சென்னை.நவ.28.., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் இன்று (28.11.2019) பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில், சென்னையில் நடைப்பெற்றது.
இதில் பொருளாளர் ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், இணைப் பொதுச் செயலாளர் JS.ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர்கள் மன்னை.செல்லச்சாமி, மதுக்கூர்.ராவுத்தர்ஷா, மண்டலம்.ஜெய்னுலாபுதீன், தைமிய்யா, மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜ்தீன், ராசுதீன் ஆகியோரும் பங்கேற்றனர்.
அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு.
தீர்மானம் 1:
கடந்த நவம்பர்-9 அன்று பாபர் மஸ்ஜித் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பது சட்டத்தின் அடிப்படையில் அமையாமல் நம்பிக்கைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பது பெருத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது. இனிவரும் பல வழக்குகளின் தீர்ப்புகளுக்கு இது தவறான முன்னோட்டமாக அமைந்து விட்டதே என்ற கவலையை இந்நிர்வாகக் குழு விரிவாக ஆய்வு செய்தது.
ஜனநாயகம், அரசியல் சாசனசட்டம், மதச்சார்பின்மை ஆகியவற்றின் கோட்பாடுகளுக்கு இத்தீர்ப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை பல கோணத்திலும்
இந்நிர்வாகக் குழு விவாதித்து ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்துகிறது.
https://m.facebook.com/story.php?story_fbid=2120599028039861&id=700424783390633
தீர்மானம்:2
கடந்த 1993 முதல் பாபர் மஸ்ஜித் வழக்கிற்காக நீதி கேட்டுப் போராடியவர்கள் இத்தீர்ப்பை கண்டு பதறிப் போய் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். அவர்கள் யாரும் இதனால் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை என இந்நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது.
ஏனெனில் சோதனைமிக்க இத்தருணத்தில், மதசார்பற்ற ஜனநாயக சக்திகளும், முற்போக்கு தலைவர்களும், பெரும்பான்மையான இந்து சமுதாய உறவுகளும், முஸ்லிம்களோடு ஆறுதலையும், ஆழமான நட்பையும், நேசத்தையும் வெளிப்படுத்தியதை இந்நிர்வாகக்குழு புரிந்துக் கொண்டு, அதனை கவனத்துடன் அனைவருக்கும் சுட்டிக்காட்டுகிறது.
தீர்மானம்:3
பாபர் மஸ்ஜித் தொடர்பான வழக்கில், தீர்ப்புக்கு பிந்தைய சூழலை இந்நிர்வாகக்குழு மிக கவனமாக ஆய்வு கண்ணோட்டத்துடன் அணுகுகிறது.
அதன்படி பாபர் மஸ்ஜித் தொடர்பான விவகாரங்களில் உத்தரபிரதேசம் மற்றும் அங்குள்ள அயோத்தியில் வாழும் முஸ்லிம்களின் நடவடிக்கைகள் மற்றும் எண்ணங்களின் வழியே இப்பிரச்சனையை அணுகுவது என்றும், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நடவடிக்கைகளையும் கவனத்தில் கொள்வது என்றும், அவர்களின் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பது என்றும் இந்நிர்வாகக் குழு முடிவு செய்கிறது.
தீர்மானம்:4
இந்திய நாட்டின் மதச்சார்பின்மை, நல்லிணக்கம்,
சமூக நீதி, ஜனநாயகம் உள்ளிட்ட உயரிய தத்துவங்களை பாதுகாக்க அறவழியில் தொடர்ந்து போராடுவது என்றும், சமகால அரசியல் சூழல் மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் சூழ்ச்சிகள் ஆகியவற்றை புதிய உத்திகளுடன் எதிர்கொள்ள ஜனநாயக வழியிலான செயல் திட்டங்களை வகுப்பது என்றும் இந்நிர்வாகக்குழு முடிவு செய்கிறது.
தீர்மானம்:5
சென்னை IIT-யில் பயின்ற கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்ததாக ஒரு புறமும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மறுபுறமும் சந்தேகங்கள் கிளம்பியுள்ளதை இந்நிர்வாகக்குழு விரிவாக விவாதித்தது.
இந்நிகழ்வு கடும் கண்டனத்துக்குரியது என்றும் இதில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை நீதிக்காக குரல் கொடுப்பது என்றும் இதுபோன்ற மரணங்கள் இனி அங்கு நிகழாத வண்ணம் உரிய நடவடிக்கைகள் அரசு தரப்பில் எடுக்கப்பட உரிய ஜனநாயக வழியிலான அழுத்தங்களை கொடுப்பது என்றும் இந்நிர்வாகக் குழு முடிவு செய்கிறது.
தீர்மானம்:6
எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் எத்தகைய அணுகு முறைகளை மேற்கொள்வது என்பது குறித்து தேர்தல் தேதி அறிவித்ததும் உரிய முடிவுகளை தலைமை நிர்வாகக்குழு எடுப்பது என்றும், அதற்கு முன்பாக அதற்கான ஆயத்தப் பணிகளை செய்வது என்றும், அதற்காக துணைப் பொதுச்செயலாளர் தைமிய்யா தலைமையில் ஒரு தேர்தல் குழு அமைப்பது என்றும், அதில் துணை பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா மாநிலச் செயலாளர் ராசுதீன் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம்:7
சென்ற நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையில் டிசம்பர்-21 அன்று குற்றாலத்தில் அரசியல் பயிலரங்கம் நடத்துவது என்று உறுதி செய்யப்படுகிறது. ஒரு வேளை உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அதை வேறு தேதிக்கு ஒத்தி வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம்:8
மஜக-வின்
5-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி மார்ச்-1 அன்று திருச்சி உழவர் சந்தையில் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் பங்கேற்கும் தன்னெழுச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதற்காக 5 பேர் கொண்ட கீழ்கண்ட மாநாட்டுக்குழு அமைக்கப்படுகிறது.
மாநாட்டு குழு தலைவர்:
S.S.ஹாரூன் ரஷீத் (பொருளாளர்)
மாநாட்டுக் குழு துணைத்தலைவர்:
J.S.ரிபாயி(இணைப் பொதுச் செயலாளர்)
மாநாட்டுக்குழு உறுப்பினர்கள்:
1. மதுக்கூர் ராவுத்தர் ஷா(துணைப் பொதுச்செயலாளர்)
2. நாச்சிக்குளம் தாஜுதீன் (மாநிலச் செயலாளர்)
3. ராசுதீன் (மாநிலச் செயலாளர்)
மேற்கண்ட தீர்மானங்களுடன் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் நிறைவுற்றது.
தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
28-11-2019