அன்பு சகோதரி இரோம் சர்மிளாவுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்..

தொடக்கத்தில் இந்த நூற்றாண்டின் இரும்பு பெண்மணியாக தன்னை உலகுக்கு நிரூபித்துக்காட்டிய வீராங்கனைதான் இரோம் சர்மிளா.

இந்தியாவின் கிழக்கு வாசல் எனப்படும். அழகிய பூமியாம் மணிப்பூரில் 1972 ல் பிறந்தவர். இன்று மணிப்பூரின் மாணிக்கமாக அம்மக்களால் பெருமையுடன் பேசப்படுகிறார்.

மண்ணுரிமை உணர்வுகளும், முற்போக்கு சிந்தனைகளும் நிரம்பி தழும்பும் வட கிழக்கு மாநிலங்களில் காஷ்மீரைப் போல இந்திய அரசுப் படைகளின் வரம்பு மீறிய அராஜகங்களும், கற்பழிப்புகளும் நடைபெறுகின்றன. தங்கள் மண்ணை இந்தியா ஆக்கிரமிப்பதாகவும், தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்றும் 50 ஆண்டுகளுக்கு மேலாக வட கிழக்கு பகுதிகளை 7 மாநிலங்களிலும் விடுதலை போராட்டங்கள் வெடித்தன.

அஸ்ஸாம், திரிபுரா, மேகலயா,மிசோரம், அருணாச்சல், ஆகிய மாநிலங்களில் போராட்டங்கள் தனித்து இந்திய ஒன்றியத்தோடு அம்மக்கள் பயணப் படுகிறார்கள். எனினும் நாகலாந்திலும், மணிப்பூரிலும் விடுதலைப் போராட்டங்கள் மக்கள் உணர்வுகளோடு கலந்து தொடர்கின்றன.

தேசபக்தி என்ற பெயரிலும், பொது ஒற்றுமை என்ற பெயரிலும் தங்கள் உண்மையான வரலாறும், நீதிகளும் கொல்லப்படுகின்றது என போராட்டக் குழுக்கள் கூறுகின்றன.

தேசபக்திக்கு முன்னால் உண்மைகளை பேசக்கூடாது என்பது தான் அரசு நீதியாக உலகம் முழுக்க பார்க்கப்படுகிறது. பலுச்சி மக்களின் உணர்வுகளை பாகிஸ்தானும், குர்து மக்களின் உணர்வுகளை துருக்கியும், ஈழத் தமிழர்களின் உணர்வுகளை இலங்கையும் இப்படி தான் நசுக்குகின்றன.

இந்நிலையில் இரோம் சர்மிளாவின்  போராட்டம் உலக விடுதலைப் போராட்ட களங்களில் முற்றிலும் மாறுபட்ட வரலாறாக பதிவாகி இருக்கிறது.

02/11/2000  அன்று மணிப்பூரின் ‘கொடைக்கானல்’ எனப்படும் தலைநகர் இம்பாலில் இந்தியப் படைகள் காத்திருந்த அப்பாவி மணிப்பூரிகள் மீது கண்மூடித்தனமாக தாக்கியதில் 10 பேர் தியாகிகளானார்கள். ஏற்கனவே இந்திய ராணுவம் மணிப்பூர் சகோதரிகளை கற்பழிக்கிறார்கள் என்ற குமுறலில் இருந்த இரோம் சர்மிளாவுக்கு இச்சம்பவம் பேரதிர்ச்சியை கொடுத்தது.

இச்சம்பவம் நடந்து இரண்டு நாள் கழித்து  04/11/2000  அன்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். அவரை கைது செய்தது மணிப்பூர் மாநில அரசு. திடீரென தலைமறைவாகி டெல்லியில் அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்த போதுதான் மணிப்பூரில் நடைபெறும் அரசு வன்முறைகள் நாடு முழுக்க தெரியத் தொடங்கியது.

1 மாதம் 1 வருடம் என தொடர்ந்து 16 ஆண்டுகளாக அவர் உண்ணாவிரதம் தொடர்வது உலகையே குலுக்கியது. வலுக்கட்டாயமாக மூக்கு வழியே திரவம் ஏற்றப்பட்டு  ‘அரசு உதவியுடன்’ அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.

அவரது ஒரே கோரிக்கை “ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை”(AFSPA) மணிப்பூரில் திரும்ப பெற வேண்டும் என்பதுதான். இதே முழக்கம் தான் அவர் மீதும் எதிரொலிக்கிறது.

ஆனால் பூலோக அரசியலில், ராஜதந்திரம், காட்டிய தேசபக்தி ஆகியவற்றை முன்னிறுத்தும் அரசுகள் எப்படி இதை ஏற்கும்.

விளைவு 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் அவர் உடல் உறுப்புகள் மோசமாக சேதமடைந்துள்ளது.

இந்நிலையில்தான் அவர் தனது உண்ணாவிரதத்தை கை விட முடிவு செய்துள்ளார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதா? இல்லை. இந்த அரசிடம் அதை எதிர்பார்க்க முடியாது. என அவர் 16 ஆண்டுகால தியாக போராட்டத்திற்குப் பின்னர் உணர்ந்திருக்கிறார்.

ஆம்! அவர் போராட்ட வழி முறையை மாற்றியிருக்கிறார். நாளை ஆகஸ்ட், 9, 2016 அன்று 16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தை கை விட்டு , தேர்தல் அரசியலில் களமிறங்கி தன் குரலை உயர்த்தப்போவதாக அறிவித்திருக்கிறார். திருமணம் செய்துக் கொள்ளவும் முடிவு செய்திருக்கிறார்! அவரது முடிவுக்கு நமது புரட்சிகர வாழ்த்துக்களை சொல்வோம்!
https://m.facebook.com/needhiyinpakkam/

தங்கள் புதல்வியின் முடிவை மணிப்பூர் மக்கள் வரவேற்கிறார்கள். தங்கள் உரிமைக் குரல், தங்களின் திருமகள் புதிய களத்தில் முன்னெடுக்கப் போகிறார் என கொண்டாடுகிறார்கள்.

விடுதலை முழக்கத்தில் சமரசம் ஆகாதவர்கள் இதில் கருத்து முரண்படலாம். இருக்கும் அரசியல் சூழலில், தன்னாட்சி உரிமையுடன் இந்திய இறையாண்மைக்கு ஏன் உழைக்கக் கூடாது? என்று கேட்கும்  இரோம் சர்மிளாவின் முடிவே சரியானதாகும்.

அவர் தேர்தல் களம் காண வேண்டும். அவரை அரசியல் கட்சிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 16 ஆண்டு காலம் தன்னையே தியாகம் செய்து அவர்  நடத்திய போராட்டம் , புதிய பயணத்தில் செல்லட்டும்.

        அன்பு சகோதரியே…
        நீ அடக்குமுறையை
        திணர வைத்த வீராங்கனை!
        டெல்லியை நடுங்க வைத்த
        ஒற்றை தீக்குச்சி!
         மண்ணுரிமை போராட்டங்களுக்கு
         நீ ஒரு உந்து சக்தி!
         ஜனநாயகத்திற்கு
         நீ தான் இனி பேராசிரியை!

புரட்சிகர வாழ்த்துகளுடன்..

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி.