இது அநீதியான தீர்ப்பு! சிறுபான்மையினரின் உள்ளங்கள் எரிகிறது! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

இந்தியாவின் தொன்மை வாய்ந்த அடையாள சின்னங்களில் ஒன்றாக திகழ்ந்த பாபர் மஸ்ஜித், 1992, டிசம்பர் 6 அன்று பயங்கவாத சக்திகளால் இடிக்கப்பட்டது.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் சங்பரிவார் தலைவர்கள் இந்த அராஜக நிகழ்வுக்கு தலைமையேற்றனர்.

அவர்களின் திட்டமிடல், ஊக்குவிப்பு காரணமாக அந்த பாதகம் அரங்கேற்றப்பட்டது.

சமீபத்தில் அயோத்தி நிலம் தொடர்பாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் , பாபர் மஸ்ஜித் இடிப்பை குற்றம் என கூறியது.

இது குறித்த வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்றுள்ள நிலையில்,தற்போது லக்னோ சிபிஐ நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உள்ளிட்ட 32 பேர்களையும் விடுதலை செய்துள்ளது.

இது அதிர்ச்சியை தருகிறது. வேதனையளிக்கிறது.

இந்த தீர்ப்பு அநீதியானது.சட்ட விரோதமானது.

தீர்ப்பு வேறு, நீதி வேறு என்ற நிலை நம் நாட்டில் உருவாகி இருக்கிறது.

இதை மனசாட்சி உள்ள யாராலும் ஏற்க முடியாது.

பாபர் மஸ்ஜிதை இடிப்போம் என சபதமிட்டு அவர்கள் ரத யாத்திரையை நடத்தினார்கள்.

அதனால் வழியெங்கும் மதக்கலவரங்கள் ஏற்பட்டு பல நூறு அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள்.

1996 டிசம்பர் 6 அன்று அயோத்தியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை தாக்கி, பத்திரிக்கையாளர்களையும் தாக்கி, அந்த வெறிபிடித்த கும்பல் மசூதியின் மீது ஏறிய போது, கை தட்டி கூக்குரலிட்டவர்கள் யார் என்பதை உலகம் வேதனையோடு பார்த்தது.

இதுவெல்லாம் சிபிஐ க்கு தெரியாதா? தெரியும். திட்டமிட்டே வழக்கை பலவீனப்படுத்தியுள்ளார்கள்.

இதற்கு லக்னோ சிபிஐ நீதிமன்றம் துணை போயுள்ளது.

இந்திய நீதித்துறை வரலாற்றில் மற்றொரு கறுப்பு நாள் இது.

ஏற்கனவே பாபர் மசூதியை வன்முறைக்கு பறிகொடுத்த சமூகம் ; அயோத்தி இடம் தொடர்பான வழக்கிலும் வஞ்சிக்கப்பட்ட சமூகம்;தற்போதைய இந்த வழக்கிலும் ஏமாற்றப்பட்டிருக்கிறது.

அரசியல் பலத்தை கொண்டு நீதித்துறையில் ஆக்டோபஸின் கோரக்கரங்கள் ஊடுறுவியிருப்பதாக கூறும் குற்றச்சாட்டுகள் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் பன்மை கலாச்சாரமும், ஜனநாயகமும், நல்லிணக்கமும் பெரும் கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாகியிருக்கிறது.

சிறுபான்மையினரின் உள்ளங்கள் துயரத்தில் எரிகிறது.

இந்த நிலையில் அன்பு உறவுகளான பெரும்பான்மை இந்து சமுதாய மக்களின் மனசாட்சிக்கும், ஜனநாயக சக்திகளின் விவாதங்களுக்கும் இத்தீர்ப்பை எடுத்து வைக்கிறோம்.

அவர்கள் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பார்கள் என நம்புகிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,

#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
30.09.2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.