ஈழத்தமிழர்கள் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்? மு.தமிமுன் அன்சாரி MLA கேள்வி!

ஜன.04,

தஞ்சாவூரில் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் பேரா.காதர் மைதீன், தோழர் பெ.மணியரசன், பழனிமாணிக்கம் MP, முன்னாள் அமைச்சர் உபையதுல்லா, தோழர்.ஜீவகுமார், துரை.சந்திரசேகரன் MLA, நீலமேகம் MLA, தோழர். P செந்தில் குமார், தோழர்.சொக்கா.ரவி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பங்கேற்று பேசியதாவது:-

‘CAA சட்டத்தின் வழியாக யாருக்கும் குடியுரிமை கொடுக்க கூடாது என நாம் கூறவில்லை.

அண்டை நாடுகளிலிருந்து அகதிகளாக யார் வந்தாலும் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்கிறோம்.

இதில் ஈழத் தமிழர்களை புறக்கணித்தது என்ன நியாயம்? என்கிறோம்.
அவர்கள் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இங்கே இருக்கிறார்கள். அவர்களை நிராகரிக்கலாமா?

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் இந்துக்களையும், சீக்கியர்களையும் ஏற்கும் நீங்கள் ஈழத்தமிழர்களை வஞ்சிக்கலாமா? அவர்களையும் இதில் இணைத்து குடியுரிமை வழங்குங்கள் என்கிறோம்.

நேபாளத்திலும், பூடானிலும் மத ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகும் கிறிஸ்தவர்களையும், இந்திய – பாகிஸ்தான் எல்லையில் வசிக்கும், அதே போல இந்திய – பங்களாதேஷ் எல்லையில் வசிக்கும் இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் அகதிகளாக வந்தால் அதை ஏற்று குடியுரிமை வழங்குங்கள் என்கிறோம்.

இதை ஏற்க மாட்டோம் என்பதால் தான் CAA சட்டத்தை மக்கள் எதிர்க்கிறார்கள்.

இப்போது தேவையில்லாமல் NRC சட்டத்தை நாடு முழுக்க அமல்படுத்துவோம் என்றதால் தான் நாடு கொந்தளிக்கிறது.

இதில் பின் வாங்க மாட்டோம் என அமித் ஷா மிரட்டுகிறார். அவரால் இன்று டெல்லி வீதிகளில் நடமாட முடிகிறதா?

பயம் காரணமாக, வட இந்திய தொலைக்காட்சிகளிடம் போராட்ட செய்திகளை காட்ட வேண்டாம் என்கிறார்கள். சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் தடை படுமா? செய்திகளை இருட்டடிப்பு செய்து விட்டால் போராட்டம் நின்று விடுமா?

சொந்த காசை செலவு செய்து தன்னெழுச்சியாக மக்கள் போராடுகிறார்கள்.

போராடும் மக்களிடம் சமரசம் பேச முடியாது. அவர்கள் உரிமைக்காகவும், நீதிக்காகவும் போராடுகிறார்கள்.

உலக நாடுகள் இப்போராட்டங்களை உற்று கவனிக்கின்றன. ஜப்பான் பிரதமர் போன்று பல நாட்டு தலைவர்கள் இந்திய பயணத்தை ரத்து செய்து விட்டார்கள்.

சொந்த நாட்டு குடிமக்களின் மீதே இந்திய அரசு போர் தொடுத்திருக்கிறது என நியுயார்க் டைம்ஸ் தலையங்கம் எழுதியுள்ளது. இது மோடிக்கு தெரியுமா?

உலகம் முழுக்க இவர்களால் இந்தியாவின் பாரம்பரிய பெயரும், பெருமையும் கெட்டுக்கிடக்கிறது.

அதை சீர் செய்து நாட்டை பாசிஸ்டுகளிடமிருந்து காக்கவே நாம் சாதி, மத, அரசியல் வேறுபாடுகளை கடந்து போராடுகிறோம்.’

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் மஜக தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் அஹ்மது கபீர் உள்ளிட்டோர் தீர்மானம் வாசித்தனர்.

MJVS மாநில செயலாளர் அய்யம்பேட்டை யூசுப் ராஜா, கொள்கை விளக்க அணியின் மாநில துணைச் செயலாளர் காதர் பாஷா ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மஜக மாவட்ட துணைச் செயலாளர் மெய்தீன், நகரச் செயலாளர் அப்துல்லா ஆகியோர் போராட்ட குழுவுடன் சேர்ந்து மக்களை ஒழுங்குப் படுத்தி திறம்பட செயலாற்றினர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சைமாநகர்மாவட்டம்.

Top