ஆருயிர் மனிதநேய சொந்தங்களே….
இறையருள் சூழ இக்கடிதம் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன்.
அடிக்கடி கடிதம் வழியாக உங்கள் அனைவரோடும் உரையாட வேண்டும், உறவாட வேண்டும் என மனம் விரும்பினாலும், அயராத பயணங்களும் தொடர்ச்சியான பணி சுமைகளும் அதை நிறைவேறாமலேயே தடுத்துவிடுகின்றன என்பதுதான் உண்மை.
சொந்தங்களே..
நமது கட்சியை தொடங்கிய நாள் முதல் இன்றுவரை நாம் அனைவருமே ஓடியாடி உழைத்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் தான், ஐந்தாம் ஆண்டில் வலிமை மிக்க அரசியல் சக்தியாக உருப்பெற்றிருக்கிறோம்.
சற்றே திரும்பிபார்க்கின்ற போது, இவற்றையெல்லாம் நாம் எப்படி சமாளித்து கடந்து வந்தோம் என்ற ஆச்சரியங்கள் புருவங்களை உயர்த்த செய்கின்றன.
அலைகடலில் போராடி, புயல் வீச்சில் புரண்டு, எதிர் நீச்சல் அடித்து, நெருப்பு வளையங்களை கடந்து நமது பயணம் சாகசங்களாக அமைந்திருக்கிறது.
அரசியலின் ஆபத்தான வளைவுகளில் விழுந்து விடாமல், நமக்கான பாதைகளில் பயணித்தவாரே வெற்றிகளை குவித்துள்ளோம்.
அதன் விளைவாக, நமது சட்டமன்ற பணிகளை பாராட்டி மஹாராஷ்டிரா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியின் நிர்வாக குழுமமான புனே அமைதி பல்கலைக்கழகம் “இந்தியாவின் முன்மாதிரி இளம் சட்டமன்ற உறுப்பினர்” என்ற விருதை வழங்கிய போது, அது மனிதநேய ஜனநாயக கட்சிக்கு கிடைத்த மாணிக்கம் என சொந்தங்கள் போற்றினர். தொகுதி உறவுகள் வாழ்த்தினர்.
கொள்கை துணிச்சலுடன், யாரையும் காயப்படுத்தாத கண்ணியத்துடன், நேர்மையான அணுகு முறைகளோடு பயணிக்கும் நமக்கு, இறையருளால் கிடைத்த பொதுவாழ்வின் அங்கீகாரமாகவே இந்த விருதை கருதுகிறோம்.
https://m.facebook.com/story.php?story_fbid=2312103775556051&id=700424783390633
சொந்தங்களே…..
குளிர்காற்று வீசும் பிப்ரவரி மாதத்தில் நமக்கு இரண்டு வெற்றிகள் கிடைத்துள்ளன. ஒன்று விருது! மற்றொன்று வாழ்வுரிமை மாநாடு!
நமது கட்சியின் ஐந்தாம் ஆண்டு மாநாட்டை கட்சியின் நிர்வாகிகளுக்கான “தன்னெழுச்சி மாநாடு” என திருச்சியில் நடத்துவதாக திட்டமிட்டுருத்தோம்.
ஆனால் மத்திய அரசு குடியுரிமை கறுப்பு சட்டங்களை நாட்டில் அறிமுகம் செய்ததால், நாடே கொந்தளித்துப் போயிருக்கும் நிலையில், அதனை ரத்து செய்து, குடியுரிமை காக்கும் வகையில், கோவை மாநகரில், தமிழகம் தழுவிய அளவில் “வாழ்வுரிமை மாநாடு” ஒன்றை நடத்துவது என்று தலைமை நிர்வாகக் குழுவில் முடிவு செய்து அதன்படி அறிவித்தோம்.
ஆனாலும் மாநாட்டு பணிகளில் முழு ஈடு காட்ட முடியாத அளவுக்கு, குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட களங்களில், நானும் தலைமை நிர்வாகிகளும் ஒய்வின்றி பயணித்தோம்.
பிறகு பொருளாளர் ஹாருண் ரசீது தலைமையில் அவைத்தலைவர் நாசர் உமரி, இணைப் பொதுசெயலாளர் J.S.ரிபாயி, துணை பொதுச்செயலாளர்கள் செய்யது முஹம்மது பாரூக், கோவை சுல்தான் அமீர் ஆகியோர் அடங்கிய மாநாட்டுக் குழு பிப்ரவரி 15 முதல் கோவையில் முகாமிட்டு பணிகளை தொடங்கியது.
