கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்! தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக சட்டசபையில் மு தமிமுன் அன்சாரி MLA உரை!

கடந்த 16.09.2020 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை 2020 குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அதில் பேசினார்.

அவரது உரையிலிருந்து…

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே..,

மத்திய அரசு கொண்டு வந்திருக்கக் கூடிய புதிய கல்விக் கொள்கை, 2020 என்பது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சமூகங்களில் நலிந்த பிரிவினர்களை ஆரம்ப நிலையிலேயே வடிகட்டிட வேண்டுமென்ற நோக்கத்தோடு, எதிர்காலத்திலே இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நீர்த்துப்போகச் செய்ய வேண்டுமென்ற பேராபத்தோடு இந்தப் புதிய கல்விக் கொள்கைகளிலே பல்வேறு விஷயங்கள் மலிந்து கிடக்கின்றன. இதில் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட என்ற வாசகம் நீக்கப்பட்டு, சமூக, பொருளாதார சாதகமற்ற குழுக்கள், அதாவது, socio-economically disadvantaged group என்ற சொல்லாடல் இடம் பெற்றிருப்பதை நாம் எல்லோரும் கூர்ந்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

இதிலே, மிகப் பெரிய சமூக பேராபத்து அடங்கியிருக்கின்றது. இந்த வாசகத்தை புரிந்துக் கொள்வோமேயானால், இந்தச் சட்டத்தை, திட்டத்தை நாம் எவ்வாறெல்லாம் எதிர்க்க வேண்டும் என்பதற்கான ஆயத்த பணிகளிலே ஈடுபட முடியும்.

5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி என்ற ஒரு கவர்ச்சி அறிவிப்பை இங்கே வெளியிட்டிருக்கிறார்கள்.

நாம் கூர்ந்து கவனித்தால் அதிலே ‘முடிந்தவரை ‘ என்ற வாசகம் என்பது ஓர் ஏமாற்றுச் சொல்லாடலாகும். அது மட்டுமல்லாமல், மத்திய அரசினுடைய ‘கேந்திரிய வித்யாலயா ‘ இந்த அறிவிப்பு வந்தவுடனே, தாய்மொழிவழிக் கல்வி என்பது நடைமுறை சாத்தியமில்லை என்று சொல்லியிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

மும்மொழி கொள்கை என்று சொல்கிறார்கள். அதிலே 2 இந்திய மொழிகள் என்று சொல்லி, இங்கே மொழி ஆதிக்க திணிப்பிற்கு வழி விடுவதை நாம் கவனிக்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கெல்லாம் பொதுத்தேர்வு என்று சொல்கிறார்கள். அதாவது 8வது வயதிலேயே ஒரு குழந்தை தன்னை பொதுத் தேர்விற்கு தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.

நம்முடைய மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அண்ணன் திரு. செங்கோட்டையன், அவர்கள் சமீபத்திலே பின்லாந்திற்குச் சென்றார்கள். அந்த கல்விமுறையை பாராட்டி பேசினார்கள். உலகமே பின்லாந்தினுடைய கல்வி முறையை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது, இங்கே மூன்றாம் வகுப்புக்கும், ஐந்தாம் வகுப்புக்கும், எட்டாம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு என்று சொன்னால், பிஞ்சுக் குழந்தைகளின் தலையில் பாறாங்கல்லை போடுவதற்கு சமம் ஆகும் இந்த திட்டம்.

அதேபோன்று கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்வு என்று சொல்கிறார்கள். ஏற்கனவே NEET நுழைவுத்தேர்வு வந்த காரணத்தினால், இந்த மண் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

சாதாரண குடிசை வீட்டு பிள்ளைகள் கூட பி.ஏ, பிஎஸ்சி, பி.காம் என்று படித்தார்கள். இப்போது அதற்கும் நுழைவுத்தேர்வு என்று சொல்கிறார்கள். அதை பல்கலைக்கழகங்கள் மூலம் நடத்த மாட்டார்களாம். மாறாக நேஷனல் National Testing Agency ஒரு நிறுவனம் நடத்துமாம். இது என்ன நீதி என்று நாம் கேட்க விரும்புகின்றோம்.

அதேபோன்று இதுவரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இப்போது அதனுடைய பெயரை MERIT SCHOLARSHIP என்று மாற்றியிருக்கிறார்கள்.

அப்படி என்றால், இங்கு வறுமை பின்னுக்குத் தள்ளப்பட்டு அறிவுத்திறன் முன்னுக்கு நிறுத்தப்படுகிறது. இது யாரை திருப்திப்படுத்த?

இந்தியா முழுக்க சமமற்ற கல்வி போக்கு இருந்து கொண்டு இருக்கிறது. சமூக ஏற்றத்தாழ்வுகள் இருந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த வாசகம் என்பது ஏழை மக்களுடைய எதிர்காலத்தை மிகப்பெரிய அளவிலே பின்னுக்குத் தள்ளும் என்பதை மறந்து விடக்கூடாது.

சத்துணவு திட்டம் ஐந்தாம் வகுப்பு வரைதான் தான் என்று சொல்கிறார்கள்.
மதிய உணவு திட்டத்தின் மூலமாக படித்து IAS, IPS அதிகாரிகள் ஆனவர்கள் உண்டு. அமைச்சர்களாக, மக்கள் பிரதிநிதிகளாக வந்தவர்களும் உண்டு. இப்போது அதற்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்த திட்டத்தை நாம் உறுதியாக எதிர்க்க வேண்டும். எதிர்க்க வேண்டும் என்பது மட்டுமல்ல இதற்கு நிரந்தர தீர்வு, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஆயத்தமாக வேண்டும். வாய்ப்பிருந்தால் இந்த பேரவையிலே அதை வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறி அமர்கிறேன். நன்றி.

இவ்வாறு அவர் பேசினார். அவர் பேசிய போது முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சி தலைவர் உள்ளிட்டோர் உன்னிப்பாக கவனித்தனர்.

அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் அவரது கருத்துகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#சட்டப்பேரவை_வளாகம்.
17.09.2020