காவிரியின் உரிமையை பறிக்கும் முடிவை மத்தியஅரசு திரும்ப பெறவேண்டும் : முதமிமுன்அன்சாரி MLA அறிக்கை!

தமிழர்கள் கடும் போராட்டங்கள் வழியே பெற்ற உரிமைகளில் ஒன்று காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம்.

அது ஒரு ஆறுதல் என்றாலும், முழு நம்பிக்கையை ஏற்படுத்திடவில்லை. ஏனெனில் இதுவரை அது கூடி கலையும் அமைப்பாகவே இருந்து வருகிறது.

அது அணையின் மதகுகளை திறந்து மூடும் அதிகாரம் கொண்டதாக மாற்றப்பட வேண்டும் என்று நான் சட்டமன்றத்திலும் வாதிட்டுள்ளேன்.

இந்நிலையில் அதை மேலும் பலஹீனப்படுத்தும் வகையில் ஒரு முடிவை மத்திய அரசு எடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு தனது ஜல்சக்தித் துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்திருக்கிறது.

இதை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

நதி நீர் பங்கீட்டு சிக்கல்களுக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட அனைத்து தீர்ப்பாயங்களையும் இணைத்து ஒரே தீர்ப்பாயம் அமைப்பதற்கு மத்திய பாஜக அரசு செய்யும் முன்னோட்டமாக இதை பார்க்கிறோம்.

இதுவரை தமிழகத்தின் நீராதார உரிமைகளை நிலைநாட்டும் விவகாரத்தில் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையமும், காவிரி நதி நீர் ஒழுங்காற்று குழுவும் எதுவும் உருப்படியாக செய்யவில்லை என்ற நிலையில், அதை முழுமையான பொம்மை அமைப்பாக மாற்றுவதை ஏற்க இயலாது.

இது தமிழகத்தின் நீராதார உரிமையை அடியோடு பறிக்கும் செயலாகும்.

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட , 24.04.2020 ஆம் தேதியிட்ட அரசிதழை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

தமிழக அரசு, அமைச்சரவையைக் கூட்டி மத்திய அரசு இம்முடிவினை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,

பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.

29.04.2020