நானும், தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், துணைப் பொதுச்செயலாளர் தைமிய்யா ஆகியோர் நன்கொடை சேகரிப்பில் கவனம் செலுத்தினோம்.
மற்ற தலைமை நிர்வாகிகள் ஆங்காங்கே முகாமிட்டு மக்களை திரட்டும் பணிகளில் முழு வீச்சில் இறங்கினார்கள்.
போதிய விளம்பரங்கள் இல்லை.
ஆயினும் நமது சொந்தங்கள் ஓவ்வொருவரும் விளம்பர பலகைகளாக மாறிப் போனார்கள். அந்த அளவுக்கு களத்தில் உழைத்தார்கள்.
அன்று பல அமைப்புகள் போராட்டம், மாநாடு என்று வேறு அறிவித்திருந்தார்கள். ஆங்காங்கே காத்திருப்பு போராட்ட களங்கள் வேறு உருவாகியிருந்தது.
ஆயினும் நமது உழைப்பு வீண்போகவில்லை.
பிப்ரவரி 29 அன்று மதியம் 3 மணியளவில் காந்தி திடல் என நாம் பெயர் சூட்டி மகிழ்ந்த, செம்மொழி மாநாடு நடைப்பெற்ற, அந்த பிரம்மாண்ட கொடிசியா திடல் நோக்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் புறப்பட்ட பேருந்துகள், கார்கள், வேன்கள் ஆகியவற்றில் மக்கள் அலை அலையாக திரண்டு வந்து கோவையை திணறடித்தினர்..
மேலும் மாநகர மக்களை நமது தொழிற் சங்கமான MJTS சார்பில், நூற்றுக்கணக்கான “புதிய பாதை” மீட்டர் ஆட்டோக்கள் மூலம் திரட்டி வரப்பட்டார்கள்.
அதே அளவில் வேன்களிலும் உள்ளுர் மக்கள் குவிந்தனர்.
கோவை நகருக்கு வெளியே அமைந்துள்ள, அந்த திடலை, மனிதநேய ஜனநாயக கட்சியின் அழைப்பை ஏற்று வருகை தந்த சொந்தங்கள், 6 மணிக்கெல்லாம் நிரப்பிவிட்டார்கள்.
திட்டமிட்ட ஆற்றல் மிகு உழைப்பின் மூலம் நிகழ்ந்த அரிய சாதனை இது!
திடல் குழு, மேடை குழு, வரவேற்பு குழு, பரப்புரை குழு என கோவையின் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் அனைவரும் திறம்பட செயல்பட்டு அனைவரையும் பாராட்டும்படி செய்து விட்டனர். அது அவர்களுக்கே உள்ள சிறப்பு!
நாடறிந்த பெரும் தலைவர்களை அழைக்காமல், தமிழக அரசியல் ஆளுமைகள் இல்லாமல் நடைப்பெற்ற இம்மாநாட்டில் டெல்லி, உத்தரபிரதேசம், மே.வங்கம், கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து வந்த போராட்ட ஆளுமைகள், மாணவர் தலைவர்கள் மேடையை அலங்கரித்தனர்.
அடக்கமும், கொள்கையும் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் D.ராஜா அவர்களை மட்டுமே தேசிய அரசியல் ஆளுமையாக அழைத்திருந்தோம். அவர் நமது தமிழ் இன உறவு என்பது ஒரு கூடுதல் பாசமாகும்.
பாதிரியார் ஜெகத் கஸ்பர், தோழர் கு.ராமகிருஷ்ணன் போன்ற சிந்தனையாளர்கள் உரைவீச்சுகளை பாய்ச்சினர்.
மாநாட்டு மேடையில் “தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாப்போம்.” என நாம் வைத்திருந்த முழக்கத்திற்கேற்ப, தலைவர்கள் யாவரும் எழுந்து நின்று கைக்கோர்த்து நின்றபோது, மக்கள் எழுப்பிய ஆதாவாரம் அவர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதாக அமைந்தது.
மாநாட்டில் தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, என பல மொழிகளில் தலைவர்கள் ஆற்றிய உரைகள் மாநாட்டை தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியது எனலாம்.
அதுபோல் புரட்சிகர முழக்கங்கள் எழுப்பபட்ட போதெல்லாம் கூட்டம் எழுந்து நின்று ஒரே அலைவரிசையில் எதிரொலித்தது ஒரு புதிய அனுபவாகும்.
டெல்லியில் கலவரத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மரியாதை செய்யும் வண்ணம் எல்லோரும் எழுந்து ஒரு நிமிடம் ”செல்போன் விளக்குகளை” ஒளிரச் செய்த நிகழ்வு எல்லோர் உள்ளங்களையும் உருக்கியது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து வருகை தந்த சதிஷ் யாதவ், அலிகார் பல்கலைக் கழகத்திலிருந்து வருகை தந்த ஹீசைன்பா அமீர் ராஷாதி, கெளதம் ஆகிய மாணவர் தலைவர்கள் மாநாட்டின் எழுச்சியை சிலாகித்தனர்.
குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக, தென்னிந்தாவில் நடைப்பெற்ற மிகப்பெரிய மாநாடு இதுதான் என பிரபல குளிஸ்தான் உருது பத்திரிக்கையின் ஆசிரியர் முக்தார் அஹது பாராட்டினார். திப்பு சுல்தானின் கொள்ளுப் பேரனான வழக்கறிஞர் பக்தியார் அலி ஷா அவர்கள் இது மாபெரும் மக்கள் சக்தி என வியந்தார்.
இறையருளால் மாநாடு எல்லா வகையிலும் எழுச்சியாக நடைப்பெற்று குடியுரிமை எதிர்ப்பு போராட்ட களத்தை கூர் தீட்டியுள்ளது.
வரவேற்பு வளைவுகளுக்கு தியாகிகளின் பெயர் சூட்டல், பல்வேறு சமூக, அரசியல் தலைவர்களின் பொன்மொழிகள், மேடைக்கு டெல்லி குடியுரிமை எதிர்ப்பு போரில், குளிரால் உயிர் துறந்த தியாக குழந்தை ஜகனாராவின் பெயர் என மாநாட்டு திடல் பன்மைத் தன்மை கொண்டதாக இருந்ததை எல்லோரும் பாராட்டினர்.
சொந்தங்களே……
இனி நாம் மிகுந்த பொறுப்புணர்வோடு செயலாற்ற வேண்டும். நமது நிதானம், பன்முகத்தன்மை, அரவணைக்கும் பண்பு, நல்லிணக்க அரசியல், துணிச்சலான முடிவுகள் ஆகியவற்றுக்கு மக்கள் தந்த அங்கீகாரம் தான் இந்த மாநாட்டின் வெற்றி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அவர்கள் அளித்த நன்கொடைகளில் தான் இந்த செலவுகளை ஈடுகட்டியிருக்கிறோம் என்பதையும் மறந்து விடக் கூடாது.
கடந்த டிசம்பர் 12 முதல் பிப்ரவரி 27 வரை 75 நாட்கள் தொடர்ச்சியாக தமிழகமெங்கும் 20,000 கிலோ மீட்டர் தாண்டி நான் குடியுரிமை எதிர்ப்பு போராட்ட களத்தில் பயணித்தேன். நமது தலைவர்களும் அதுபோல் அவரவர் சக்திகேற்ப பயணித்தார்கள்.
அது எதுவும் வீணாகவில்லை என்பதை இந்த மாநாட்டுக்கு கூடிய மக்கள் திரள் மூலம் உணர்கிறோம். மக்கள் நம்மை அங்கீகரித்திருக்கிறார்கள். ஜமாத்துகள் மதிக்கிறார்கள். தமிழ் இன உறவுகள் நேசிக்கிறார்கள்.
எனவே இந்த ஆதரவை, எழுச்சியை, நல் எண்ணத்தை பொறுப்புணர்வோடு தக்க வைக்க வேண்டும்.
இதற்காக உழைத்த உங்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது அழைப்பை ஏற்று அலை அலையாய் ஒன்று திரண்டு வந்த பொது மக்கள், ஜமாத்தினர், மார்க்க அறிஞர்கள், சகோதர அமைப்பினர், தமிழ் உறவுகள், தன்னெச்சியாக திரண்டு வந்த ஆர்வலர்கள் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து, மத்திய மாநில அரசுகள் பணியும் வரை தொடர்ந்து போராடுவோம் என்ற அறைகூவலையும் இக்கடிதம் வாயிலாக விடுக்கிறோம். நன்றி
அன்புடன்:
மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர், மஜக,
04-03-2020.