வளைகுடா நாடுகளில் அமைதி தவழும் நாடான ஒமானில் கடந்த 49 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த மாமன்னர் சுல்தான் காபூஸ் பின் சைத் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
அவர் இந்தியாவின் புனேயில் கல்வி பயின்றவர்… இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மா அவர்களின் பாசத்திற்குரிய மாணவர்.
அதனால் தான் இந்தியாவின் நெருங்கிய நண்பராக திகழ்ந்தார்.
தமிழர்கள், மலையாளிகள், குஜராத்திகள் என இந்தியர்கள் ஓமானில் வேலை வாய்ப்பு பெறவும், தொழில் முனைவோர்களாக மாறவும் அவர் துணை நின்றார்.
தன் நாட்டை வளைகுடாவின் அமைதி புறாக்கள் தங்கும் மாளிகையாக கட்டமைத்ததோடு, அந்த பிராந்தியத்தில் போர்களின்போது தன் நாட்டின் சார்பில் உணவு மற்றும் மருந்துகளை வினியோகித்து மனிதாபிமானத்தை நிலை நாட்டினார்.
கிறித்தவர்கள் தேவாலயங்கள் கட்டிக் கொள்ளவும், தன் நாட்டில் பணிபுரியும் இந்துக்கள் உள்ளிட்டோர் கோயில் கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் கட்டிக் கொள்ளவும் உதவிய அவரது தாராள குணம் சிறப்புக்குரியது.
“Meet The people” என்ற திட்டத்தின் மூலம் தன் நாட்டு மக்களோடு இரண்டரக் கலந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்த்து வைத்தார்.
இன்று ஓமானியர்கள் அரசின் சலுகை பெறுபவர்கள் என்ற நிலை மாறி, அரசுப் பணிகளை செய்யும் ஆற்றல் மிக்கவர்களாக மாற இவரது நல்லாட்சியே காரணமாகும்.
புகழ் பெற்ற ஓமான் ஏர்லைன்ஸ் இவரது சாதனைகளில் ஒன்றாகும்.
முன்னேற்றத்தின் அனைத்து வசதிகளும்,அனைத்து உள்கட்டமைப்புகளும் நிறைந்த நாடாக ஓமானை மாற்றியதில் இவரது அர்ப்பணிப்பு முக்கியமானது..
இன்று அவர் காலமானார் என்ற செய்தி சோகத்தை தருகிறது.
ஓமானியர்கள் தங்களுக்காக உழைத்த தங்களில் ஒருவராக வாழ்ந்த தங்களின் மன்னரை இழந்து தவிக்கிறார்கள்.
அவர்களின் துயரத்தில் மனிதநேய
ஜனநாயக கட்சியும் பங்கேற்கிறது.
அவரது மறைவுக்கு தமிழர்களின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
11.01.2020