நீங்காத நினைவுகள்! மஜகவின் மீது அன்புக் காட்டியவர் அம்மா…!

image

(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு)

கடந்த வருடம் இதே நாளில் (04/12/2017) சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்றிருந்தேன், அங்கு என்னோடு ஹாரூன், நாசர், மைதீன் உலவி, செல்லச்சாமி ஆகியோரும் இருந்தனர்.

மாலை 6 மணியளவில் தொலைக் காட்சிகளில் பரபரப்பான செய்தி ஒடியது. அப்பபோலோவில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வர பரபரப்பு தொற்றியது.

அந்த திருமண நிகழ்வு மாலை 7 மணியளவில் நடந்தது. அதற்கு மானாமதுரை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கென்னடி மாரியப்பன் வந்திருந்தார். கோயிலுக்கு சென்று பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு தலைமையகத்திலிருந்து உத்தரவு வந்ததாக கூறி, உடனே புறப்பட்டார்.

நேரம் ஆக, ஆக தொலைக்காட்சிகளில் விவாதங்கள் உருவாகிறது.

நாங்கள் அனைவரும் மிகுந்த கவலையடைந்தோம். தொலைக்காட்சிகள் என்னிடம் அலைப்பேசி வழியாக பேட்டி அடுத்து நேரலையாக ஒளிப்பரப்பினார்கள்.

அதுபோல பல தலைவர்களிடமும் நள்ளிரவு வரை பேட்டி எடுத்துக்கொண்டே இருந்தார்கள்.
அன்று இரவுப் பொழுது கழிந்து, காலை விடிந்ததும் பத்திரிக்கைகளிலும் இதுதான் தலைப்புச் செய்தி.

நாங்கள் பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6 அன்று போராட்டத்தை அறிவித்திருந்தோம். தமிழக முதல்வரின் உடல் நலமும், அவர் மீண்டு வருவதும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அசாதாரணமான சூழலில் ஒரு போராட்டத்தை எப்படி நடத்துவது என்று ஹாரூணின் வீட்டில் நாங்கள் 5 பேரும் அவசரமாக ஆலோசித்தோம். சக நிர்வாகிகளிடமும் “வாட்ஸ்ஆப்” குழுமத்தில் கருத்து கேட்டோம்.

எல்லோரும் ஒரு அசாதரனமான நிலையில் போராட்டத்தை ரத்து செய்யலாம் என கூறினார். அதை ஏற்று தமிழக முதல்வரின் உடல் நலன் மற்றும் மருத்துவமணை செய்திகளை கருத்தில் கொண்டு டிசம்பர் 6 போராட்டம் ரத்து என்று அறிவித்தோம்.

மஜகவை பின்பற்றி அடுத்த 1 மணி நேரத்தில் மற்ற அமைப்புகளும் ரத்து செய்தன.

நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, நான் மதுரையிலிருந்து விமானத்தில், சென்னை புறப்பட்ட தயாரானேன். இளையாங்குடியிலிருந்து மதுரை நோக்கி மைதீன் உலவி, செல்லச்சாமி ஆகியரோடு புறப்பட்டேன்.

மதுரை விமான நிலையத்தில் பீட்டர் அல்போன்ஸ், மனோகரன் MLA போன்றோரும் அதே விமானத்திற்காக காத்திருந்தார்கள். மூவரும் ஜெயலலிதா அம்மாவின் உடல்நிலை குறித்து கவலையோடு பேசிக் கொண்டோம்.

விமானம் சென்னையில் தரையிறங்கி, வெளியே வந்ததும் பத்திரிக்கையாளர்கள் அங்கு குழுமியிருந்தனர். முதல்வர் அம்மாவின் உடல் நலன் தேற பிராத்திப்போம் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

நேரே அப்போலோ மருத்துவமணைக்கு சென்றேன். வழியெங்கும் மக்கள் கண்ணீரோடு கதறிக் கொண்டிருந்தார்கள். அப்போலோவை சுற்றிலும் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் கூடியிருந்தனர்.

அப்போலோவில் நுழைந்ததும் இரண்டு அல்லது நான்காம் மாடி என நினைக்கிறேன். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக தலைவர்கள் சோகத்தோடு நின்றிருந்தார்கள்.

சரத்குமார், தனியரசு, கருணாஸ் போன்ற தோழமை தலைவர்களும் இருந்தார்கள். மருத்துவமனையில் நிலைமை மோசாமாக இருப்பதை உணர முடிந்தது.

மாலை 4 மணியளவில் சசிகலா அம்மையார் அவர்கள் கலங்கிய கண்களுடன், அம்மா அவர்கள் இருந்த பகுதிக்கு சென்றுவிட்டு வந்தார்.

சற்று நேரத்தில் DGP, கமிஷ்னர், உளவுத்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர் நிலைமை பரபரப்பானது.

