சவால்களை எதிர்கொண்டு சரித்திரம் படைத்தவர்…

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் 
M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிகை அறிக்கை)

இந்திய அரசியலில் ஆளுமை செலுத்திய சிறப்புக்குரிய ஒரு தலைவரை இழந்து இருக்கிறோம்.’அம்மா’ என்று தமிழக மக்களால் பாசம் பொங்க அழைக்கப்பட்டவர் இப்போது நம்மிடம் இல்லை.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நீண்ட நாட்களாக வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார் என்ற செய்தி தமிழர்களை தாண்டி அனைத்து இந்திய மக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அவரது இழப்பால்,கட்சி வேறுபாடுகளையும், கருத்து வேறுபாடுகளையும் தாண்டி அனைவரும் கடும் சோகத்தில் தவிக்கிறார்கள்.

இந்திய திருநாட்டில், இந்திரா காந்திக்கு பிறகு வலிமைமிகு பெண் தலைவராக வலம் வந்தார்.

அவரது கலையுலக பயணம் அவருக்கு முகவரியை தந்தது.
அவரது அரசியல் பயணம் அதிகார வலிமையை பெற்று கொடுத்தது.

முக்கியமான காலக்கட்டத்தில் பொன்மனச்செம்மல் MGR அவர்களால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டார். ஆனால், தனக்கான  அங்கீகராத்தை அவரது அயராத போராட்டாத்தாலும், உழைப்பாலும் அவரே பெற்றார் என்பது தான் உண்மை.

தெற்கிழக்கு ஆசியா பல பெண் பிரதமர்களையும், அதிபர்களையும் உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இந்திரா காந்தி, பெனாசீர் பூட்டோ, சேக் ஹசீனா, காலிதாஜியா, சந்திரிக்கா பண்டார நாயக்கா போன்றவர்கள் தங்கள் குடும்ப அரசியல் பலத்தால் அரசியலில் வெற்றி அடைந்தார்கள். ஆனால், இவர் தனது அறிவாலும், அயராத உழைப்பாலும் , தன் சாதூரியத்தாலும் அரசியலில்  வெற்றி அடைந்தார்.

புறக்கணிப்புகள், அவமானங்கள், அவதூறுகள், அடக்குமுறைகள் ஆகியவற்றை எதிர்கொண்டு  அவர் அடைந்த இமாலய வெற்றிகள் ஆச்சிறியங்கள் சூழ்ந்தவையாகும்.
இவர் சந்தித்த நெருக்கடிகளை வேறு எந்த பெண் தலைவர்கள் சந்தித்து இருந்தாலும், அவர்கள் அரசியலிருந்தே ஒடி இருந்து இருப்பார்கள்.

ஆனால், இவர் சவால்களை நேரடியாக சந்தித்தார். தனது மன உறுதியாலும், அசத்திய துணிச்சலாலும் போராடினார்.

தன்னை அரசியலில்  எதிர்த்தவர்களை ஆட்டம் காண செய்த அவரது அரசியல் காய்நகர்த்தர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதே சமயத்தில் தனக்கு இன்னல் செய்தவர்களையும், ஒருக் கட்டத்தில் மன்னித்து அவர்களுக்கு அரசியல் வாழ்வுரிமைகளை கொடுத்தது அவரது பெருந்தன்மையை காட்டியது.

அவரால், அங்கீகரிக்கப்பட்ட கூட்டணி கட்சிகள், அவரது கூட்டணி தலைமையை ஏற்ற பிறகு தான் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் நுழைந்தன.

அவர் அரவனைத்த பல கூட்டணி கட்சி தலைவர்கள் அரசியல் அங்கீகாரத்தை பெற்று வளர்ந்தார்கள்.

மழைநீர் சேகரிப்பு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், போன்ற முற்போக்குதிட்டங்களும், அம்மா உணவகம், அம்மா மருத்தகம், போன்ற மனிதநேய திட்டங்களும், பெண்களுக்கும், ஏழைகளுக்கும் வாரி வழங்கிய சலுகைகளும் இந்திய நாட்டிற்கே வழிக்காட்டின.

கடந்த பல ஆண்டுகளாக, முன்பை விட அதிகமாக சிறுபான்மை மக்களின் மீது அன்பு பாராட்டினார். ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு இலவசமாக நோன்பு கஞ்சி காய்ச்ச அரிசி வழங்கியது, உலமாக்கள் ஓய்வூதியத்தை 1500ரூபாயாக உயர்த்தியது, ஜெரூசலம் சென்று வர கிருத்துவ மக்களுக்கு மானியம் வழங்கியது, ஆகியவை அவரது சிறப்புக்குரிய திட்டங்களில் குறிப்பிட்டதக்கவை ஆகும்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மீது அவர் காட்டிய அன்பு அளப்பரியது. பதிவு கூட செய்யப்படாத எங்களின் புதிய கட்சிக்கு உடனடியாக இரண்டு தொகுதிகளை வழங்க ஒப்புக் கொண்டு அவர் காட்டிய அன்பை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டோம்.

சட்டசபையில், நான் பேசும்போது அதை ரசித்து, மேஜையை தட்டி அவர் உற்சாகப்படுத்தியதை நினைக்கும் போது கண்கள் ஈரமாகிறது. என்னை அழைத்து சிறப்பாக பேசுகீறிர்கள் என்று பாராட்டிய நிமிடங்கள் நினைவுகளில் நீந்துகின்றன.

அம்மா அவர்களின் இழப்பை, மனிதநேய ஜனநாயக கட்சி தொண்டர்கள் தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட ஒர் இழப்பாக கருதுகிறார்கள்.

அவரது இழப்பை நினைத்து வாடும் அதிமுக சகோதரர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.

அவரது இழப்பால் வாடும், அனைவரின் துயரத்திலும் மனிதநேய ஜனநாயக கட்சி உணர்வுப்பூர்வமாக பங்கெடுக்கிறது.

மாண்புமிகு அம்மா அவர்களின்  சேவைகளை, பணிகளை, சிறப்புகளை..

#வரலாறு_போற்றும்..

#வருங்காலம்_வாழ்த்தும்..

என்பதில் ஐயமில்லை..

இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி.