காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 ஆம் நாளை வருடந்தோறும் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக மாணவர் இந்தியா சார்பில் கடைப்பிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி-30 அன்று நடைப்பெற்ற பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கில் மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தோழர் தியாகு, பேராசிரியை சுந்தரவள்ளி ஆகியோர் உரையாற்றினர்.
இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…
நான் நாகப்பட்டினத்தில் இரவு ரயில் ஏறியதும் இயக்குனர் புகழேந்தி எழுதிய “காந்தி 1%” என்ற நூலை படித்து விட்டு காலை 3 மணிக்கு தான் உறங்கினேன்..
நமது தலைமுறைக்கு சற்று முன்பு ஒரு மனிதர் இப்படி வாழ்ந்து சென்றிருக்கிறார்.
இந்திய விடுதலைக்காக போராடிய அவர், நாடு சுதந்திரம் அடையும் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை. பார்வையாளராக கூட இல்லை. தான் போராடிய நாடு இரண்டாக பிளவுபட்டு பிறப்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அப்போது நடந்த மதக்கலவரங்கள் அவரை வாட்டியது. எல்லைகளில் எங்கும் பிணக் குவியல்கள்.
டெல்லியிலிருந்து லாகூருக்கு புறப்பட்ட ரயிலிலும், கராச்சியிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட ரயிலிலும் மனிதர்கள் புறப்பட்டார்கள். எல்லை தாண்டும்போது அவர்களில் அதிகமானோர் பிணமாயினர்.
ஒரு சிறுமி காந்திஜியை பார்த்து கேட்டார். நீங்கள் பெற்றுத்தந்தது சுதந்திரமா? பேரழிவா? என்றார். பாவம் காந்தி. பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்.
சுதந்திர கொண்டாட்டங்களில் பங்கேற்காமல், நவகாளியில் இந்துக்களையும், கொல்கத்தாவில் முஸ்லிம்களையும், மத வெறியர்களிடமிருந்து காப்பாற்ற ஓடினார்.
அவர் போய் அங்கு உண்ணாவிரதம் தொடங்கியபிறகு அமைதி திரும்பியது.
பிஹாரிலும் அமைதி திரும்பியது.
அவர் சகோதரத்துவத்தை, மதநல்லிணக்கத்தை, அமைதியை விரும்பினார்.
அவர் மிகச்சிறந்த இந்து சமுதாய தொண்டர். மிகச்சிறந்த ராமபக்தர். ராமராஜ்யம் அமைவதை விரும்பினார்.
அதே ராமராஜ்யம் குறித்து பேசிய கோட்சேதான் அவரை சுட்டுக் கொன்றார்.
ஒருவர் மதவெறியை எதிர்த்தார் இன்னொருவர் மதவெறியை பின்பற்றினார். இதுதான் வித்தியாசம்.
அவர் கொல்லப்பட்டதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று RSS-ம், இந்து மகாசபையும் கூறின. அன்றைய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் அவர்கள் RSS-க்கு இது குறித்து எழுதிய கடிதங்கள் ஆவணங்களாக உள்ளன.
காந்தியை சுடுவதற்கு முன்பு கோட்சே தன்னை முஸ்லிம் போல சுன்னத் செய்து கொண்டார். கையில் இஸ்மாயில் என பச்சை குத்திக்கொண்டார். ஏனெனில் காந்தியை சுட்டதும், எப்படியும் தன்னை பிடித்து விடுவார்கள் அல்லது கொன்று விடுவார்கள் என நம்பினார்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள். அந்தப்பழி முஸ்லிம்கள் மீது விழட்டும் என்பதே அந்த நச்சுத்திட்டமாகும்.
அதன்படியே செய்தி பரவுகிறது. சம்பவம் நடந்ததும் மவுண்ட் பேட்டன் பிரபு, ஓடி வந்தார். அங்கு ஒருவர் காந்தியை ஒரு முஸ்லிம்தான் சுட்டார் என்றதும், “அட முட்டாளே… காந்தியை சுட்டது மாராட்டியத்தை சேர்ந்த கோட்சே எனும் பிராமணர்” என கோபத்தில் மவுண்ட் பேட்டன் பிரபு, கத்தினார்.
நேருவும், தந்தை பெரியாரும், வானொலியில் இந்த உண்மையை கூறிய பிறகுதான் மக்கள் வதந்திகளை நிராகரித்தனர்.
இல்லையெனில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரமே நடந்திருக்கும்.
காந்திஜியின் படுகொலை நிகழ்வால் நாடே துடித்தது. RSS இயக்கம் தடை செய்யப்பட்டது.
https://m.facebook.com/story.php?story_fbid=2249251718507924&id=700424783390633
இந்தியாவின் விளக்கு அணைந்துவிட்டது என நேருஜி கலங்கினார். இதை தன்னால் தாங்க முடியவில்லை என வல்லபாய் பட்டேல் துடித்தார். இது ஒரு பேடித்தனம் என வர்ணித்த ஜின்னா அவர்கள், இது இந்தியாவிற்கு பேரிழப்பு என்று கூறினார்.
சில விஷயங்களில் காந்தியோடு முரண்பாடு கொண்ட பெரியார், இந்த செய்தி கேட்டு திகைத்தார். இது உண்மையா? எனக் கேட்டு பதறினார். மதவெறிக்கு காந்தியார் பலியாகி விட்டார் என துடித்தார்.. இந்த நாட்டிற்கு காந்தி நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்றார்.
காந்தியின் படுகொலையை கடுமையாக கண்டித்த பேரறிஞர் அண்ணா அவர்கள் “சுட்டவனின் பிணத்தை நாய் நரி தீண்டாது. காக்கா கழுகு கூட அன்டாது” என கோட்சேவை தாக்கி எழுதினார்.
காந்தி இந்த நாட்டின் நலனுக்காகவே உயிர்துறந்தார். இன்று சிலர் அவர் கொலையை நியாயப்படுத்துகிறார்கள். கோட்சேவின் குடும்பத்தினர் தேர்தலில் போட்டியிட சீட்டு கொடுக்கிறார்கள்.
அவரின் படத்தை வரைந்து கோபம் தீர சுட்டு மகிழ்கிறார்கள். அவர் இறந்த பின்பும் அவர்களது வெறி அடங்கவில்லை. அவரது கல்லறையை சேதப்படுத்துகிறார்கள்.
அன்று காந்தியை சுட்ட கோட்சேவின் துப்பாக்கிகள், இன்று (ஜனவரி 30) ஜாமியா மில்லியா மாணவர்களுக்கு எதிராக ஒலித்திருக்கிறது.
இந்த பயங்கரவாதிகளின் துப்பாக்கி சத்தத்தை ஒழித்தால்தான் நாடு அமைதியாக இருக்கும்.
நாம் காந்தியாரை பற்றி நிறைய படிக்க வேண்டும். அதன் வழியாக சமூக செயல்பாட்டாளர்களாக மாற வேண்டும். அவர் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க நாம் பாடுபடவேண்டும். அவர் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளில், இதுவே அவருக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்..
கருத்தரங்கில் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிரான முழக்கங்கள் முன்னெடுக்கப்பட்டன. குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு விருது அளித்து ஊக்கம் கொடுக்கப்பட்டது.
காசுமீரம் யாருக்கு? என்ற நூலும், காந்தி 1% என்ற நூலும் அறிமுகப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
30-01-2020