மே 11,
நேற்று பஹ்ரைன் மண்டல மனிதநேய கலாச்சாரப் பேரவையின் நிர்வாகிகளுடன், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ZOOM காணொளி வழியாக கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் தலைமை தாங்கினார்.
இதில் மண்டல பொறுப்பாளரும், மாநில செயலாளருமான நாச்சிகுளம் தாஜூதீன் அவர்களும் பங்கேற்றார்.
பின்பு பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ அவர்கள் நிர்வாகிகளுடன் உரையாடினார். அவரது உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…
https://m.facebook.com/story.php?story_fbid=2457029491063478&id=700424783390633
யார், யாருக்கு உதவுவது என்று தெரியாமல் உலகம் விழி பிதுங்கி இருக்கிறது. நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையை கொரோனா உருவாக்கியுள்ளது.
இந்திய அரசு கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதால் அவ்வாறு கூறியுள்ளார்கள்.
இந்த ஊரடங்கு நமது வாழ்க்கை சூழலை மாற்றிப் போட்டிருக்கிறது. வீட்டிற்குள் எவ்வாறு முடங்கி வாழ்வது என்பதை கற்றுக் கொண்டிருக்கிறோம்.
இப்போது நமது சொந்த வேலைகளை நாமே செய்ய பழகிக் கொண்டிருக்கிறோம்.
பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வாழும் நீங்களும் ஊரடங்கின் அனுபவங்களை பெற்று வருகிறீர்கள். இது சங்கடமான அனுபவம். மனித குல வரலாற்றில் இதுவரை யாரும் பெறாத ஒரு அனுபவத்தை நம் தலைமுறையில் அனுபவிக்கிறோம்.
வளைகுடாவில் பல கம்பெனிகள் ஆட்குறைப்பில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பல கம்பெனிகள் 50 சதவீத சம்பளம்தான் தருவோம் என்பதாக சொல்கிறார்கள்.
இதுவெல்லாம் மாறி வரும் பொருளாதார நெருக்கடிகளை உணர்த்துகின்றன.
இவ்வாண்டு முழுக்க இதன் பாதிப்புகள் தொடரும் என நம்பப்படுகிறது. எனவே சிக்கனமாக வாழ வேண்டியது தவிர்க்க முடியாததாகி விட்டது.
பலர் ஜூன், ஜூலை மாதங்களில் திருமண ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். 50 பேருடன் எளிமையாக திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு. கடனின்றி, சிரமமின்றி திருமணத்தை நடத்தி விடலாம்.
மாப்பிள்ளை வெளிநாட்டில் இருந்தால் அது சிரமம். ஏனெனில் இங்கு அவர் எப்போது வருவார் என்பதும் சொல்ல முடியாது. வந்தால் 14 நாட்கள் தடுப்பு முகாமில் இருக்க வேண்டும். முன்பு போல் உறவினர்கள் நண்பர்கள் சூழ திருமணம் நடத்துவது இயலாத ஒன்று. எனவே அதன்படி விரும்புபவர்கள் திருமண நிகழ்வுகளை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு ஒத்திப் போடுவதே சிறந்த முடிவாக இருக்கும். இப்போது ஒன்று கூடல்களுக்கு அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலையே உள்ளது.
நீங்கள் எல்லாம் தாயகம் திரும்பி உறவுகளை பார்க்க துடிக்கிறீர்கள்.
நாட்டுக்கு அன்னிய வருவாயை ஈட்டித் தந்த உங்களுக்கு, இத்தருணத்தில் விமான கட்டணத்தில் சலுகை வேண்டும் என மஜக சார்பில் கேட்டிருக்கிறோம்.
இந்த மத்திய அரசு, ஈவு இரக்கமற்றதாக இருக்கிறது. கார்ப்பரேட்டு முதலாளி களை மட்டும் பாதுகாக்க துடிக்கிறது.
இவர்கள்,200 ரூபாய் சம்பாதிக்கும் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப ரயில் கட்டணத்தை கேட்டவர்கள் ஆயிற்றே…
காங்கிரஸ் கட்சி தலையிட்டு அந்த கட்டணத்தை நாங்கள் ஏற்கிறோம் என்றதும், உடனே மத்திய அரசு 85 % , மாநில அரசு 15 % என கட்டணத்தை ஏற்கும் என அறிவித்தார்கள்.
இதுவரை மக்களுக்கு மத்தியில் ஆளும் மோடி அரசு நேரடி உதவிகளை செய்யவில்லை.
மக்கள் இவர்களை கூர்ந்து கவனிக்கத் தொடங்கி விட்டார்கள்.
வெளிநாட்டில் வசிக்கும் நீங்களும் இதை கவனித்துக் கொண்டிருப்பீர்கள்.
நமது நாட்டு மக்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடிகளில் தவிக்கிறார்கள். நடுத்தர மக்கள் கெளரவம் காரணமாக வெளியே தங்கள் நிலையை கூற முடியாத நிலையில் உள்ளார்கள்.
கொரணாவிலிருந்து நமது நாடும் ,உலகமும் விடுபட , மகிழ்ச்சியான சூழல் திரும்பிட இந்த புனித ரமலானில் எல்லோரும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு மாநிலச் செயலாளரும் பஹ்ரைன் மண்டல பொறுப்பாளருமான நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள், நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை கூறியதுடன், இந்த நோய்த்தொற்றின் போது கவனமாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.
இதில் இறுதியாக மண்டல பொருளாளர் மண்ணை அலி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வில் மண்டல துணைச் செயலாளர் ஹபிபுல்லா, ஊடகப்பிரிவு செயலாளர் சுபஹான், கிளைச் செயலாளர் பரக்கத் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பஹ்ரைனில் அனைத்து அமைப்புகளும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் சார்பாக 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய தேவையான பொருட்களை வினியோகம் செய்தது குறித்து மண்டலச் செயலாளர் வல்லம் ரியாஸ் எடுத்துரைத்தார்.
பஹ்ரைனில் தங்களது கொரணா அனுபவம் குறித்து நிர்வாகிகள் கருத்துகளை கூறினர்.
பிறருக்கு சேவை செய்யும் அதே சமயம், நீங்கள் அனைவரும் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பொதுச் செயலாளர் அனைவரிடமும் அறிவுறுத்தினார். அதேபோல் தொடர்ந்து மக்கள் பணி செய்து வருகிற ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்து கட்சி தோழர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தகவல் ;
#மனிதநேயகலாச்சாரபேரவை
#தகவல்தொழில்நுட்பஅணி
#MKPitWING | #பஹ்ரைன்