நாகையில் ரயில் போக்குவரத்து அதிகரிக்க முயற்சி எடுக்கப்படும் : மு.தமிமுன்அன்சாரி MLA உறுதி

நாகை.நவ.21.., தென்னிந்தியாவின் முதல் ரயில் தடம் பதிக்கப்பட்ட ஊர் நாகப்பட்டினமாகும். ஆங்கிலேயர் காலத்தில் தென்னிந்திய ரயில்வே கம்பனி (SIRC) நாகப்பட்டினத்தில் பதிவு செய்யப்பட்டு 1861 முதல் 1875 வரை இயங்கி வந்தது.

இந்தியாவின் முதல் அகலப் பாதையும் இங்கு தான் அமைக்கப்பட்டிருந்தது.பிற இடங்களில் மீட்டர் கேஜ் பயன்பாடு இருந்ததால், பிறகு இதுவும் மீட்டர் கேஜாக மாற்றப்பட்டது.

தற்போது சென்னை, எர்ணாகுளம், கோவா, பெங்களுர், மும்பை ஆகிய ஊர்களுக்கு ரயில் போக்குவரத்து உள்ளது. திருச்சிக்கு 3 பாசஞ்சர் ரயில்களும், தஞ்சைக்கு ஒரு பாசஞ்சர் ரயிலும் இயங்கி வருகிறது.

காரைக்காலும், வேளாங்கண்ணியும் முக்கிய இணைப்பு மையங்களாக உள்ளது.

இந்நிலையில் நாகையில் ரெயில்களின் பயன்பாடுகளை அதிகரிக்க செய்ய வேண்டும் என நாகை – நாகூர் ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தினர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

காரைக்கால் முதல் திருச்சிக்கு காலை 6 மணிக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலும், மாலை 7 மணிக்கு அங்கிருந்து திரும்ப ஒரு ரயிலும், நாகையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ஒரு ரயிலும் விட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை அளித்தனர்.

அது போல் காரைக்கால் – பேரளம் ரயில் தட பணிகளை விரைவுப் படுத்த வேண்டும் என்றும், நாகூர் மற்றும் வெளிப்பாளையம் ரயில் நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

அவர்களிடம் பேசிய MLA அவர்கள், இக்கோரிக்கைகளை நிறைவேற்ற ரயில்வே அமைச்சர், ரயில்வே நிலைக்குழு, தென் மண்டல பொது மேலாளர் ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவதாகவும், இது குறித்து நாகை நாடாளுமன்ற உறுப்பினரிடமும் கலந்து, இணைந்து இப்பணிகளை நிறைவேற்ற ஆவணம் செய்வதாகவும் கூறினார்.

மேலும் மன்னார்குடி – கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க முயற்சி எடுத்து வருவதாகவும் கூறினார்.

வேளாங்கண்ணி – வேதாரண்யம் இடையே புதிய ரயில் பாதை அமைப்பது தொடர்பாகவும் தான் ரயில்வே நிர்வாகத்துடன் பேச இருப்பதாகவும், இதன் மூலம் வேதாரண்யம் – வேளாங்கண்ணி – நாகை – நாகூர் – காரைக்கால் – சீர்காழி வழியாக சென்னை செல்லும் புரிய ரயில் மார்க்கம் எதிர்காலத்தில் உருவாகும் என்றும், இது கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியாக அமையும் என்றும் தெரிவித்தார்.

இது குறித்து தமிழக முதல்வர் வழியாக, மத்திய அரசை வலியுறுத்த விருப்பதாகவும் கூறினார்.

இது குறித்து மாவட்ட அமைச்சர் திரு.O.S.மணியன், மற்றும் மாவட்டத்திலுள்ள சக சட்டமன்ற உறுப்பினர்களிடமும் ஆலோசனை பெற்று , முன்முயற்சிகளை தொடங்க விருப்பதாகவும் அவர்களிடம் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தெரிவித்தார்.

தகவல்,
#நாகைசட்டமன்றஉறுப்பினர்_அலுவலகம்
21-11-2019