நானும், சரத்குமார், தனியரசு, கருணாஸ் ஆகியோரும் மிகுந்த வேதனையோடு அம்மா அவர்கள் இருந்த அறைக்கு வெளியே நின்றிருந்தோம்.

5 மணி அளவில் அமைச்சர்களும், அதிமுக தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அந்த பகுதியில் கூட, நாங்கள் திடுக்கிட்டோம், சரத்குமார் அழுதே விட்டார்.

கொஞ்ச நேரரத்தில் அதாவது மாலை 5:30 மணி இருக்கும் என நினைக்கிறேன். தந்தி டிவியில் முதல்வர் ‘ஜெயலலிதா உயிரிழந்தார்’ என்ற செய்தி வெளியானது. எல்லோரின் அலைப்பேசிகளும் அலறின. மருத்துவமனையில் அதே போன்ற நிலை தான் இருந்தது. ஆனால், அதிகாரபூர்வமாக எதுவும் அறிக்கப்படவில்லை. ஆனால் பலரும் கதறினர்.

சற்று நேரத்தில் அந்த செய்தி தவறு என தந்தி தொலைக்காட்சியில் பாண்டே அவர்கள் மறுத்துவிட்டார். அதன் பின்னால் பதட்டம் குறைந்தது. ஆனால், அவநம்பிக்கை நீடித்தது.

இரவு 9 மணி இருக்கும் நானும், தனியரசும், அங்கிருந்து புறப்பட்டு விடுதிக்கு வந்தோம். தொலைக்காட்சிகளை பார்த்தப்படியே இருந்தோம்.

இரவு 11 மணிக்கு அப்போலோவிலிருந்து போயஸ் தோட்டம் செல்லும் வழியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதாக செய்தி வெளியானது. நள்ளிரவு 11:30 க்கு முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தாக தொலைக்காட்சிகள் சோக செய்தியை கூறின. தமிழக வரலாற்றில் துயரங்களை வெளிப்படுத்திய செய்திகளில் அதுவும் ஒன்று. அவர் இறந்தது டிசம்பர் நான்காம் தேதியா ? அல்லது ஐந்தாம் தேதியா ? என்ற குழப்பம் உறுத்தியது. கண்கள் கலங்கியது.

விடுதியில் இருந்த நானும், தனியரசும் உடனடியாக புறப்பட்டு போயஸ் தோட்டம் சென்றோம். எங்களுக்கு முன்பாகவே கருணாஸ் அங்கு வந்துவிட்டார்.

கடுமையான கூட்டம் கண்ணீரோடும், கதறலோடும் நின்றிருந்தது. நாங்கள் அந்த வீதிக்குள் செல்லும்போது ஆழமான வேதனைகள் வாட்டியது.

ஒரு அதிமுக தொண்டர் என்னைப் பார்த்ததும் “அன்சாரி பாய்… நீங்க சபையில் பேசும்போது அம்மா… குலுங்கி குலுங்கி சிரிப்பாங்களே பாய்…” அம்மா இப்ப போய்ட்டாங்களே… என கதறினார். எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது. பல அதிமுகவினர் எங்களின் கரத்தை பிடித்து அழ தொடங்கி விட்டனர்.

அம்மாவின் உடல் போயஸ் தோட்டத்திற்கு வருவது தாமதாமானது. அதனால் அருகில் நண்பர் ஒருவரின் வீட்டில் நானும், தனியரசும், கருணாசும் கொஞ்ச நேரம் இருந்தோம். அந்த நண்பர் யாசீன் எங்களோடு சோகத்தை பகிர்ந்துக்கொண்டிருந்தார்.

நள்ளிரவில் அவரது உடல் 75 நாட்கள் பரபரப்போடு இருந்த அப்போலோ மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் புறப்பட்டது.

நாங்கள் போயஸ் தோட்ட வாசலில் காத்திருந்தோம். அங்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்தோம்.

ஒரு எழை தாய் அங்கு அம்மா…அம்மா…என்று கதறிக் கொண்டிருந்தார். யார் என்று விசாரித்தோம். ஜெயலலிதா அம்மா அவர்கள் வாகனத்தில் செல்லும்போது அந்த தாய் சாலையில் நின்று எப்போதும் கையசைப்பாராம்! ஒரு நாள் அவரை போயஸ் வீட்டுக்கு அழைத்து வேண்டிய உதவிகளை அம்மா செய்து அனுப்பினாராம் ! இந்த ஏழையை கெளரவித்த அம்மாவின் மரணச் செய்தியை தாங்க முடியாமல் அவர் நள்ளிரவின் அமைதியை கிழிக்கும் வகையில் அழுதுக்கொண்டிருந்தார்.

அம்மாவின் உடல் போயஸ் இல்லம் வந்ததும் எல்லோரும் கலங்கினோம்.

