இந்தியாவின் ஜனநாயகத்தையும் பன்மை கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டும்! மஜக இளைஞரணி கருத்தரங்கில் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு!be


கடந்த செப்.26 அன்று மஜக இளைஞர் அணி சார்பில் “இந்திய அரசியலும், இளைஞர்களின் கடமையும்” என்ற தலைப்பில் காணொளி வழி கருத்தரங்கம் நடைப்பெற்றது.

அதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

இளைஞர் அணி சார்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில் பங்கு பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

இளைய சமூகத்தை சரியான இலக்கை நோக்கி அழைத்து செல்வது நமது நோக்கமாகும். அது காலத்தின் தேவையுமாகும்.

நமது பணிகள் அனைவருக்குமானவை. நாம் பரந்துபட்ட இந்திய சமூகத்தின் நலன்களுக்காக குரல் கொடுக்கின்றோம்.

இந்த நாட்டில் குரலற்ற மக்களின், குரலை நாம் எதிரொலிக்கிறோம்.

போராட்டங்களை தீர்வுகளுக்காக நடத்துகிறோம். அதில் வெற்றியும் உண்டு. தோல்வியும் உண்டு.

எந்த ஒரு போராட்டமும், முயற்சியும் உடனடியாக தீர்வுக்கு வராது என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறோம்.

சில விஷயங்களுக்கு நீண்ட உழைப்பு தேவை.

விதை விதைத்து, ஒரே நாளில் எந்த விவசாயியும் பலன் பெறுவதில்லை. அதுபோலத்தான் நாம் நீண்ட தயாரிப்போடு, நெடிய ஜனநாயக போராட்டத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் .

இளைஞர்களே…
உங்களுடைய சிந்தனைகளை பலப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய சிந்தனைகளை ஜனநாயக படுத்திக் கொள்ளுங்கள், உங்களுடைய சிந்தனைகளை முற்போக்காக வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஏனெனில், இப்போது நாட்டுக்கு இத்தகைய அணுகுமுறைகள்தான் தேவை.

மக்களின் மூளைகளை மழுங்கச் செய்யும் வேலைகளை சிலர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைத்து கொண்டிருக்கிறார்கள்.

வளரும் தலைமுறைகளுக்கு மத்தியில் பிரிவினை போக்கை உருவாக்குகிறார்கள்.

சிந்திக்காத ஒரு சமூகத்தை இந்த நாட்டில் உருவாக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

இவற்றுக்கு எதிராக களமாட நாம் தயாராக வேண்டும்.

கல்வியை அனைவருக்கும் மறுக்கக் கூடிய வகையில், தேசிய கல்வி கொள்கை 2020 என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளார்கள்.

அதன் நோக்கம் என்ன..?
எதிர்காலத்தில் இடஒதுக்கீட்டுக்கு ஆள் இல்லாமல் செய்வதே ஆகும்.

ஆரம்ப நிலையிலேயே வடிகட்டல்களை உருவாக்கி, இடஒதுக்கீட்டுக்கு ஆள் இல்லாத அளவிற்கு செய்ய வேண்டும் என திட்டமிடுகிறார்கள்.

பத்தாம் வகுப்புக்கு முன்பாகவே சாமானியர்களின்; எளியவர்களின் படிப்பை, பாதியிலேயே நிறுத்திவிடக்கூடிய சூழ்ச்சி திட்டத்தை வகுத்துள்ளார்கள்.

எல்லோரும் படிக்க வேண்டுமென்று ஒவ்வொரு நாட்டிலும் திட்டங்களை போடுகிறார்கள். சட்டங்களை வகுக்குகிறார்கள். சலுகைகளை தருகிறார்கள்.

