ஜனநாயகம் காக்க உறுதியேற்போம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சுதந்திரதின வாழ்த்துச் செய்தி!

நம் இந்திய திருநாடு 74-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஐரோப்பியர்களிடமிருந்து விடுதலை பெற ஆயுதப் புரட்சிகளும், மக்கள் கிளர்ச்சிகளும், அஹிம்சை வழி போராட்டங்களும் நமது மண்ணில் நடைப்பெற்றன .

உயிரிழப்புகள், துரோகங்கள், படு காயங்கள், சிறைவாசங்கள், நாடு கடத்தல் என நமது முன்னோர்கள் சந்தித்த நெருக்கடிகளையும், தியாகங்களையும் இத்தருணத்தில் எண்ணிப் பார்க்கிறோம்.

இன்று சமகாலத்தில் நம் நாடு சந்தித்து வரும் சிக்கல்களையும், சவால்களையும் அதோடு ஒப்பிட்டு பார்க்கிறோம்.

மொழி, பண்பாடு, கலாச்சாரம், மதம், சாதி, இனம், நிலவியல், பருவ காலம் ஆகியவற்றில் வெவ்வேறு தன்மைகளை கொண்டிருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையோடு நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். அதுவே இந்தியாவின் சிறப்பாக இருக்கிறது.

இவற்றுக்கு இன்று அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதை நினைத்துப் பார்க்கின்ற போது, நமது முன்னோர்கள் இதற்காகவா சுதந்திரப் போராட்டங்களை நடத்தினார்கள்? அவர்களது கனவுகள் எல்லாம் சிதைவது நியாயம் தானா? என்ற கேள்விகள் நம் மனங்களை அதிர செய்கிறது.

நாட்டின் நரம்பு மண்டலங்களாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை வேட்டையாட துணை போவது, அனைவரும் உயர் கல்வி பெறுவதை தடுக்க நினைப்பது, கூட்டாட்சி தத்துவத்தை பலஹீனப்படுத்துவது என அரசியல் பெரும்பான்மையின் துணையோடு நம் நாட்டில் நடைபெறும் சில நிகழ்வுகள் ஜனநாயகத்தின் ஈரக்குலையை பிடுங்குவதாக இருக்கிறது.

நாட்டின் ஒற்றுமையையும், வளமான எதிர்காலத்தையும் கட்டியமைக்க, அனைவரும் ஒன்றுபட்டு கைக்கோர்த்து அணி திரள வேண்டிய சூழல் தற்போது உருவாகியிருக்கிறது.

கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில் கொண்டாடும் இச் சுதந்திர தினத்தில், நாட்டுக்காக தியாகம் செய்த நமது முன்னோர்களின் தியாகங்களை மனதில் ஏந்துவோம்.

அவர்களின் கனவுகளை சாத்தியப்படுத்திடும் வகையில், நமது நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க உறுதியேற்போம்.

உலகம் எங்கும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
14.08.2020