தமிழினத்தின் முகவரியை அழிக்க நினைப்பவர்கள் படுதோல்வியை சந்திப்பார்கள்! – பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA

ஜூலை 5,

மே 17 இயக்கம் சார்பில் “உரிமை மீட்க விழி தமிழா” என்ற தலைப்பில் ஜூன் 2 முதல் ஜூன் 5 வரை தொடர் இணைய வழி கருத்தரங்கு நடத்தப்பட்டது.

அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி தலைமையேற்ற நிகழ்வில், காணொளி வழியாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.

அவர் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

இனமான உரிமைக்காக போராடும் இயக்கமாக மே 17 இயக்கம் வளர்ந்து வருவதாக நாங்கள் கருதுகிறோம்.

தமிழ் தேசியத்தையும், திராவிட இயக்கத்தையும் இணைத்து பயணிப்பதாலேயே மே 17 இயக்கம் மீது நாங்கள் அதிகமாக நேசம் பாராட்டுகிறோம்.

இந்த தலைப்பில் காணொளி வழியாக தொடர் கருத்தரங்கை நடத்துவதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

வடக்கே உள்ள சிலருக்கு தமிழ்நாடு என்ற வார்த்தை கசக்கிறது. தமிழ், தமிழர் என்றாலே முகம் சுருங்குகிறது.

பெரியாரின் பெயரை கேட்டால் கோபம் வருகிறது. திராவிட இயக்கம், தமிழ் தேசியம் என்ற கொள்கைகளை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதை ஏற்காமல், தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்க நினைக்கிறார்கள்

உலகின் பழமையான இனம் தமிழினம். இது திருக்குறளை உலகிற்கு தந்த இனம். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற தத்துவத்தை உலகிற்கு சொல்லிய இனம்.

திராவிட மொழிகளில் மூத்த மொழியை மண்ணின் மொழியாக கொண்ட தமிழினத்தின் முகவரியை அழிக்க நினைப்பவர்கள் படு தோல்வியைதான் சந்திப்பார்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=2590014464431646&id=700424783390633

தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல் சூழலை தங்களுக்கு சாதகமாக சிலர் மாற்ற நினைக்கிறார்கள்.

நேரடியாக அரசியல் அதிகாரத்திற்கு வர முடியாத நிலையில், கொல்லைப்புறம் வழியாக நுழைய துடிக்கிறார்கள்.

இதை தடுத்து நிறுத்துவது தமிழர்களின் வரலாற்று கடமையாகும்.

கழகங்கள் இல்லாத தமிழ்நாடு; கவலைகள் இல்லாத தமிழகம் என்ற பாஜகவின் முழக்கத்தை இதன் பின்னணியில் பார்க்க வேண்டும்.

எனவேதான் திராவிட கட்சிகள் பலஹீனமடைந்து விடக் கூடாது என்று கவலைப்படுகிறோம். இன்றைய அரசியல் சூழலில் அது தமிழ்நாட்டுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கி விடும்.

மாநில சுயாட்சி என்பது அரசியல் கனவாகவே இருக்கும் நிலையில், இன்று கூட்டாட்சி தத்துவம் என்பது கேள்விக்குறியாகி வருகிறது.

மாநில உரிமைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து பறித்து வருகிறது.

பிரதமர் மோடி அவர்கள் அதிபர் ஆட்சி முறையை நோக்கி நகர்ந்து வருவதாக சந்தேகங்கள் வலுத்து வருகிறது.

மாநில முதல்வர்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, அவர்கள் மேயர் அந்தஸ்துக்கு இறக்கப்படலாம். மாநில சட்டமன்றங்கள் மாநகராட்சி அந்தஸ்துக்கு குறைக்கப்படலாம்.

இந்தி ஏகாதிபத்தியத்தை இந்தியாவின் தேசியமாக கட்டமைக்கும் சூழலை உருவாக்கும் போக்கும் நிகழ்கிறது

இது இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், அரசியல் சாசன மாண்புகளுக்கும் எதிரான போக்காகும்.

இப்போது இட ஒதுக்கீடு கொள்கைகளை படிப்படியாக நீர்த்துப் போகச் செய்யும் சூழ்ச்சிகளை அரங்கேற்றி வருவதை பார்க்கிறோம்.

தென்னிந்திய நல உரிமை சங்கம், நீதி கட்சி, திராவிடர் கழகம், திராவிட கட்சிகள் ஏற்படுத்திய சமூக, கல்வி, அரசியல் பலன்களை நாசமாக்க நடக்கும் வஞ்சகங்களை எதிர்த்து போராட இளம் தலைமுறையை தட்டி எழுப்பும் கடமையை செய்ய வேண்டும்.

திரைப்படங்களை ரசிப்பது தவறல்ல. ஆனால் கோடம்பாக்கத்திலிருந்து தலைவர்கள் உருவாக வேண்டும் என நினைப்பது தவறு. நம் இளைஞர்களை இதிலிருந்து மீட்க வேண்டும். அதுபோல் டாஸ்மாக் கடைகளிலிருந்தும் மீட்க வேண்டும். இது போன்ற அடிப்படை பணிகளை செய்தால் தான் புரட்சிகரமான சிந்தனைகளை ஜனநாயக வழியில் உருவாக்க முடியும்.

அதற்கு இது போன்ற அறிவு சார்ந்த கருத்தரங்குகள் அவசியம் என கூறி, மே 17 இயக்கத்திற்கு புரட்சிகர வாழ்த்துக்களை கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவரது உரைக்கு பிறகு கேள்வி – பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் வந்த கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

உங்களை நாங்கள் என்னவாக பார்க்கப்பட வேண்டும் என நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், எங்களை சமூகநீதியாளர்கள் என்ற கோணத்தில் பார்க்க வேண்டும் என பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பதிலளித்தார்.

நிகழ்ச்சியின் போது மஜக-வின் களப்பணிகளையும், சமூகநீதி பணிகளையும் திருமுருகன் காந்தி அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர்.முத்தரசன், தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தோழர்.தனியரசு MLA, ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் தோழர்.அதியமான் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJKITWING
#தலைமையகம்
05-07-2020