டெல்டா தொழில் முனைவோர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் காணொளி வழி கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த 18.09.2020 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று ஆற்றிய உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு…
நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை சமவெளியை தொழில் வளமாக்க வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டு வரும் டெல்டா தொழில் முனைவோர்கள் கூட்டமைப்புக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கு ONGC, CPCL போன்ற மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் நமது மண்ணை சேர்ந்தவர்கள் குறைவானவர்களே பணிபுரிகிறார்கள்.
அந்த நிறுவங்கள் நமது இயற்கை வளங்களை வேட்டையாட முயலும் போது எதிர்ப்புகளை சந்திக்கின்றன. மீத்தேன் – ஹைட்ரோகார்பன் போன்றவற்றை எடுக்க பெரு நிறுவனங்கள் முயலும் போதும் மக்கள் எதிர்க்கிறார்கள்.
நமது நிலம், நீர், காற்று பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
அந்த வகையில் நமது இயற்கை வளங்களுக்கு பாதிப்பு இல்லாத தொழில்களை நாம் உருவாக்க வேண்டும். மதிப்பு கூட்டு வணிகங்களை ஊக்குவிக்க வேண்டும்.
நீண்ட கடல் வளம் உள்ளது. அதையும் பயன்படுத்த வேண்டும்.
நான் நாகைக்கு மருத்துவக் கல்லூரிக்கு குரல் கொடுத்தேன். அது கிடைத்திருக்கிறது. நாகைக்கு சட்டக்கல்லூரி, நாகூருக்கு மகளிர் கலைக் கல்லூரி ஆகியவற்றை அரசிடம் கேட்டு வருகிறேன். இதுவும் வளர்சிக்கு துணை நிற்கும்.
ஆயக்காரன்புலத்தில் ஜவுளி பூங்காவை முதல்வர் அறிவித்துள்ளார். இது நேரடியாகவும், மறைமுகமாகவும் 21-ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை தரும். ஒரு குட்டி திருப்பூர் உருவாக உள்ளது.
வேதாரணியத்தில் துளசியாப்பட்டினம் அருகே வண்டு வாஞ்சேரியில் உணவு பூங்கா அமைய உள்ளது. இது உணவு சார்ந்த தொழில் உற்பத்தியை பெருக்கி, வேலை வாய்ப்புகளையும் தரும்.
இவை டெல்டா மாவட்டங்களுக்கு பயன் தருபவை. டெல்டா என்பது தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டத்தின் தெற்கு பகுதிகள், புதுக்கோட்டை மாவட்டத்தின் வடக்கு பகுதிகள், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் ஆகியன அடங்கியவை.
முழு டெல்டா மாவட்டங்களும் பயன் தரும் வகையில் நாகை துறைமுகத்தை தனியார் பங்கேற்போடு மேம்படுத்த முதல்வரிடம் பேசியுள்ளேன். அந்த முயற்சி வெற்றி பெறுமேயானால் டெல்டா மாவட்டங்கள் தொழில் மயமாகும். ஏற்றுமதி – இறக்குமதி பெருகும். நேரடி வேலைவாய்ப்புகளும், மறைமுக வேலை வாய்ப்புகளும் உருவாகும்.
நில விற்பனை, புதிய கட்டிடங்கள் என ரியல் எஸ்டேட் தொழிலும் பெருகும்.
அது போல் நாகைக்கும், இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க மத்திய அரசிடம் பேச வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
இதன் மூலம் சுற்றுலா துறை வளர்ச்சி பெற்று, போக்குவரத்து பெருகும்.
இந்த கனவுகள் நிறைவேற தொடர்ந்து உழைக்க வேண்டியுள்ளது.
நீங்கள் உறங்கும் போது வருவதல்ல கனவு. உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு என்றார் அப்துல் கலாம் .
கனவுகள் மெய்ப்பட வேண்டி உழைப்போம்.
நமது டெல்டாவில் தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும். ஊக்குவிக்க வேண்டும் என்பது உங்கள் நோக்கம். அது வெற்றிப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
நாம் சம்பாதிக்கும் செல்வம் நமக்கு மட்டுமே உரியதாக இருக்க கூடாது. அது நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் பயன்பட வேண்டும். ஏழைகளுக்கு உதவ வேண்டும். அதுதான் மனித நேயம். இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
ஏழையாய் பிறந்தது குற்றமல்ல. ஏழையாய் இறப்பதே குற்றம் என்றார் பில்கேட்ஸ்.
இந்த உற்சாக மொழியை உணர்ந்து நாம் முன்னேறுவோம் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி செலுத்தி உரையை நிறைவு செய்கிறேன். நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
அவரது உரைக்கு பின் கேள்வி – பதில் நிகழ்ச்சி நடந்தது. அந்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
நிகழ்ச்சியை P.R. இளங்கோவன் தொகுத்து வழங்க, துரை ராயப்பன் வரவேற்புரை ஆற்றினார்.. ஜோதி சங்கர் முன்னுரையாற்ற நிகழ்ச்சி உற்சாகமாக நடைப்பெற்றது.
சமூக வலைதளங்கள் வழியே டெல்டா மாவட்டங்களை கடந்தும் திரளானோர் ஆர்வமுடன் இதில் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
21-09-2020