ஆனால் நமது மண்ணில் அனைவரும் கல்வி கற்று விடக்கூடாது; ஆதிக்க சக்திகளுக்கு சமமாக மற்றவர்கள் அமர்ந்து விடக்கூடாது என்ற நோக்கோடு, குறிப்பிட்ட ஒரு ஏகாதிபத்திய கூட்டம் இந்த மண்ணிலே பாசிச சிந்தனையோடு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த அநீதியை நாட்டு மக்களிடம் எடுத்துச் சொல்லக்கூடிய கடமை இளைஞர்களுக்கு உண்டு. மாணவர்களுக்கும் உண்டு.

இது போன்றவற்றின் களப்பணிகளுக்கு முன்பாக, நாம் நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும். அரசியலை கற்க வேண்டும்.

எல்லோரையும் முழுநேர அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லவில்லை. அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை.

ஆனால் அரசியலை எல்லோரும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

நம்முடைய அன்றாட வாழ்வில் ஒவ்வொன்றிலும் அரசியல் கலந்திருக்கிறது.

அரசியலுக்கு வராமல் நாம் எந்த ஒரு உரிமைகளையும் பெற்று விட முடியாது. வெற்றி வாகை சூட முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே அரசியல் களத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதில் உள்ள சிக்கல்களை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மை சுற்றி நிகழக்கூடிய அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க முடியும்.

பிரபல புரட்சியாளர் சேகுவாரா அவர்கள் சொன்னார்கள்… “ஒவ்வொரு அநீதிகளையும் கண்டு ஆத்திரத்தில் நீ அதிர்ந்து போவாயானால் நீயும் எனக்குத் தோழன்” என்று சொன்னார்.

அந்த கருத்தை இந்த நேரத்தில் உங்களிடம் எடுத்து வைக்கிறேன்.

இந்த மண்ணிலே நடக்கக்கூடிய ஒவ்வொரு அநீதிகளுக்கும் எதிராக, ஜனநாயக வழியில் பொங்கி எழக்கூடியவர்களாக இளைஞர்களும், மாணவர்களும் உருவாக வேண்டும்.

இன்றைய நிலையில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே போராடுவதை விட, அநீதிக்கு எதிராக ஒருமித்த போராட்ட களத்தை நாம் தயார்படுத்த வேண்டும்.

இளைஞர்கள் தங்களிடம் புதைந்துக் கிடக்கும் ஆற்றல்களை குறித்து சிந்திக்க வேண்டும். அவற்றை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த முன்வர வேண்டும்.

இன்று தொலைக்காட்சிகளிலும், சமூக இணையத்தளங்களிலும் முழுநேரமாக தங்களுடைய நேரத்தை செலவழித்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் போக்கு மாற்றப்பட வேண்டும்.

நமது வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில், சமூக இணையதளங்கள் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அவ்வாறே தொலைக்காட்சிகள் இருக்கவேண்டும்.

ஆனால் நமது வாழ்வே அதற்குள் மூழ்கி போய் விட அனுமதித்திட கூடாது.

அது களப்பணி ஆர்வத்தை குறைத்து விடும். சிந்திக்கும் ஆர்வத்தை குறைத்து விடும்.

நேரத்தை பிரித்து அன்றாட வாழ்வை திட்டமிட வேண்டும். புத்தகங்கள் படிப்பதற்கு இளைஞர்கள் நேரம் ஒதுக்க வேண்டும். வாசிப்பு மூலமாகத்தான் அறிவை பட்டை தீட்ட முடியும் என்பதை மறந்து விடக்கூடாது.

பிரபல புரட்சியாளர் லெனின் அவர்கள் “புரட்சி பாதையிலேயே பயணிக்கின்ற போது துப்பாக்கியை விட மிகப்பெரிய ஆயுதம் புத்தகங்கள் தான்” என்று சொன்னார்கள்.

எனவே இளைஞர்களே… நீங்கள் நிறைய வரலாறுகளை வாசிக்கவேண்டும், விஞ்ஞானத்தை வாசிக்க வேண்டும், வருங்காலத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்.