அந்த வீட்டுக்கு வந்து போன நினைவுகள் வாட்டியது. இனி எப்போது வரப்போகிறோம்? ஏன் வரப்போகிறோம்? என மனம் வலிக்க, வலிக்க அங்கிருந்து புறப்பட்டோம். அப்போது மணி விடிகாலை மூன்று.

அடுத்த நாள் விடிந்தது. நாடெங்கும் அம்மா அவர்களின் ஆளுமை குறித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

கட்சிகளை தாண்டிய சோகம் வெளிப்பட்டது. திமுக நண்பர்களே கலங்கினார்கள்.”அம்மா நீங்கள் ஆளக்கூடாது என்று தானே சொன்னோம்… வாழக் கூடாது என்று சொல்லவில்லையே என ‘வாட்ஸ் அப்’ களில் உருகினார்கள்.

மக்கள் சாரை, சாரையாய் ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்தினார்கள். அவரது மரணம் தமிழ் நாட்டு மக்களை சோகமயமாக்கியது..!

நானும், கட்சி நிர்வாகிகள் ஹாரூன், தைமிய்யா, சாதிக் உள்ளிட்டோர்களும், தனியரசும் ராஜாஜி ஹாலுக்கு வந்தோம். அங்கு ம.நடராஜன், கனிமொழி, பொன்.ராதாகிருஷ்ணன், T.ராஜேந்தர், டாக்டர். கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பின் பகுதி ஹாலில் உட்கார்ந்திருந்தனர். எங்களோடு நெரிசலில் CPM தலைவர் தோழர். G.ராமகிருஷ்ணன் அவரது சக தோழர்களோடு வந்திருந்தார்.

அப்போது தான் பிரதமர் வந்துவிட்டு போனார். நானும், தனியரசும், சரத்குமாரும் அவரது உடல் அருகில் உட்கார்ந்திருந்த அமைச்சர்கள் உள்ளிடோர்களோடு உட்கார்ந்தோம்!

ஒரே நாளில் சென்னையை நோக்கி மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்திய வண்ணமிருந்தனர். நாடு முழுக்க மத்திய, மாநில அரசுகளின் சார்பில் அஞ்சலி செலுத்த தலைவர்களும், அமைச்சர்களும் வந்துக் கொண்டேயிருந்தனர்.

கடைசியாக ராகுல் காந்தி வந்தார்!

4 மணியளவில் அம்மாவின் உடல் இராணுவ அரச மரியாதையுடன் பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டது. அந்த நேரத்தில் உ.பி.முதல்வராயிருந்த அகிலேஷ் யாதவ் வந்து சேர்ந்தார்.

நான், உணவுத்துறை அமைச்சர் திரு.காமராஜ் அண்ணன், திரு.ம.நடராஜன் அண்ணன், திரு.திவாகரன் அண்ணன் ஆகியோருடன் பீரங்கி வண்டிக்கு முன்பாக நின்றுக்கொண்டிருந்தேன்.

அப்போது “அம்மாவுக்கு மிகவும் பிடித்த இளம் தலைவர் என்று” என்னை அமைச்சர் காமராஜ் அவர்கள் திரு.நடராஜனிடம் கூற அருகில் நின்ற திவாகரன் “உடனே இவரது, பேச்சு அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.

அப்போது ம.நடராஜன் அவர்கள் “நீங்கள் அவர்களுக்கு ரொம்பவும் வேண்டியவங்க…எனவே ஊர்வலத்தில் முன்வரிசையில் அமைச்சர்களோடு செல்லுங்கள்” என்றார்.

ஊர்வலம் செல்லும் வழியெங்கும் அனைத்து தரப்பு மக்களும் கூடி நின்று அழுதனர். மெரினாவில் MGR சமாதிக்குள் நுழைய முடியவில்லை. அவர் அடக்கம் செய்யப்படும் இடத்தில், எங்களுக்கான இருக்கையில் யார், யாரோ உட்கார்ந்திருந்தனர்.

துப்பாக்கி குண்டுகள் முழங்க அம்மாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தமிழ்நாடு, நாடு போற்றும் வலிமையான ஒரு தலைவரை இழந்த வலியை உணர்ந்தது.

நானும், தனியரசும், கருணாசும் அங்கு உட்கார்ந்திருந்த அமைச்சர்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு, விடுதியை நோக்கி நடந்தே சென்றோம்.

அம்மா அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் மீது மிகுந்த மரியாதை காட்டினார். என் மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பு காட்டினார் அவற்றை மறக்க முடியவில்லை. அவரின் இழப்பை மஜக உணர்கிறது. அவர் மஜகவுக்கு கொடுத்த அரசியல் அங்கீகாரத்திற்க்காக என்றென்றும் அவரை நன்றியுடன் நினைவு கூறுவோம்.

அம்மா இப்போது எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார். எப்படி தெரியுமா? “அம்மா மட்டும்…இந்நேரம் இருந்திருந்தால்…என்ற வாசகத்தின் மூலமாக!

இவண்,

#M_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
04/12/2017.