நவ.25,
திருச்சி – தென்னூர் வட்டார ஜமாத்துல் உலமாவும், ஜெனரல் பஜார் மற்றும் பென்ஷனர் தெரு மஸ்ஜித் நிர்வாகமும் இணைந்து நடத்திய மீலாது சமூக நல்லிணக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜமாத்துல் உலமா சபை திருச்சி மண்டல பொறுப்பாளர் மௌலானா முஹம்மது மீரான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை கோடம்பாக்கம் ரஹ்மானியா மஸ்ஜித் தலைமை இமாம் சதக்கத்துல்லா பாக்கவி கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
திருச்சி மாநகரில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகளின் முத்தவல்லிகளும், உலமாக்களும், ஜமாத்துகளும் திரண்டிருந்த அந்த நிகழ்வில், அவர் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு:-
இந்த சமூக நல்லிணக்க விழாவை இனி திறந்த வெளியில் நடத்திட நீங்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேடையில் பேசுபவர்களிலும், பார்வையாளர்களிலும் சரி பாதியாக சகோதர சமூகங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்குமாறு திட்டமிட்டால், அது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.
அடுத்த வருடம் இது போன்ற ஒன்று கூடலை எல்லோரும் சேர்ந்து உழவர் சந்தை திடலில் நடத்திட வேண்டும் என என் ஆவலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மீலாது விழா என்பது குறித்த விவாதத்திற்குள் நாங்கள் செல்வதில்லை. அது இந்தியா போன்ற பன்மை கலாச்சார தேசங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்புகளை எல்லோரிடமும் கொண்டு செல்ல இதுவும் ஒரு களம் என்று கருதுகிறோம்.
அதனால்தான் இதனை மீலாது சமூக நீதி விழா, மீலாது சமூக நல்லிணக்க பெருவிழா,சீரத்துன் நபி விழா என்ற பெயர்களில், எல்லா சமூக மக்களும் பங்கேற்கும் வகையில் திட்டமிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறோம்.
ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதர்கள் அனைவருக்குமானவர்.
அதனால்தான் “உஸ்வத்துல் ஹஸனா” என்று, அதாவது அனைவருக்குமான அழகிய முன்மாதிரி என கொண்டாடப்படுகிறார்கள்.
அவர்கள் மானிடர் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளுக்கும் அன்றே தீர்வு கூறியிருக்கிறார்கள்.
அவர்களது ஆளுமை மகத்தானது. தனது உருவத்தை அடையாளப்படுத்த சொல்லவில்லை. தனக்கு பிறந்த நாள் கொண்டாடுங்கள் என்று உத்தரவிடவில்லை. தன்னை முன்னிலைப்படுத்தியதில்லை.
ஒரு ஜீஸஸ் இப்படித்தான் இருப்பார், ஒரு புத்தர் இப்படித்தான் இருப்பார் என்பதை அவர்களை பின்பற்றுபவர்கள் காட்டும் உருவ அமைப்புகள் மூலம் அறிகிறோம். ஆனால் நபிகள் எப்படி இருப்பார் என்பதையே அறியாமல், அறிய விருப்பமில்லாமல் 14 நூற்றாண்டுகளுக்கும் மேலாக அவரது கொள்கைகளைப் பெருங்கூட்டம் உலகமெங்கும் பின்பற்றி வருகிறது.
இதுதான் அவரது ஆளுமைக்கான சான்றாகும்.
ஒரு சிரித்து மகிழும் புத்தரை அல்லது ஒரு இயேசுவை (ஈசா – அலை) நூல்களில் காண முடியாது அவர்களின் வரலாற்றில் அவ்வாறு எங்கும் பதிவு செய்யப்பட வில்லை.
ஆனால், தன் நண்பர்களோடு சிரித்து மகிழும் நபியை, மனைவியின் மீது அன்பு பொழியும் நபியை, தன் மகன் இறப்புக்கு கலங்கும் நபியை, நம்மால் அறிய முடிகிறது. நம்மில் ஒருவராக உணர முடிகிறது.
