தஞ்சை.பிப்.9.,
தஞ்சாவூரில் மத்திய அரசின் குடியுரிமை தொடர்பான கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கூட்டியக்கம் சார்பில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் ரமணி, தமுஎச அமைப்பை சேர்ந்த சுந்தரவள்ளி, அய்யாவழி தர்மயுக வழிப்பேரவை நிறுவனர் பாலமுருகன் சுவாமிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது…
நாம் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடி வருகிறோம். சமூக நீதியை, சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க குரல் கொடுக்கிறோம்.
இதை புரிந்துக் கொண்டு இப்போது எல்லா மக்களும் களத்தில் இணைய தொடங்கி விட்டார்கள்.
இது மாபெரும் மக்கள் எழுச்சியாக மாறி விட்டது..
இப்போராட்டம் உடனடியாக முடிவது போல தெரியவில்லை. மத்திய அரசு பிடிவாதம் காட்டுகிறது.
எனவே நீண்ட நெடிய போராட்டத்திற்கு தயாராக வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
நமது நேரம், பொருளாதாரம், உழைப்பு அனைத்திலும் பெரும்பகுதியை செலவிட வேண்டியது தவிர்க்க முடியாதது.
நம் நாட்டின் விடுதலை போராட்டம் ஒரிரு வருடங்களில் முடியவில்லை. அது நூற்றாண்டை தாண்டி நடைப்பெற்றது. அது போல இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம். பாஸிஸ்ட்டுகளிடமிருந்து நாட்டை மீட்கும் அறப்போராட்டம்.
நம் முன்னாள் இரண்டு தான் உள்ளது.
அநீதிகளையும், உரிமைப் பறிப்புகளையும் சகித்துக் கொண்டு சாவது. அல்லது உயிரை விட உரிமை முக்கியம் என கருதி போராடுவது.
நாம் இரண்டாவதேயே தேர்வு செய்கிறோம்.
இன்று காலை நாகூர் ரயில் நிலையத்தில் இறங்கியப் போது, அங்கு வெளியூரிலிருந்து வந்திறங்கிய ஒரு அம்மா, என்னை அடையாளம் கண்டுக்கொண்டு பேசினார்.
அப்போது கலங்கிய குரலில் “எப்படியாவது குடியுரிமை சட்டங்களை ஒன்னுமில்லாமல் ஆக்குங்க பாய்… எனக்கு இரண்டு பெண் பிள்ளைங்க இருக்கு. நான் அவங்கள கூட்டிக்கிட்டு எங்கே போவேன்” என்று தழுதழுத்தார்.
நான் அதைக் கேட்டு பதறிவிட்டேன்.
அப்போது என் அருகில் சகோதர்கள் முரளி மற்றும் அஜீஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
அந்த அம்மாவின் கவலை நாட்டு மக்களின் மன நிலையை எதிரொலிக்கிறது.
பெரும்பான்மையான மக்களிடம் அச்சம் மற்றும் பீதி நிலவுகிறது.
யாருக்கும் நிம்மதி இல்லை. ஒழுங்கான உணவு இல்லை. உறக்கம் இல்லை.
எங்கும் வாழ்வுரிமை பற்றிய கவலை நிலவுகிறது.
எனவே, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் தலைமையில் பக்குவமாக தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
யாரையும் காயப்படுத்தாமல், துவேசங்களை தூண்டாமல், கோரிக்கைகளை மட்டுமே முன்னிறுத்தி இதற்கான ஆதரவை திரட்ட வேண்டும்.
உணர்ச்சி வசப்படக் கூடாது. யாரையும் இழந்து விடாமல், அமைதி வழியில் எல்லோரையும் இணைத்து போராட வேண்டும். இதுவே அறிவுப் பூர்வமான முன்னெடுப்பாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்று ஆர்ப்பரித்தனர்.
இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) மாநிலச் செயலாளர் யூசுப் ராஜா, மஜக கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் காதர் பாட்ஷா, தஞ்சை மாநகர செயலாளர் அஹ்மது கபீர், பொருளாளர் ஜப்பார், மாவட்ட துணைச் செயலாளர் மெய்தீன், மாநகர செயலாளர் அப்துல்லா, ஐக்கிய ஜமாத் தலைவர் அப்பாஸ் உள்ளிட்டோரும், திரளான மஜகவினரும், பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சைமாநகர்மாவட்டம்
08-02-2020