ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 24 ஆண்டு காலம் போராடியவர் வைகோ!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு.!


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நடத்திய களப் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டத்தை பாராட்டும் வகையில் காணொளி கருத்தரங்கு நடைப்பெற்றது.

அதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

இந்த நிகழ்வு குறித்த விளம்பரத்தில் ஒரு இடத்தில் கூட பாராட்டு விழா என குறிப்பிடப்படவில்லை. இதை அண்ணன் வைகோ அவர்களும் விரும்பவில்லை என தெரிகிறது. ஆனாலும் நாம் அவரை பாராட்டுகிறோம் எனில், இதில் அவரது போர்குணமிக்க, சமரச மற்ற களப்பணிகள் இருப்பதால்தான்.

பல தலைவர்களும், கட்சிகளும், சுற்றுச்சூழல் அமைப்புகளும் இதற்காக போராடியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் உத்வேகம் கொடுக்க கூடிய வகையில் அவரது உழைப்பு இருந்திருக்கிறது.

பழிச் சொல்களையும், அவதூறுகளையும் தாங்கிக் கொண்டு போராடியிருக்கிறார்.

இதன் அபாயத்தை தூத்துக்குடி மக்களே உணராத காலத்தில், தமிழகத்தில் மற்ற எவரும் அறிந்திடாத நேரத்தில் இப்போராட்டத்தை தொடங்கி, 24 ஆண்டு காலமாக களமாடி வந்திருக்கிறார்.

இப்போது உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவும் தாக்கல் செய்திருக்கிறார்.

அவரது நெடிய போராட்டங்கள் சிலிர்க்க வைப்பவை. 05.03.1996-ல் தூத்துக்குடியில் இந்த ஆலைக்கு எதிராக அவர் நடத்திய முதல் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி 28.04.2018 அன்று தூத்துக்குடியில் ஆலையை மூடக் கோரி நடைப்பெற்ற பொதுக் கூட்டம் வரை 24-ஆண்டுகள் தொடர் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்.

இதில் 14.05.1997-ல் தொடங்கி 3 நாட்கள் ஸ்ரீவைகுண்டம் தொடங்கி தூத்துக்குடி வரை அவர் நடத்திய நடை பயணம் குறிப்பிடத்தக்கது.

04.07.1997-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் 36 கிராமங்களில் அவர் நடத்திய விழிப்புணர்வு பரப்புரையும், 30.08.1997-ல் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் அவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு முன்பு நடத்திய முற்றுகை போராட்டமும் இத்தருணத்தில் நினைவு கூற வேண்டியவையாகும்.

இந்த ஆலையை மூட வேண்டும் என்பதற்காக 24 ஆண்டுகளில் 26 முறை நீதிமன்ற நடவடிக்கைகளில் அவர் பங்கேற்றிருக்கிறார். அதில் 16.10.2012 அன்று டெல்லியில் ஓரே நாளில் 20 அமர்வுகளில் பங்கேற்று வாதாடியுள்ளதை குறிப்பிட விரும்புகிறேன்.

இது தொடர்பான பசுமை தீர்ப்பாயத்தின் நிகழ்வுகளில் 8 முறை பங்கெடுத்திருக்கிறார்.

இப்படி அயராது தொடர்ச்சியாக அவர் நடத்திய போராட்டங்கள் பலருக்கும் உத்வேகத்தை கொடுத்தது.

அதற்காகத்தான் அவரை பாராட்டுகிறோம்.

இதற்காக போராடிய தலைவர்கள், கட்சிகள், அமைப்புகளையும் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.

தூத்துக்குடியில் இந்த ஆலைக்கு எதிராக நடைப்பெற்ற போராட்டத்தில் அரச வன்முறைக்கு, துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி 13 பேர் உயிர் துறந்தனர்.

நான் இது குறித்து தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து அதை கண்டித்து பேசினேன்.

இந்த நிகழ்ச்சியில் அந்த தியாகிகளையும் நினைவு கூறுவோம். இந்த வெற்றியை அவர்களுக்கு சமர்ப்பிப்போம்.

இதற்காக பல கட்ட போராட்டங்களை நடத்திய அண்ணன் வைகோ அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் புரட்சிகர வாழ்த்துக்களை கூறி என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி.

இவ்வாறு அவர் பேசினார். இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் பங்கேற்று உரையாற்றினர்.

நிகழ்வுக்கு செந்தில் அதிபன் தலைமை ஏற்க, தாயகம் சுரேஷ் அவர்கள் வரைவேற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியை வல்லம்.பஷீர் அவர்கள் தொகுத்து வழங்கினார். நிறைவாக அமல் ஸ்டாலின் பீட்டர் நன்றி கூறினார்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
22-08-2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.