நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை கொண்டது. பல மதங்கள் , இனங்கள் , சாதிகள் , மொழிகள் ஆகியன நமது நாட்டின் ஜனநாயக தன்மையையும் , பன்முக கலாச்சாரத்தையும் வெளிக்காட்டுகிறது .
இத்தருணத்தில் சிறுபான்மை சமுதாய மக்களும் , பெரும்பான்மை சமூக மக்களும் கைக்கோர்த்து வாழ்வது நமது நாட்டின் சிறந்த பண்பாடாக பின்பற்றப்படுகிறது . இதை வலிமைப்படுத்தும் வகையில் ஒருவர் மீது ஒருவர் அன்பை பாராட்டும் முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் .
அந்த வகையில் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் இஃப்தார் விருந்து கலாச்சாரத்தை ரமலான் மாதங்களில் தொடங்கி வைத்தார் . நோன்பிருக்கும் முஸ்லிம் சமுதாய மக்களுடன் , பிற மக்களும் கைக்கோர்க்கும் இனிய நிகழ்வுகளாக அவை தொடர்கின்றன .
வட இந்தியாவில் பிறர் முஸ்லிம்களுக்கு இஃப்தார் விருந்துகளை அளிக்கிறார்கள் . தமிழ்நாட்டில் அதிமுக தலைமை அதை பின்பற்றுகிறது .
ஆனால் , இங்கு பெரும்பாலும் முஸ்லிம்களே இஃப்தார் நிகழ்வுகளை முன்னெடுக்கிறார்கள் . எப்படியோ , இவை இணக்கத்தையும் , புரிதலையும் தரும் நிகழ்வுகள் என்பதால் அவை யாவும் வரவேற்கப்படுகிறது .
அந்த வகையில் முஸ்லிம்கள் இந்த ரமலானில் தங்கள் வீதிகளிலும் , அடுக்குமாடி குடியிருப்புகளிலும் வசிக்கும் சகோதர சமுதாய மக்களுக்கு நோன்பு கஞ்சியை அவர்களது வீடுகளுக்கு கொடுத்து அனுப்பி , விருந்தோம்பல் பண்பையும் , அன்பையும் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பது விருப்பமாகும் .
கடந்தாண்டு இதை நான் , சமூக இணய தளங்களின் வழியே வேண்டுகோள் விடுத்தேன் . அது நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது . இதை பலரும் அமல்படுத்தினார்கள் . அது பெரும் நல்லுறவுக்கும் , நட்புக்கும் வழி வகுத்ததாக சொன்னார்கள் .
இணக்கத்தை ஏற்படுத்துபவர் உங்களின் சிறந்தவர் என திருக்குர் ஆன் கூறுகிறது .
அந்த வகையில் இந்த ரமலானிலும் அப்பணி தொடரட்டும் . ரமலானின் கடைசி நாட்களில் இருக்கும் நிலையில் ஜூலை 3 மற்றும் 4 தேதிகளில் இப்பணியை முஸ்லிம்கள் தமிழகத்திலும் , புதுச்சேரியிலும் முன்னெடுக்க வேண்டும் என விரும்புகிறேன் .
இதில் தொண்டு இயக்கங்கள் , ஜமாத்துக்கள் , தனிநபர்கள் , சமூக ஆர்வலர்கள் என யாவரும் பங்கேற்கலாம் . உங்களின் இம்முயற்சி சமூக நல்லிணக்கத்திற்கு துணை நிற்கும் . இவை இறைவனின் வாழ்த்துக்குரிய பணிகளில் ஒன்று என்பதையும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன் .
அன்புடன்
M.தமிமுன்அன்சாரிMLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி