ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் பாரபட்சம் கூடாது..! மஜக சிறப்பு நிர்வாகக் குழுவில் தீர்மானம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக் குழு இன்று காணொளி வழியாக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் நடைப்பெற்றது.

இதில் ZooM வழியே பங்கேற்க வாய்ப்பிருந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அவைத் தலைவர் நாசர் உமரீ, இணைப் பொதுச் செயலாளர் JS.ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர் தைமியா, மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம்.தாஜ்தீன், ராசுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு..

1. சிறைவாசிகளை பாரபட்சமற்ற முன் விடுதலை செய்ய வேண்டும் :

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளையொட்டி ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலை செய்வதில் பாரபட்சமற்ற அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். கலவர வழக்குகளில் கைதாகி 10 ஆண்டுகளை கடந்து தண்டனை அனுபவித்த அனைத்து கைதிகளையும் சாதி, மதம் பாராமல் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

2.நீண்ட கால பரோல் வழங்க சட்ட ஆலோசனை:

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையில், தமிழக ஆளுநர் தொடர்ந்து மௌனம் கடைப்பிடிக்கும் நிலையில், கவர்னர் முடிவெடுக்கும் வரை அவர்களுக்கு நீண்டகால பரோல் வழங்க சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து நல்லதொரு முடிவெடுக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

3.மறைவிற்கு இரங்கல்:

கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மற்றும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லெட்சுமணன், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கே.எம்.நடராசன், ஆகியோருக்கும் நீட் தேர்வு பயத்தால் கடந்த ஒரு வாரத்தில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மதுரையை சேர்ந்த ஜோதி ஶ்ரீ துர்கா ஆகியோருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

4.தமிழகத்தில் அரசு பணிகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பணிகளிலும் 90% தமிழர்களுக்கே வேலை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

5.இந்தி திணைப்பை ஏற்க கூடாது:

தமிழக அரசின் பள்ளிக் கூடங்களில் கட்டாய இந்தி மொழி திணிப்பை அனுமதிக்க கூடாது என்றும், இருமொழி கொள்கைகளில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

6.நீட் தேர்வை கைவிடுக:

‘நீட்’ தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி வரும் நிலையில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.

7. கொரோனா சேவைக்கு பாராட்டு:

கடந்த ஆறு மாதங்களாக உலகையே அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனா பெருந்தொற்றால் தமிழகத்தில் பல உயிர்கள் பலியாகியுள்ளது. இவ்வுடல்களை அடக்கம் செய்வதற்கு உதவி செய்த மனிதநேய ஜனநாயக கட்சி சொந்தங்கள் மற்றும் இப்பணிகளில் அர்ப்பணிப்புகளுடன் செயல்பட்ட அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

8. நோயாளிகளின் நலன்:

அரசு பொது மருத்துவமனைகளில் வழக்கமான இதர மருத்துவ சிகிச்சைகளில் கவனம் செலுத்துவதோடு, ஆம்புலன்ஸ் சேவைகளையும் துரிதப்படுத்துவதில் தமிழக சுகாதாரத்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

மேற்கண்ட 8 தீர்மானங்களுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

இக்கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அணீஸ், பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக், பாபு ஷாகீன்ஷா நெய்வேலி இப்ராகிம், அணிச் செயலாளர்கள் அசாருதீன், ஏ.எம்.ஹாரீஸ், எம்.எம்.பாஷா, லேனா இசாக், பம்மல் சலீம் கலந்து கொண்டனர்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தலைமையகம்.