புதிய கல்வி கொள்கையா? கல்வி கொலையா? மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கேள்வி.

செப்.9,

“தேசிய கல்வி கொள்கையை நிராகரி” என்ற முழக்கத்தோடு கல்வி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தொடர் காணொளி கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.

இதில் பேராசிரியர்கள், அறிவுஜீவிகள், பல்துறை அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கைக் கோர்த்துள்ளனர்.

இன்றைய கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுப்பராயன் அவர்களும் பங்கேற்று உரையாற்றினார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

நாட்டின் எதிர்காலத்தையும், நிகழ்காலத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இது போன்ற கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம்.

மத்திய பாஜக அரசு, மோடி அரசு எதை செய்தாலும் எதிர்ப்பதா? என்ற கேள்வியை சிலர் எழுப்பலாம்.

அவர்கள் செய்வது எல்லாம் மக்களுக்கு எதிராக இருக்கிறது என்பதால்தான் நாம் எதிர்க்கிறோம் என்பதை இங்கே சுட்டிக் காட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

ஒரு மலையின் மீது பாதை அமைப்பது என்பது முயற்சி. ஒரு மலையை குடைவது என்பதும் ஒரு முயற்சிதான். ஆனால் ஒரு மலையை பிடுங்கி கடலில் தூக்கிப் போட நினைப்பது வீணான முயற்சி. நடக்காத முயற்சி. இதைத் தான் மத்திய பாஜக அரசு செய்கிறது. அதனால் தான் நாட்டு நலன் கருதி எதிர்க்கிறோம். மக்கள் நலன் கருதி போராடுகிறோம்.

இக்கல்வி கொள்கையை முழுவதுமாக எதிர்க்கிறீர்களா? என சிலர் கேட்கிறார்கள். தவறுகள் அதிகம் இருப்பதால் அவற்றை திருத்த வேண்டும் என கேட்கிறோம்.

நீதிக்கான குரல் எப்போதுமே தமிழகத்திலிருந்து தான் முதலில் கிளம்பும். ஏனெனில் இது சமூக நீதியின் தாயகம்.

தமிழகம், கேரளா, பஞ்சாப், மே.வங்கம், ஜம்மு காஷ்மீர், நாகலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் உள்ள அரசியல் விழிப்புணர்வு பிற மாநிலங்களில் இல்லாதது சிலருக்கு சாதகமாக உள்ளது.

இந்நிலையில் தமிழகத்திலிருந்து அழுத்தமான எதிர் குரல்கள் எழுந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இக்கல்வி கொள்கையை உன்னிப்பாக ஆய்வு செய்ய வேண்டும்.

இதில் “சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட “என்ற வாசகத்தை தந்திரமாக நீக்கிவிட்டு, சமூக பொருளாதார சாதகமற்ற குழுக்கள் (Socio-Economically Disadvantaged Group) என்ற சொல்லாடலை பயன்படுத்தியிருப்பது அவர்களின் வஞ்சகத்தை காட்டுகிறது.

அதாவது இட ஒதுக்கீட்டு கொள்கையில் பொருளாதார அளவுகோலை நுழைக்கும் தந்திரம் இது.

இதை நினைக்கும் போது பாரதிதாசனின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. இதை தமிமுன் அன்சாரி சொன்னால் விமர்சனமாகும் என்பதால், நான் அதை கூற விரும்பவில்லை.

இந்த NEP – 2020 என்ற கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானது.

தென்னிந்திய நல உரிமை சங்கம், நீதிக் கட்சி, திராவிடர் கழகம் தொடங்கி தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு, பெரியார், அண்ணா, MGR, கலைஞர், ஜெயலலிதா அம்மா போன்றோர் ஏற்படுத்திய அரசியல் தாக்கம், அதனால் கிடைத்த 69% இடஓதுக்கீடு ஆகியவற்றுக்கு எல்லாம் ஆபத்து என்பதால்தான் இதை எதிர்க்கிறோம்.

எங்களுக்கு சமமாக படிப்பதா? எங்களுக்கு நிகராக சம்பளம் வாங்குவதா? அமெரிக்காவிலும், லண்டன் போன்ற நகரங்களிலும் எங்களுக்கு நிகரகாக அமர்வதா? என்ற கோபம் சாமனியர்களின் மீது சிலருக்கு வருகிறது.

அந்த வகையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள், கிராமப்புற மக்கள் ஆரம்ப நிலையிலேயே வடிகட்டப்பட வேண்டும் என்ற நோக்கமே இக்கொள்கையில் நிறைந்திருக்கிறது.

வசதி படைத்தோர், வாய்ப்புகள் உள்ள நகர்புறத்தோர், குறிப்பிட்ட உயர் சாதியினர் பயனடைய இதில் வாய்ப்புகள் உள்ளது.

இந்த கல்வி கொள்கை சமூக நீதிக்கு எதிரானது என்பதே உண்மை. எனவே எதிர்க்கிறோம்.

இது புதிய கல்வி கொள்கை அல்ல. புதிய கல்வி கொலை .

3-ஆம் வகுப்புக்கு பொது தேர்வாம். அதாவது 8 வயதில் ஒரு குழந்தை பொதுத் தேர்வுக்கு தன்னை தயார் படுத்த வேண்டும் என்பது என்ன நீதி?

அடுத்து 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வாம்.

வளர்ந்த பல நாடுகளில் கூட 8 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் இல்லை.

உலகிலேயே ஆரம்ப கல்வியை வழங்கும் சிறந்த நாடாக பின்லாந்து உள்ளது. அந்த நாட்டை பின்பற்றாமல், எல்லோரும் படிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என எண்ணாமல், இவர்கள் ஆரம்பத்திலேயே வடிகட்டி, திட்டமிட்டு பாதியிலேயே படிப்பை நிறுத்தும் வேலையை செய்கிறார்கள்.

அதாவது எல்லோரும் படித்து விடக் கூடாது என்பதே இவர்களின் நோக்கம்.

பிறகு 9-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை வருடத்திற்கு இரு முறை செமஸ்டர் தேர்வு எழுத வேண்டுமாம்.

பிறகு கலை அறிவியல் கல்லூரிக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு எழுதி, அதில் வென்றால்தான் அந்த பட்டப் படிப்பு வாய்ப்பும் கிடைக்குமாம்.

அதை கூட பல்கலைக்கழகங்கள் நடத்தாது. National Testing Agency நடத்துமாம்.

அதாவது நீட் தேர்வை கொண்டு வந்து, கிராமிய, எளிய மற்றும் பின்தங்கிய சமூகங்களை சேர்ந்த குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவ கனவை கலைத்தது போல, BA, BSC, B Com போன்ற பட்டப் படிப்புகளின் கனவுகளையும் தகர்க்க துடிக்கிறார்கள்.

அமெரிக்காவில் ஒரு வருடத்தில் உருவாகும் பொறியாளர்களை விட தமிழகத்தில் உருவாகும் பொறியாளர்களின் எண்ணிக்கை அதிகம். நாம் அந்த சாதனைகளை செய்தவர்கள் .

தரமான பொறியாளர்களை, தரமான மருத்துவர்களை, தரமான பட்டதாரிகளை உலகிற்கு நம் நாடு வழங்கியுள்ளது. அவர்கள் எல்லாம் நுழைவுத் தேர்வு எழுதியா சாதித்தார்கள்?

அடுத்து இன்னொரு வேதனை என்னவெனில், ஐந்தாம் வகுப்பு வரை தான் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுமாம்.

காமராஜர் காலத்தில் தொடங்கிய மதிய உணவு திட்டத்தில், மதிய உணவுக்காக பள்ளிகளுக்கு படிக்க வந்தார்கள். அது உயர்நிலைப் பள்ளி வரை விரிவுப்படுத்தப்பட்டதும் அதன் பயனால் படித்து IAS, IPS ஆனவர்கள் அதிகம். இதுவெல்லாம் இனி என்னவாகும்?

உதவித் தொகை (scholarship) பெற்று உயர் கல்வி பெற்றவர்கள், இனி தகுதி அடிப்படையில் அதாவது Merit scholar Ship மட்டுமே பெற முடியுமாம்.. இது எத்தனை பேரை பாதிக்கும்?

5-ஆம் வகுப்பு வரை தாய் மொழி கல்வி என்ற கவர்ச்சி அறிவிப்பு உள்ளது. அதில் ‘முடிந்தவரை’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஏமாற்று வேலையாகும்.

மத்திய அரசின் ‘கேந்திரிய வித்யாலயா’ இதை நடைமுறை சாத்தியமில்லை என்று கூறி விட்டது.

இதில் மும்மொழி கொள்கை என்று மொழி திணிப்புக்கு திட்டமிடுகிறார்கள்.

அதில் இரண்டு இந்திய மொழிகள் என்று வரையறை செய்து, இந்தி, சமஸ்கிருதத்தை முன்னிறுத்துகிறார்கள். அப்படியெனில் தாய் மொழி அல்லது பொது மொழியான ஆங்கிலம் என ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும்.

அதாவது மாநில மொழிகளை பலமிழக்க செய்யும் வேலை இது.

தாய்மொழியாக யாரும் பேசாத சமஸ்கிருதத்திற்கு, பட்ஜெட்டில் 50 கோடி ஒதுக்கியுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட, மக்கள் பேசும் 22 மொழிகளுக்கு இல்லாத சலுகை இது.

இந்தியின் ஆதிக்கத்தினால் பல மாநில மொழிகள் அழிந்து வருகின்றன. இப்போது ராஜஸ்தானில் ராஜ்தானி மொழியை அலுவல் மொழியாக்க போராட்டம் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் மொழியுரிமை போராட்டத்தை இப்போது தான் பல மாநிலங்கள் உணர்கின்றன.

நாம் பிற மொழிகளை எதிர்க்கவில்லை. அவற்றை கற்பதை தவறென கூறவில்லை. திட்டமிட்ட திணிப்பை, தாய் மொழி அழிப்பை எதிர்க்கிறோம்.

பிற மொழிகளை கற்க பல வழிகள் உள்ளது. அதற்கு பள்ளிக்கூடத்தை பயன்படுத்தக்கூடாது. அறிவை கற்பது வேறு. மொழியை கற்பது வேறு.

தற்போது நாடு தழுவிய நிலையில் உயர் கல்வி கற்போர் எண்ணிக்கை 28.3% ஆகும். இதை அடுத்த 15 ஆண்டுகளில் 50% ஆக உயர்த்துவதே நோக்கம் என மத்திய அரசு இதை நியாயப்படுத்துகிறது.

ஆனால் 2011-லேயே தமிழகத்தில் 49% ஆக இதில் நாம் சாதித்து விட்டோம்.

எனவே தான் நீங்கள் வேறு, நாங்கள் வேறு என்கிறோம். அதாவது அறிவில், ஆற்றலில்…

எனவேதான் வேறுபட்ட வளர்ச்சி, கலாச்சாரம், பின்னணி கொண்ட கூட்டரசில் இதை திணிக்காதீர்கள் என்கிறோம். கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்காதீர்கள் என்கிறோம்.

கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிறோம்.

இதையெல்லாம் சுட்டிக் காட்டினால், தேசவிரோதிகள் என முத்திரை குத்தி தப்பிவிட நினைக்கிறார்கள்.

நாங்கள் கூறும் தேசியவாதம் அமைதி, ஒற்றுமை, வளர்ச்சி சார்ந்தது. நீங்கள் பேசுவது மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் தேசியவாதமாகும்.

நாம்தான் உண்மையான தேசப்பற்றாளர்கள். தேசத்தின் நலன் கருதியும், ஒற்றுமை கருதியும் பேசுகிறோம்.

எனவே அரசியலை கடந்து ஜனநாயக சக்திகளை இக்கல்வி கொள்கைக்கு எதிராக திரட்ட வேண்டும். தேசிய அளவில் கம்யூனிஸ்ட் தோழர்களும், காங்கிரஸ் கட்சியின் நண்பர்களும் இதை தீவிரமாக மக்களிடம் முன்னெடுக்க வேண்டும்.

இப்புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சட்ட மன்றத்தில் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்.

தொடர்ந்து எல்லோரோடும் இணைந்து, இதில் மாற்றங்களும், திருத்தங்களும் ஏற்பட களமாடுவோம் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வுக்கு மஞ்சுளா தேவி தலைமையேற்றிருந்தார். பால் மைக்கேல்ராஜ் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
09-09-2020