ஐரோப்பியர்களுக்கு எதிரான விடுதலைப் போரில் ஆயுதக் கிளர்ச்சிகள் மூலம் நடைப்பெற்ற வீரம் செறிந்த ரத்த வரலாறுகள் ஏராளம்.
அதில் வேலூர் புரட்சி முதன்மையானது.
1806 ஆம் ஆண்டு இதே ஜூலை 10 ஆம் நாளில் தான் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் நடைப்பெற்றது.
அதை சிப்பாய் கலகம் என ஆங்கிலேயர் வர்ணித்தனர். ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் அதை முதல் இந்திய சுதந்திப் போராட்டம் என திருத்தினர்.
விடுதலைப் போராளி திப்பு சுல்தானின் உயிர் தியாகத்திற்கு பிறகு அவரது குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களால் சிறை வைக்கப்பட்டனர்.
விழிகளில் விடுதலை நெருப்பையும், இதயத்தில் வீரத்தையும் கொண்டிருந்த அவரது பிள்ளைகள் பிரிட்டனின் துரைத்தனத்திற்கு அடங்கிப்போக தயாராக இல்லை.
மானமா? சமாதானமா? என்றால் மானமே முக்கியம் என முழங்கினார்கள்.
சிறைப்பட்டாலும் சீற்றம் தணியவில்லை. பாட்டனார் ஹைதர் அலியின் தியாகமும், தந்தை திப்பு சுல்தானின் தீரமும் அவர்களை வழி நடத்தியது.
தங்கள் தாகம் சுதந்திர நாடே என உறுமினர்.
தாங்கள் சிறை வைக்கப்பட்டிருந்த கோட்டையிலேயே ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சியை தொடங்குவது என அவர்கள் தீர்மானித்தனர்.
இதற்கு முன்னோட்டமாக அவர்கள் எடுத்த முடிவு துணிச்சல் மிக்கது. தியாகப்பூர்வமானது.
தங்கள் சகோதரிக்கு திருமணம் நடத்த முடிவு செய்தனர். ஜூலை 9 என தேதியை திட்டமிட்டனர்.
திருமணத்தை முன்னிட்டு அன்றைய தினம் வீரர்களும், மற்றவர்களும் எளிதாக சந்திக்க முடியும் என்பதால், அடுத்த நாள் ஜூலை 10 அன்று புரட்சியில் ஈடுபடுவது எளிது என கருதினர். அதன்படியே போர் திட்டங்கள் வகுக்கப்பட்டது.
https://m.facebook.com/story.php?story_fbid=2601889973244095&id=700424783390633
ஆம். மகிழ்ச்சிக்குரிய திருமண நிகழ்வை புரட்சிக்கு பயன்படுத்திய புனிதப் போராளிகள் அவர்கள்!
திருமண நிகழ்வுதானே என ஆங்கிலேய அதிகாரிகளும் அலட்சியமாக இருந்தனர்.
வெளியே ஃபக்கீர்கள் எனும் நாடோடி பாடகர்கள் தங்கள் எழுச்சி மிகு பாடல்கள் மூலம் மக்கள் ஆதரவை திரட்டியவாறு இருந்தனர்.
கோட்டை கைப்பற்றப்பட்ட பிறகு, புரட்சியாளர்களுடன் மக்களும் கைக்கோர்ப்பது இதன் நோக்கமாகும்.
நள்ளிரவு ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கு புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது. அதிகாலை 5 மணிக்குள் ஆங்கிலேய தளபதிகள், வீரர்கள் உட்பட 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
விடியற்காலை சூரியன் சிவந்து உதித்ததும், திப்புவின் மூத்த மகன் மொய்தீன் கோட்டையில் இருந்த ஆங்கிலேயக் கொடியை இறக்கி, தங்கள் ஆட்சியின் புலிக்கொடியை ஏற்றினார். சுதந்திர முழக்கங்களை எழுப்ப கோட்டை அதிர்ந்தது.
அதற்குள் சென்னையில் இருந்த ஆங்கிலேய தளபதிகள் அடுத்தடுத்து இயங்கினார்கள். ஆற்காட்டில் முகாமிட்டிருந்த ஆங்கிலேய படைகள் வேலூரை நெருங்கின.
ஆங்கிலேயர்களின் பிரம்மாண்ட சிறப்பு படைப்பிரிவு, வேலூர் கோட்டையை முற்றுகையிட்டு நவீன ஆயுதங்களோடு மோதியது.
800க்கும் அதிகமான இந்திய வீரர்களை கொன்று புரட்சியை அடக்கினார்கள். பல இந்திய தளபதிகள் பீரங்கி வாயில்களில் வைத்து சிதறடிக்கப்பட்டனர்.
வேலூர் கோட்டை பிண மேடுகளால் நிறைந்தது. கோட்டையை சுற்றி ஒடிய பாலாற்றில் ரத்தம் கலந்தது.
புரட்சியை தூண்டிய திப்புவின் குடும்பத்தினர் கொல்கத்தாவுக்கு கடத்தப்பட்டனர்.
தங்கையின் திருமணத்திற்கு கட்டப்பட்டிருந்த நறுமண மாலைகளின் வாசம் வற்றுவதற்குள் அவர்களின் வாழ்வு வதங்கியது!
ஆனால், இந்திய விடுதலை வரலாற்றில் அவர்களின் தியாகம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
இன்று திப்புவின் வாரிசுகள் கொல்கத்தாவின் வீதிகளில் தொழிலாளர்களாகவும், சாமானியர்களாகவும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் முன்னோர்களின் தியாகங்களையும், அதை விழாவாக கொண்டாட தடை விதிக்கப்பட்ட செய்திகளையும் அசைப் போட்டுக் கொண்டே பயணிக்கிறார்கள்.