வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA உரை!

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கொரோனா நெருக்கடியால் தவிக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களை விரைந்து தமிழகத்திற்கு மீட்டு வரக்கோரி இன்று சமூக இணையதள போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அதனையொட்டி தோழர் தி.வேல்முருகன் தலைமையில் Zoom வழியே காணொளி கருத்தரங்கம் இன்று நடைப்பெற்றது.

இதில் மனிதநேய ஐனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின் வருமாறு…

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்களுக்காக இன்று சமூக இணையதள போராட்டத்தை நடத்தி வரும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும், அதன் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுக்கும் எமது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்பிரச்சனையை கையிலெடுத்து முதலில் மஜக சார்பில் இணையவழிப் போராட்டங்களையும், களப் போராட்டங்களையும் ஜூன் 3 முதல் 8 வரை முன்னெடுத்தோம்.

இதில் அரசியல் தலைவர்கள், திரை உலகத்தினர், மனித உரிமை களத்தினர், எழுத்தாளர்கள் என பலரும் பங்கேற்றனர்.

களப் போராட்டங்களில் மக்கள் பங்கேற்றனர். உலகம் முழுக்க வாழும் தமிழர்கள் அந்த இணைய வழி போராட்டத்தை வழி நடத்தினர்.

மலையாளிகளுக்கு அடுத்தப் படியாக தமிழர்கள்தான் வெளிநாடுகளில் அதிகம் வசிக்கிறார்கள். கேரள அரசு மலையாளிகளை அழைத்து வருவதில் காட்டிய முனைப்பை தமிழக அரசு காட்டாதது வருத்தமளிக்கிறது.

இதில் போதிய கவனம் செலுத்தாமல் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் தூங்கி வழிவதாக புகார்கள் வருகிறது.

ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல. ஆப்பிரிக்கா அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா நாடுகளில் வாழும் தமிழர்களும் வேலை இழந்திருக்கிறார்கள். வருமானம் இழந்திருக்கிறார்கள்.

அவர்களின் கடின உழைப்பால் நமது நாட்டிற்கு அன்னிய வருவாய் குவிகிறது.

நம் தமிழகத்தின் உள் கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டிலும் அவர்களின் பங்களிப்பு உள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மாடி வீடுகள் என கட்டுமான வளர்ச்சிக்கு அவர்கள் வழிவகுத்துள்னர்.

தங்கள் சொந்த ஊர்களில் ஏரி,குளம் தூர் வாருதல், பொது சேவைகளுக்கு உதவி செய்தல் என பல அறப்பணிகளுக்கு அவர்கள் உதவுகிறார்கள்.

குறிப்பாக ஆசிய நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் தங்கள் உழைப்பின் வருமானத்தில் 80 சதவீதத்தை தாயகத்திற்குதான் கொண்டு வருகிறார்கள்.

இப்போது கொரோனா நெருக்கடிகளால் வேலை இழந்து தாயகம் திரும்பும் தமிழர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு திரும்பி செல்ல வாய்ப்பில்லை.

வேலை கொடுத்த நிறுவனங்கள் மீண்டும் வேலைக்கு அழைக்க உத்தரவாதமும் இல்லை.

எனவே இன்றைய நிலையில் அவர்களுக்கும் சேர்த்து புதிய பட்ஜெட்டை தமிழக அரசு போட வேண்டும்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட வாரியத்தை உயிரூட்டி ஒரு IAS அதிகாரிகள் நியமிக்க வேண்டும். இதன் மூலம் வேலை இழந்து தாயகம் திரும்பும் தமிழர்கள் தொழில் தொடங்க உதவ வேண்டும்.

எதிர்காலத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன்களுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்.

இப்போது தமிழக அரசு, மத்திய அரசிடம் வந்தே பாரத் திட்டத்தின்படி தமிழகத்திற்கு கூடுதல் விமான சேவைகளை குறைந்த கட்டணத்தில் கேட்டு பெற வேண்டும்.

நாங்கள் அவர்களுக்கு இலவச விமான டிக்கட்டுகளை கேட்டோம்.

இப்போது மஜக மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கூடுதல் கட்டணத்தில் சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்து அதில் பலரும் வந்துக் கொண்டிருக்கிறார்கள். வந்தே பாரத் திட்டத்தில் கூடுதல் விமான சேவைகள் கிடைத்தால் இந்த நிலை தேவைப்படாது.

சிறப்பு விமானங்களில் வருபவர்களுக்கு இரண்டு முறை கோவிட் டெஸ்ட் எடுப்பதால் 6 ஆயிரம் முதல் ஏழாயிரம் வரை செலவாகிறது. 7 நாட்கள் ஹோட்டலில் தங்க 7 ஆயிரம் செலவாகிறது. ஏற்கனவே அவர்கள் கூடுதல் செலவுகளோடு சிரமத்தில் வருகிறார்கள்.

வந்தே பாரத் திட்டத்தில் வருபவர்களுக்கு அரசு சார்பில் இதே போல் செலவாகிறது

இதனால் வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இவ்விஷயத்தில் கேரள அரசை தமிழக அரசு பின் பற்ற வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் கோவிட் டெஸ்ட் எடுத்து, அதில் நெகட்டிவ் என சான்றிதழ் வைத்திருந்தால் போதும். அவர்கள் விமான நிலையத்திலிருந்து நேரே தங்கள் வீடுகளுக்கு சென்று தங்களை இரண்டு வாரத்திற்கு தனிமைப்படுத்திக் கொள்ள கேரள அரசு அனுமதிக்கிறது.

கேரள அரசின் இதே நிலைபாட்டை தமிழக அரசும் எடுத்தால் , செலவுகள் மிச்சமாகும். பயணிகளுக்கு மன உளைச்சலும், நேரமும் மிச்சமாகும்.அரசுக்கும் சிரமங்கள் குறையும்.

தமிழக அரசு நமது இக்கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். தமிழக வாழ்வுரிமை கட்சி நடத்தும் இணைய வழி போராட்டத்தில் எல்லோரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டு எனது உரையை நிறைவு செய்கிறேன்.

https://m.facebook.com/story.php?story_fbid=2589128644520228&id=700424783390633

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், மல்லை. சத்யா, கொளத்தூர் மணி,கோவை ராமகிருஷ்ணன், பேராசிரியர்.சுந்தரவள்ளி,KM.ஷெரிப், மீ.த.பாண்டியன், நாகை.திருவள்ளுவன், சுந்தரமூர்த்தி, விடுதலை வேந்தன் உள்ளிட்ட தலைவர்களும், பல தமிழ் ஆளுமைகளும் பங்கேற்றனர்.

உலகெங்கும் உள்ள மஜகவினர் இன்று இந்த இணைய வழி போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

#BringBackTamils
#SetUpMinistryOfPersonalWelfare
#SetUpSeparateWelfareBoard

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
05.07.2020