எத்தனை லட்சம்பேரை கைது செய்வீர்கள்? முதமிமுன்அன்சாரி MLA கேள்வி..!

இராமநாதபுரம்.மார்ச்.6.,

தொண்டியில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது…

நாட்டில் நடைபெறும் உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்பவே மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்த கறுப்பு சட்டங்களை திணித்திருக்கிறது.

விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது. கல்வி வணிகமயமாகி வருகிறது. சாமனிய மக்களுக்கு இலவச மருத்துவம் எட்டாக்கனியாகி வருகிறது.

மக்கள் தொழிற்சாலைகளை கேட்கிறார்கள். பல்கலைக்கழகங்களை கேட்கிறார்கள்.

ஆனால் யாரும் கேட்காத குடியுரிமை கறுப்பு சட்டங்கள் திணிக்கிறார்கள்.

தாத்தா, பாட்டியின் ஆவணங்களை கேட்டால் எங்கு போவது? பிரதமரால் கூட காட்ட முடியுமா?

1971-க்கு பிறகு தான் அவையெல்லாம் ஒழுங்குப் படுத்தப்பட்டன.

அதற்கு முன்னால் பிறந்தவர்களின் விபரங்களை கேட்டால் யாராலும் காண்பிக்க முடியாது.

மலைவாழ் மக்கள், பழங்குடிகள், நரிக்குறவர் போன்ற நாடோடி மக்களிடம் ஆவணங்களை கேட்டால் என்ன செய்வார்கள்? அவர்களது குடியுரிமை பறித்து என்ன செய்யப் போகிறீர்கள்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டத்தில் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் எந்த ஆவணத்தை காட்டுவார்கள்?

எனவேதான் இதை வேண்டாத வேலை என்கிறோம்.

அஸ்ஸாமில் இதை அமல்படுத்தியதால் பெரும் சமூக குழப்பம், சீரழிவு ஏற்பட்டுள்ளது.

தந்தை இந்தியராம். தாய் அந்நியராம். ஒரே தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளில் மூத்தவர் இந்தியராம். இளையவர் அந்நியராம்.

இப்படி NRC-யால் பல கேலிக்கூத்துகள் அங்கு நடந்துள்ளது.

அந்த NRC-யில் உள்ள 6 கேள்விகளை NPR சட்டத்தில் இணைத்ததால்தான் அவற்றை எதிர்க்கிறோம். வாஜ்பாய், மன்மோகன் சிங் காலத்தில் தயாரிக்கப்பட்ட NPR வடிவத்தை நாங்கள் எதிர்க்கவில்லை.

எங்கள் விழிகளை பிடுங்கினாலும் சரி, விரல் நகங்களை பிடுங்கினாலும் சரி, நாங்கள் பின் வாங்க மாட்டோம்.( பெண்கள் ஆவேச முழக்கம் )

இன்று ஒரு லட்சம் பேரை கைது செய்தால், நாளை இரண்டு லட்சம் பேர் கைதாவோம். அவர்களையும் கைது செய்தால் அடுத்து மூன்று லட்சம் பேர் வந்து போராடுவோம்.(மக்கள் ஆர்ப்பரிப்பு)

எத்தனை லட்சம் பேரை கைது செய்ய முடியும்? அவர்களை அடைத்து வைக்க சிறைச்சாலைகள் இருக்கிறதா? (கைத்தட்டல்)

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு பணிய மாட்டோம்.

அடக்கு முறைகளை ஏவினால், அதை அமைதி வழியில் எதிர்கொள்வோம்.

https://m.facebook.com/story.php?story_fbid=2315698085196620&id=700424783390633

இது நாட்டையும், அரசியல் சாசன சட்டத்தையும் காக்கும் போராட்டம். ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டம். இதில் சளைக்காமல் களமாடுவோம். இறுதியில் ஜனநாயகமும், மக்களும் வெல்வார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வில் வழக்கத்திற்கு மாறாக மஜக பொதுச் செயலாளரின் பேச்சை கேட்பதற்காக இரவு 11 மணி வரை கலையாமல் மக்கள் காத்திருந்ததாக போராட்ட குழுவினர் கூறினர்.

மாலை 7 மணிக்கு முத்துப்பேட்டையில் தொடங்கி அதிராம்பட்டினம், அம்மாபட்டினம், கோபாலப்பட்டினம் என காத்திருப்பு கூட்டங்களில் பேசிவிட்டு இறுதியாக தொண்டியில் இரவு 10.30-க்கு அவர் பேசினார்.

அவர் வருகையை முன்னிட்டு கிழக்கு கடற்கரை சாலை (ECR) சாலை எங்கும், போராட்ட களங்களில் வழக்கத்திற்கு மாறாக மக்கள் திரளாக கூடியிருந்ததாக போராட்டக் குழுவினர் கூறினர்.

நிறைவாக தொண்டியில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களுடன், துணைப் பொதுச் செயலாளர் மண்டலம் ஜெய்னுல் ஆபீதீன், மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன் மற்றும் தொண்டி நகர மஜக-வினரும் திரளாக பங்கேற்றனர்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#இராமநாதபுரம்கிழக்குமாவட்டம்
05-03-2020