சிறந்த குடும்ப தலைவராக, நல்ல நண்பராக, பேரன்களை மார்பில் போட்டு விளையாடும் பாட்டனாராக, நேர்மையான வணிகராக, தலைமறைவு போராளியாக, படை தலைவராக, ஆட்சியாளராக, இப்படி பல பன்முக ஆளுமைகளை கொண்டவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரலாற்றில் திகழ்கிறார்கள். அதுதான் அவர்களின் சிறப்பாகும்.
அவர்கள் தன் வாழ்நாளில் மிகச் சிறந்த சீர்த்திருத்தவாதியாக செயல்பட்டிருக்கிறார்கள்.
இன்று எல்லோருக்கும் கல்வி வேண்டும் என்று பேசுகிறார்கள். சிலர் யாருமே படிக்க கூடாது என நினைக்கிறார்கள்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளுக்கும் கல்வியை கொடுக்க வேண்டும் என நினைத்தார்கள். பத்ரு போர் நடந்தப் போது, எதிர் தரப்பினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை என்ன செய்வது? என கேள்வியெழுந்தப் போது; அவர்களை பார்த்து; உங்களில் கல்வி அறிவு உள்ளவர்கள், கல்லாதவர்களுக்கு கல்வியை கற்று கொடுங்கள் அப்போது கற்றுக் கொடுத்தவர்களுக்கும் விடுதலை. கற்றுக் கொண்டவர்களுக்கும் விடுதலை என்றார்கள்.
கைதிகளும், அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் கல்வி பெற வேண்டும் என எண்ணிய சீர்த்திருத்தவாதிதான் நபிகள் நாயகம் அவர்கள்.
பொருள்களின் பதுக்கலை கூடாது என்றார்கள். அது விலைவாசி ஏற்றத்திற்கு வழி வகுக்கும் என்றார்கள்.
ஒரு பொருளை ஒருவர் விலை பேசிக் கொண்டிருக்கும் போது, இன்னொருவர் குறுக்கிட்டு விலை பேசாதீர்கள் என்றார்கள். பேரத்தை ஏற்றி விடுவதை அவர்கள் அனுமதிக்க வில்லை.
குளத்தில் இருக்கும் மீன்களை யூகத்தில் விலை வைத்து குத்தகை எடுக்காதீர்கள் என்றும், காய்ப்பதற்கு முன்பே ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுக்காதீர்கள் என்றும் கூறினார்கள்.
மீனை பிடித்து விலையை தீர்மானிக்கவும், காய்த்த பிறகு அந்த விளைச்சலுக்கு விலையை தீர்மானிக்கவும் அறிவுறுத்தினார்கள்.
அதாவது யூக பேர வணிகத்தை தடை செய்தார்கள்.
வணிகத்தின்போது தராசுவின் நிறுவை அளவுகளில் நீதமாக நடக்க சொன்னார்கள்.
அவர்களின் பொருளாதார அளவுகோல்கள், விதிகள் ஆச்சர்யமளிக்க கூடியவை.
தரிசு நிலத்தை யார், சீர் செய்து உழவு செய்கிறார்களோ அவர்களுக்கே நிலம் சொந்தம் என்றார்கள். மூன்றாண்டுகள் யார் நிலத்தை உழாமல் வைத்திருந்தாலும் அதை எடுத்து விவசாயம் செய்ய சொன்னார்கள்.
அதாவது உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்றார்கள்.
இன்று தண்ணீருக்கான சண்டைகள் நடைபெறுவதை பார்க்கிறோம்.
தண்ணீரின் பயன்பாடுகள் குறித்தும் போதித்தார்கள்.
தேங்கி நிற்கும் குளம் குட்டைகளில் சிறுநீர் கழிக்காதீர்கள், அசுத்தம் செய்யாதீர்கள் என்று சொன்னார்கள். சுற்றுச்சூழல் குறித்த அவர்களின் அக்கறை இது.
நதிக்கரையில் நின்று ஒளூ (உடல் தூய்மை) செய்தாலும், தண்ணீரை வீணடிக்காதீர்கள் என்ற தோடு நில்லாமல், அணைக்கட்டு பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை கூறினார்கள்.
அதாவது, நதி எங்கு உற்பத்தி ஆகிறதோ, அப்பகுதிகளில் நடைபெறும் வேளாண்மைக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்றார்கள்.
அதே நேரம் உபரி நீரை தடுக்க கூடாது என்றும் கூறினார்கள்.
உலகமெங்கும் நடக்கும் நதி நீர் பிரச்சனைகளுக்கு இதுதானே தீர்வாக இருக்க முடியும்.
அவர்கள் உழைப்பாளிகளை கனிவுடன் அணுகினார்கள்.
உழைப்பாளியின் வியர்வை உலர்வதற்குள் அவர்களது ஊதியத்தை கொடுத்து விடுங்கள் என்ற அவரின் அறிவுரை மனிதநேயத்தை வெளிக்காட்டுகிறது.
தீண்டாமையை தனது வாழ்நாளிலேயே வேரறுத்தார்கள்.
மதீனா நகரில் மஸ்ஜிதுன் நபவி என்னும் புதிய பள்ளியை கட்டியதும், அதில் முதன் முதலாக, தொழுகைக்கான அழைப்பான பாங்கை ஒலிக்க செய்ய ஒடுக்கப்பட்ட ஆப்பிரிக்க அடிமையான பிலால் (ரலி) அவர்களை தான் அழைத்தார்கள்.
அதுதான் சமூக நீதிக்கான அழைப்பு. அந்த ஆப்பிரிக்க கறுப்பின அடிமை எழுப்பிய அழைப்பு முழக்கம் தான் இன்று வரை உலகெங்கும் பின்பற்றப்படுகிறது.
எல்லா துறைகளிலும் நீதியை நிலை நாட்டுவது அவரது வாழ்வியல் கொள்கையாக இருந்தது.
எல்லோருக்கும் நீதி செலுத்துவதில் அக்கறை காட்டினார்கள்.
நீதிபதிகளுக்கும் கூட இலக்கணங்களை வகுத்தார்கள். (சிரிப்பு) நீங்கள் எதை நினைத்து சிரிக்கிறீர்கள் என தெரிகிறது. இப்போதெல்லாம் தீர்ப்பு வேறு, நீதி வேறு என்றாகி விட்டதல்லவா?
அதாவது, கோபமாக இருக்கும் போது தீர்ப்பு கூறக் கூடாது என்று வலியுறுத்தினார்கள். குடும்ப பிரச்சனைகள், சொந்த நெருக்கடிகள், பசி, தூக்கம், உடல் உபாதைகள் ஆகியன இருக்கும் போது இயல்பாகவே கோபம் உருவாகிவிடும் அல்லவா… எனவே தான் அவ்வாறு கூறினார்கள்.
சமூக நல்லிணக்கம் அவர்களது இலக்காக இருந்தது. அது அமைதிக்கு முக்கியம் என்பதால், அதை கட்டிக் காக்க திட்டங்களை அறிவித்தார்கள்.
தனது மதீனா ஆட்சியின் போது இதர சமூக மக்களை மதிக்கும் வகையில் மதீனா பிரகடனத்தை வெளியிட்டார்கள். அது புகழ் பெற்ற ஆவணமாகும்.
வெளிநாட்டு கிரித்தவர்கள் மஸ்ஜித் நபவி பள்ளியில் நபிகளை சந்திக்க வந்தப்போது, அதன் அருகில் ஜெபம் செய்ய இடம் ஒதுக்கி கொடுத்த வரலாற்று குறிப்பும் உண்டு.
யூதரின் பிணத்தை அவர்கள் வசிக்கும் தெரு வழியே தூக்கி செல்ல அனுமதியளித்ததோடு, அதற்கு எழுந்து நின்றும் மரியாதை செய்த பெரும் பண்பை என்னவென்று சொல்வது?
தன் கடைசி காலத்தில் தனது ஆடையை ஒரு யூதரிடம் அவர்கள் அடமானம் வைத்திருந்த செய்தியை அறிகிறோம்.
அப்படியெனில், அந்த யூதரோடு உறவு பாராட்டியதால் தானே, அச்சம்பவம் நடந்தது.?
இப்படி பிற சமூக மக்களோடு இணக்கம் பாராட்டியவராகவும் வரலாற்றில் மிளிர்கிறார்கள்.
உலகமெங்கும் இன்று போர்மேகம் சூழ்ந்து நிற்கிறது.
போர் குறித்த விதிமுறைகளை கடந்த நூற்றாண்டில் தான், ஜெனிவா நகரில் கூடி, ஐ.நா. சபை அறிவித்தது.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தான் வாழ்ந்த காலத்திலேயே அது குறித்த விதிகளை அறிவித்தார்கள்.
அதாவது போரில் சரணடைபவர்களை சித்ரவதை செய்யக் கூடாது. தூதர்களை கொல்லக் கூடாது என்றார்கள்.
மத ஆலயங்களை இடிக்க கூடாது, மத குருமார்களை, பெண்களை, முதியவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்றார்கள்.
அதோடு நிற்கவில்லை. கனி தரும் மரங்களையும், நிழல் தரும் மரங்களையும் வெட்டக் கூடாது என்றதுடன், குடிநீரிலும் விஷம் கலக்க கூடாது என்றார்கள்.
இப்படி அவர்கள் கூறியதை நினைத்தாலே, சிலிர்க்கிறது.
அதனால் தான் உலக அறிஞர்கள் அவர் வரலாற்றை படித்து வியக்கிறார்கள்.
தந்தை பெரியார் கூட அதனால் தான் நபிகள் நாயகத்தை பாராட்டினார்.
நபிகள் நாயகம் அவர்கள் பெண்களுக்கு சொத்துரிமை அளித்து, அவர்களை மிகவும் மதித்தார்கள்.
புகழ் பெற்ற ஹுதைபியா அமைதி உடன்படிக்கையின் போது, நபியின் தோழர்களிடம் விரக்தியும், பதற்றமும் நிலவியது.
அப்போது ஒரு கட்டத்தில் தனது மனைவி உம்மு சலிமாவின் (ரலி) அவர்களின் ஆலோசனையின் படியே நபிகள் நாயகம் செயல்பட்டார்கள்.
அதனால் சகஜ நிலை உருவாகி, அவரது தோழர்களின் மனம் மாறியது.
தன் மனைவியின் ஆலோசனையை மதித்ததன் மூலம் பெண்ணியத்தை மதித்த ஒரு தலைவராகவும் உயர்ந்து நிற்கிறார்.
இப்படி அவர்களைப் பற்றி பேசிக் கொண்டே போகலாம்.
இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் இனி நபிகள் நாயகத்தை சகோதர சமுதாய மக்களிடம் நாம் அறிமுகப்படுத்த வேண்டும். அதை அவர்களும் விரும்புகிறார்கள். அதுவே இன்றைய அவசிய தேவையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மதினா பள்ளிவாசல் இமாம் நூர் முகமது மக்தூமி துவக்க உரையாற்றினார். ஜெனரல் பஜார் தலைமை இமாம் இனாமுல் ஹஸன் காஷிஃபி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில், மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம்ஷா, மாவட்ட பொருளாளர் மைதீன் அப்துல் காதர், துணைச் செயலாளர்கள் ரபிக், ஷேக் தாவூத், தர்ஹா பாரூக் மற்றும் நிர்வாகிகள் அந்தோணி ராஜ், ஜமால் முஹம்மது மற்றும் உலமா சபையை சேர்ந்த அப்துல் சலாம் ஹஜ்ரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல் ;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJKitWING
திருச்சி மாவட்டம்.