ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்…. அமைதி நிலவட்டும்! சகோதரத்துவம் ஒங்கட்டும்! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை….

200 கோடி மக்களால் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனும் ஈகைத்திருநாள் உலகெங்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வெவ்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகள் பேசும்; பல்வேறு இனங்களை சேர்ந்த மக்கள்; ஒரே இறைவன் என்ற கோட்பாட்டுடன் கொண்டாடி மகிழும் திருநாள் இது.

புனித ரமலான் மாதம் முழுதும் இறைவனின் திருப்தியை பெற நோன்பிருந்தவர்கள்; நிறைவாக, நீலவானில் வெண் கீற்றாய் தென்படும் தலைப்பிறையை பார்த்ததும் அடையும் பேரானத்தத்திற்கு அளவேயில்லை.

இணையற்ற இறைவனை; தொழுது வணங்கிய இன்ப பொழுதுகளில் மூழ்கி திளைத்தவர்கள்; இப்பெருநாளை முன்னிட்டு கரங்கள் சிவக்க ஏழை-எளியோருக்கு வாரி வழங்கி மகிழும் பொதுவுடைமை சிந்தனைகள்; இத்திருநாளின் சிறப்புகளை அலங்கரிக்கின்றன.

இந்த இனிய நாளில் பாலஸ்தீன பூமியாம் காஸாவின் மீதான இஸ்ரேலிய தாக்குதலும், ரஷ்யா – உக்ரேன் போரும் முடிவுக்கு வரவும், உலகமெங்கும் அமைதி நிலவவும் பிரார்த்திப்போம்.

நம் இந்திய திருநாட்டில் சகோதரத்துவம் ஒங்கவும், நல்ல ஆட்சியாளர்கள் அதிகாரம் பெறவும் உறுதி ஏற்போம்.

அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி,
தலைவர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
10.04.2024.