தலாக் விவகாரத்தில் முஸ்லிம் சட்டவாரியத்தின் கருத்தை மத்திய அரசு கேட்க வேண்டும்! மஜக வேண்டுகோள்

(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., வெளியிடும் பத்திரிகை அறிக்கை)

மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தனது தோல்விகளை மறைப்பதற்கு மதவாத அரசியலை கூர்தீட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தலாக் விவகாரத்து நடைமுறை குறித்து பல்வேறு கேள்விப் பட்டியலை தயாரித்து, இதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டுமென சட்ட ஆணையம் கடந்த 7-ஆம் தேதி கூறியிருக்கிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசு இக்கருத்துகளை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்கும் என்றும் கூறியிருக்கிறது.

பல்வேறு மதங்கள், இனங்கள், சாதிகள், மொழிகள் ஆகியவற்றின் ஒன்றியமாகவே இந்திய திருநாடு பன்முகத்தன்மையோடு இயங்கி வருகிறது. ‘வேற்றுமையில் – ஒற்றுமை’ என்பதுதான் இந்தியாவின் சிறப்பம்சமாகும். இதை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவது தேன்கூட்டின் மீது கல்லெறியும் முயற்சியாகும்.

முஸ்லிம்கள் பின்பற்றி வரும் சட்ட விஷயங்கள் குறித்து இறுதி முடிவெடுக்கும் பேரவையாக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் (AIMPLB) செயல்பட்டு வருகிறது. இதில் ஜாமியத்-இ-உலமா, ஜமாத்-இ-இஸ்லாமி, அஹ்லே ஹதீஸ் உள்ளிட்ட நாடு தழுவிய இயக்கங்கள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்பு இந்திய முஸ்லிம்களின் சமுதாய குரலாக செயல்பட்டு வருகிறது.

இந்த கூட்டமைப்பு மத்திய அரசின் முடிவை எதிர்த்திருக்கிறது. இது, பொதுசிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான முன்னோட்ட முயற்சி என்றும் கண்டித்திருக்கிறது.

எனவே, இவ்விஷயத்தில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கருத்தை கேட்காமல் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று மத்திய அரசை மனிதநேய ஜனநாயக கட்சி கேட்டுக் கொள்கிறது.

இதுகுறித்து உண்மை நிலவரங்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் விளக்கும் வகையில் போராட்டங்களையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், பரப்புரைகளையும் மஜக முன்னெடுக்கும்.

இதில் மதச்சார்பற்ற மற்றும் சமூக நீதி அமைப்புகளையும், கட்சிகளையும், தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் பணிகளையும் மஜக மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A.,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
14.10.2016