அதற்காகத் தான் இளைய சமுதாயம் கூர் தீட்டப்பட்ட முற்போக்கு ஆயுதங்களாய் ஜனநாயக வழியிலேயே பயணிக்க தயாராக வேண்டும் என கூறுகிறோம்.

இன்று பெரும்பாலான இளைஞர்கள் ஒரு சுயநலமான வாழ்க்கைப் போக்குடன் இருக்கிறார்கள்.

படிக்க வேண்டும், சம்பாதிக்கவேண்டும், சுயமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது தப்பில்லை.

ஆனால் சுயநலத்தோடு, பொது அக்கறை இல்லாமல் வாழ நினைப்பது தவறு.

இன்னும் பலர், எல்லாருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

எல்லோருக்கும் நல்லவராக இருப்பது என்பது நடைமுறை சாத்தியமில்லை.

‘எல்லோருக்கும் நல்லவன் தன்னை இழந்தான்’ என்ற பாடல் வரியும் உண்டு.

எந்த விவகாரத்திலும் தலையிடாமல் ; எது நடந்தால் எங்களுக்கு என்ன? என்று இருக்கக்கூடிய இளைஞர்களைப் பற்றி தான் நாம் கவலைப்பட வேண்டும்.

பிரபல ஐரோப்பிய பேரறிஞர் பெர்னாட்ஷா சொன்னார். “நல்லவராய் இருப்பது நல்லது தான். ஆனால் நல்லது கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்தானது” என்று சொன்னார்.

இளைஞர்களே.. இந்த நாடு உங்களால் தான் அழகுபடுத்த பட்டிருக்கிறது என்று கூறுகிறேன்.

இன்றைய உலகில் 40 கோடி இளைஞர்களை கொண்ட நாடு நமது இந்திய தேசம். நாம் இந்த தேசத்தின் எதிர்காலத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

இது இளைஞர்களாகிய உங்களது கடமை. இந்திய தேசத்தின் ஆற்றலை சரியான வழியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்.

இளைய சமுதாயத்திற்கு மத்தியில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவ சிந்தனைகள் பூத்துக் குலுங்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

எனவே தான் இளைஞர்களை நோக்கி அறைகூவல் விடுக்கின்றோம்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளை அதிகமாக முன்னெடுக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

இன்றைய நிலையில், தினம் தினம் அச்சத்தோடும், பசியோடும், பட்டினியோடும் வாழ்ந்து மறைவது என்பது கேவலமான ஒரு வாழ்க்கை.

இந்திய தேசத்தில் அச்சமான ஒரு அரசியல் சூழலை உருவாக்க சிலர் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த மோசமான போக்குக்கு எதிராக நாம் களமாட வேண்டும்.

காந்தியடிகள் உருவாக்கிய; காந்தியடிகள் பக்குவப்படுத்திய இந்த தேசத்தில் காந்தியடிகளின் ஒரு செய்தியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

“நாளையே இழந்துவிடுவாய் எனில் இன்றே வாழ்ந்து விடு. வாழ்நாள் நிறைய இருக்கிறது எனில் கற்றுக்கொண்டே இரு” என்று சொன்னார்.

இளைஞர்களே உங்களுடைய வாழ்நாள் நீண்டதூரம் இருக்கிறது இதில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொண்டதை மக்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்.

மறப்பது மக்களுடைய இயல்பு. அந்த மறதியை கலைத்து அவர்களுக்கு சிந்தனையை கொடுப்பது நமது கடமை என்பதை மறந்து விடாதீர்கள்.

எனவே இளைஞர்களே …
இந்த நாட்டினுடைய பன்மை கலாச்சாரத்தை, ஜனநாயகத்தை, சமத்துவத்தை, சமூகநீதியை பாதுகாக்க களமாட தயாராக வேண்டும்.

களமாட முடியாதவர்கள் அறச் சிந்தனைகளைப் பரப்ப தயாராக வேண்டும்.

இதில் கூட பங்கேற்க முடியாதவர்கள், நேர்மையான கருத்துருவாக்கங்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று இந்த நிகழ்ச்சியின் வாயிலாக கேட்டுக் கொள்கின்றேன்.

நமது நாட்டினுடைய பாரம்பரிய வரலாற்றையும், விஞ்ஞான அறிவையும் நாம் பாதுகாக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

எல்லோரும் ஜனநாயக வழியில் கடமையாற்ற, களப்பணியாற்ற நாம் நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, நம்முடைய போராட்டங்களுக்கு எப்போதுமே ஜனநாயகம் என்ற மிகப்பெரிய கவசம் அணிகலனாக இருந்து கொண்டிருக்கிறது .

அந்த ஜனநாயக வழியில் தான் நாம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

வன்முறை வழியாக எவற்றையும் வென்றெடுக்க முடியாது. வன்முறை பாதை என்பது பேராபத்திலும், பேரழிவிலும் சென்று முடியும் என்பதை இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கவனித்து வருகிறோம்.

இந்த நூற்றாண்டு என்பது ஜனநாயகத்துக்கான நூற்றாண்டு.

ஜனநாயக வழியிலேயே போராடுபவர்களை பாதுகாப்பதற்கான ஒரு நூற்றாண்டு என்பதை மறந்து விடக்கூடாது.

இளைஞர்களுக்கு அதிகமான கடமை இருக்கிறது என்பதை இந்த நூற்றாண்டின் வரலாற்று நிலையிலிருந்து பார்க்கிறோம்.

சேகுவாரா அவர்கள் ஒன்றைச் சொன்னார்.

“நான் சாகடிக்க படலாம் ஆனால் நான் தோற்கடிக்கப்பட மாட்டேன்” என்று சொன்னார்.

நமது போராட்டங்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று களத்தில் இறங்கலாம். அது வெற்றியோ, தோல்வியோ என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.

ஆனாலும் சளைக்காமல் நாம் களமாட தயாராக வேண்டும்.

வெற்றியை நாம் அனுபவிக்காமல் போகலாம்.

நமது பிள்ளைகள் அதை அனுபவிப்பார்கள், நாம் தொடங்கியதை அவர்கள் தொடர்ந்து போராடி அந்த வெற்றியை பெறுவார்கள்.

நமது அதை பேரப்பிள்ளைகள் அனுபவிப்பார்கள்.

விதைத்து நாமாக இருக்கலாம் அதை நமது தலைமுறைகள் அறுவடை செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு நம் பணிகளை செய்ய வேண்டும்.

நம்முடைய சிந்தனைகளும், எழுத்துக்களும், பேச்சுகளும், உழைப்பும் இந்த நாட்டுடைய பன்மை கலாச்சாரத்தை, ஒற்றுமையை , சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் கூறிக் கொள்கிறேன்.

நாம் தேசிய ஒற்றுமையை மதிக்கிறோம். நாம் முன்வைக்கும் தேசியவாதம் என்பது அமைதி, வளர்ச்சி, ஒற்றுமை அடிப்படையிலான தேசியவாதம். பிரிவினையை பேசக்கூடிய தேசியவாதத்தை எதிர்க்கின்றோம்.

இந்த நாட்டில் வாழக் கூடிய சகல தரப்பும் சகல உரிமைகளை பெற்று சமூக நீதியோடு, சமத்துவ போக்கோடு வளர்த்தெடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

அதே சமதர்ம சிந்தனையோடு நம்முடைய இளைஞர்களை உருவாக்குவோம், வென்றெடுப்போம் எனக் கூறி, இளைஞர் அணிக்கு வாழ்த்துக்களை கூறி விடைபெறுகிறேன். நன்றி !

இவ்வாறு அவர் பேசினார்.

தகவல் தொகுப்பு ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING