திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரஹ்மான்கான் மரணமடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வேதனையளிக்கிறது.
மாணவர் அரசியலில் களமாடி, ஆதிக்க இந்திக்கு எதிராக போராடியவர்.
பெரியார், அண்ணா போன்ற தலைவர்களால் பாராட்டப் பெற்று, கலைஞர் அவர்களின் நேசத்திற்குரிய உடன்பிறப்பாய் திகழ்ந்தவர். சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் வலம் வந்தவர். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றியவர்.
எதிர்கட்சி உறுப்பினராய் பணி புரிந்த காலங்களில் சட்டசபையில் ‘இடி’ முழக்கம் எழுப்பியவர் என்பதும், அமைச்சராய் பணி புரிந்தப் போது அடக்கத்துடன் செயலாற்றியவர் என்பதும் அவரது சிறப்புகளாகும்.
நான் புதுக்கல்லூரியில் பயின்ற போது, 1996-ஆம் ஆண்டு விடுதி நாள் விழாவுக்கு வருகை தந்தார். அன்று அவர் ஆற்றிய உரை கம்பீரமாய் இருந்தது.
பார்க்கும் இடங்களில் எல்லாம் பளீர் சிரிப்பை வெளிக்காட்டுவது அவரது இயல்பாகும். அவருடன் உரையாடும் போது அரசியல் விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். உலக நிகழ்வுகள், வரலாற்று அறிவு என அவரது பேச்சில் தகவல்கள் நிறைந்திருக்கும்.
இன்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆற்றல் மிகு கொள்கையாளரை இழந்திருக்கிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது மறு உலக வாழ்வு சிறக்கவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி,
20.08.2020