தொடங்குகிறது மஜகவின் களப்பணிகள்…
போராட்ட ஆயத்தக்குழு அமைக்கப்பட்டது…
ஜனவரி.06.,
மனிதநேய ஜனநாயக கட்சி ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக சமரசமின்றி தொடர்ச்சியாக களமாடி வருகிறது.
ஒரு வட்டத்திற்குள் விவாதிக்கப்பட்ட விஷயத்தை வெகுமக்கள் விவாதமாக மாற்றி இதனை அரசியல் படுத்தி ஜனநாயக சக்திகளை மஜக ஒருங்கிணைத்ததோடு, சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளையும் ஓரணியில் குரலெழுப்ப செய்து இவ்விவகாரத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதில் பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் முன் விடுதலைக்கு அன்றைய அதிமுக அரசு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியதை போல, இவர்களுக்கு இன்றைய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிட வேண்டும் என்றும், கவர்னர் முடிவெடுக்காத பட்சத்தில் அதனை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று வாதிடும் போது, இத்தீர்மானம் முக்கிய அம்சமாக அதில் வாதிடப்படும் என்பதை தொடர்ந்து மஜக சுட்டிக்காட்டி வருகிறது.
இதனையே சட்ட வல்லுனர்களும், மனித உரிமை செயல்பாட்டாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இக்கோரிக்கையை முன்னிறுத்தி தொடர்ச்சியாக கோவை, நெல்லை, கடலூர், சேலம் ஆகிய இடங்களில் மத்திய சிறைகள் முற்றுகை, சென்னையில் தலைமைச்செயலக முற்றுகை, சென்னையில் சட்டமன்ற முற்றுகை என பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி போராட்டம் நடத்திய நிலையில், அடுத்தக்கட்ட போராட்டம் திருச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 04.01.2024 அன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் தஞ்சையில் நடைபெற்ற சிறப்பு நிர்வாகக்குழுவில் பிப்ரவரி 10, 2024 சனி அன்று திருச்சி மத்திய சிறை முற்றுகையிடப்படும் என தேதி அறிவிக்கப்பட்டது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்போராட்டத்தை ஒருங்கிணைக்கும் குழுவுக்கு இணைப்பொதுச்செயலாளர் செய்யது முகம்மது ஃபாரூக் அவர்கள் தலைவராக இருப்பார் என்றும், துணைத்தலைவர்களாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநிலச் செயலாளர் வல்லம் அகமது கபீர் ஆகியோர்கள் செயல்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழு விரிவுப்படுத்தப்பட்டு; அதற்கேற்ற வியூகங்களுடன் போராட்ட களம் எழுச்சிப்படுத்தப்படும் என்றும் கட்சி தலைமை அறிவித்திருக்கிறது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
06.01.2024