
எதாவது சொன்னால் நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்வார்கள். என்ன செய்வது நீதியை அவமதித்தால் அதை எவ்வாறு பொறுத்து கொள்வது? ஆக நீதிமன்றங்களிலே நியாயம் இல்லை.
எனதருமை சகோதர,சகோதரிகளே… மிகவும் வேதனையாக இருக்கிறது. வலியாக இருக்கிறது. இந்த தேசம் எதை நோக்கி செல்கிறது என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது.
இன்று மத்திய அரசை இயக்கக்கூடிய மிகப் பெரிய சக்தியாக ஆர்எஸ்எஸ் இருந்து கொண்டிருக்கிறது.
அவர்கள் சொல்வதை எல்லாம் இவர்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்
இந்த நிலையிலேயே நாம் என்ன செய்வது? முடங்கி வீட்டுக்குள் கிடப்பதா? அல்லது அகதிகளாக புறப்பட்டு நாடு விட்டு நாடு செல்வதா? அல்லது ஜனநாயக வழியிலே மக்கள் இயக்கங்களை எல்லாம் ஒன்றிணைத்து போராடுவதா? என்ற கேள்விகள் எழுகிறது.
நான் சொன்ன, ஜனநாயக வழியில் மக்கள் இயக்கங்களை எல்லாம் ஒருங்கிணைக்க வேண்டியது தான் இதற்கு தீர்வாக இருக்கும்.
நமது போராட்டங்கள் உடனடியாக வெற்றி பெறாது என்பது நமக்குத் தெரியும். இதற்கு நீண்ட கால உழைப்பும், நீண்டகால முயற்சியும் தேவை என்பதை நாம் அறிவோம்.
அந்த நீண்ட நெடிய போராட்டத்திற்கு காந்தியடிகள் உடைய 151 வது பிறந்த தினமான இன்றைய தினத்தில் நாம் எல்லோரும் உறுதி ஏற்போம்.
சளைக்காமல், கவலைப்பட்டு முடங்காமல், இந்திய தேசத்தின் பன்மை கலாச்சாரத்தை, தேசத்தின் ஒருமைப்பாட்டை, இந்தியாவெங்கும் வாழக்கூடிய அனைத்துமக்களுடைய உணர்வுகளைப் பாதுகாக்க கூடிய அறவழி ஜனநாயக போராட்டத்திற்கு ஆயத்தமாவோம்.
மக்களை சந்திப்போம்.
பல்வேறு வகையான பரப்புரை சாதனங்களில் வழியே மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவோம்.
அத்தகைய நல்ல ஒரு பணியை பற்றி பேச களம் அமைத்த மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான கத்தர் மனிதநேயக் கலாச்சார பேரவைக்கு எனது புரட்சிகரமான வாழ்த்துக்களை கூறி ,அமைதி வழியில் நமது பங்களிப்புகளை செய்வோம். தொடர்ந்து நமது குரலை மக்கள் மன்றத்தில் எதிரொலித்துக் கொண்டே இருப்போம் என்று கூறி நிறைவு செய்கிறேன். நன்றி.
இவ்வாறு அவர் உரையாற்றினார். உலகம் எங்கும் இந்திய சமூகத்தினர் காணொளி வழியே இதில் பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தலைமையகம்.
02-10-2020