வளைகுடா வாழ் தமிழர்களை மீட்க தாமதம் கூடாது : முதமிமுன்அன்சாரி MLA அறிக்கை!

வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்கள் பதிவு செய்யப்படுவதன் அடிப்படையில். மே-7 முதல் தாயகத்துக்கு அழைத்து வரப்படுவர் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

வளைகுடா நாடுகளில் வசிக்கும் நோய் தொற்றுக்கு ஆளாகாதவர்கள், முதல் கட்டமாக அழைத்து வரப்படுவர் என்றும் அவர்கள் இங்கு வந்த பிறகு 14 நாட்கள் தடுப்பு முகாமில் வைக்கப்படுவர் என்றும் மத்திய அரசு கூறிள்ளது.

தற்போது கேரள அரசு அபுதாபி மற்றும் துபையிலிருந்து மலையாளிகளை அழைத்து வர ஏற்பாடுகளை தொடங்கி உள்ளது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமான் ஆகிய நாடுகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கிறார்கள்.

அவர்களை அழைத்து வர தமிழ்நாடு அரசு சார்பில் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது? என்பதை அறிய அவர்களின் உறவினர்கள் விரும்புகிறார்கள்.

தமிழகத்திற்கு அமீரகத்திலிருந்து இரண்டு விமானங்கள் புறப்பட உள்ளதாக தெரிய வருகிறது.

அனைவரையும் விமானங்கள் வழியே அழைத்து வருவது உடனடி சாத்தியமா? எனத் தெரியவில்லை.

ஒருபுறம் விமானங்கள் வழியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், கப்பல்கள் மூலம் குறைவான செலவில், நிறைய பேரை, ஒரே நேரத்தில் அழைத்து வருவது சாத்தியமானதாகும்.

இது குறித்து தமிழக அரசு மத்திய அரசிடம் பேச வேண்டும்.

அழைத்து வரப்படுபவர்கள் இரண்டு வாரம் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்படுவர் என்பதால், அதற்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை பயன்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும்.

இவ்விஷயத்தில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட வாரியத்தை, ஒரு IAS அதிகாரியின் கீழ் செயல்பட வைத்து, சம்மந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் அவர்களை தொடர்பு கொள்ள செய்து, இப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயககட்சி,
06.05.2020