காச நோய் துறை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLAஅறிக்கை!

காசநோய் தடுப்பு திட்டமானது இந்தியாவில் 2000 வருடத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்துறையில் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிப்பது, பரிசோதனை மேற்கொள்வது, சமூகத்தில் காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதென பல்வேறு பணிகளை காசநோய் தடுப்பு திட்ட பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

காற்றின் மூலம் பரவும் காசநோய் தொற்றை கூட பொருட்படுத்தாமல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும், இவர்களுக்கு எந்த ஒரு பணிப் பாதுகாப்பும் கிடையாது.

காசநோய் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவ காப்பீடு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, விபத்து காப்பீடு, ஊதிய உயர்வு போன்ற எதுவும் கிடையாது.

கள பணியின் போது விபத்துக்கள் நடைபெற்று 10 க்கு மேற்பட்ட பணியாளர்கள் இறந்து உள்ளனர். அவர்கள் குடும்பத்துக்கு அரசால் ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காசநோயை பிசிஆர் முறையில் கண்டறியும் சீபிநாட் மற்றும் ட்ரூநாட் எனப்படும் பரிசோதனை முறை கருவிகளை கொண்டுதான் மிகவும் சவாலாக இருக்கும் கொரோனா கண்டுபிடிப்பிற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

காசநோய் கிருமியை கண்டுபிடிக்க பயன்படுத்தபடும் இயந்திரத்தை கொரோனா நோய் கிருமி கண்டுபிடிக்க பயன்படுத்துவது போல், காசநோய் துறை பணியாளர்களை எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது சென்னையில் கொரோனா பணியில் ஈடுபடுத்தபட்ட காசநோய் துறை பணியாளர்கள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமை படுத்தப்பட்டு உள்ளனர்.

எந்தவித பலனும் இல்லாத நிலையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் இவர்கள் தற்போது பணியின் போது கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

காற்றின் மூலம் பரவும் காசநோய் தடுப்பு பிரிவில் அர்ப்பணிப்புடன் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, பணிப் பாதுகாப்பு வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
12.05.2020